செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ஆ.ராசா நள்ளிரவில் தர்ணா ! அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? மேட்டுப்பாளையத்தில் பதட்டம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக கூறி ரகளையில் ஈடுபட்டு வரும் தொகுதியாக மாறியிருக்கிறது ஆ.ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதி. இதன் உச்சகட்டமாக திங்கட்கிழமை நடுஇரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ராசாவே களத்தில் இறங்கி ரகளை மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மக்களவைக்குள் வருவது மேட்டுப்பாளையம் பகுதி. இந்த நகரப்பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் 112 ஆம் எண் அறையை திங்கட்கிழமை 9 மணிக்கு எடுத்து தங்கியுள்ளார் நீலகிரி அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளரும், மேலவை எம்.பியுமான ஏ.கே.செல்வராஜ். அதையடுத்து தி.மு.கவின் மேட்டுப்பாளையம் தி.மு.க நகரச்செயலாளர் அமீது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 11 மணி வாக்கில் 112ம் அறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கப்படிருக்கிறது. அதை சோதனையிட வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அறையில் இருந்த ஏ.கே.செல்வராஜ் மற்றும் அ.தி.மு.கவினர் அப்படியெல்லாம் எதுவும் இல்லை; வேண்டுமானால் சோதனையிட்டுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் வர, அந்த 1 மணி நேர இடைவெளியில் தி.மு.கவினர், அ.தி.மு.க வினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து விட இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
திரும்பின பக்கமெல்லாம் இருதரப்பும் எதிரெதிரே கோஷம் இட்டுக்கொள்ள கூடுதல் போலீஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். தேர்தல் அதிகாரிகள் சோதனையிட சாவி கேட்டபோது அதற்குள் தி.மு.வினரும் வருவதாக அடம்பிடிக்க, அது கூடாது. தேர்தல் அதிகாரிகள், செய்தியாளர்கள் மட்டும் செல்லலாம் என்று தெரிவித்ததோடு சாவியை லாட்ஜ் பொறுப்பாளரிடம் கொடுத்துவிட்டார் செல்வராஜ்.
தொடர்ந்து தி.மு.க மேட்டுப்பாளையம் முன்னாள் எம்.எல்.ஏ அருண்குமார் மேலும் ஒரு கூட்டத்துடன் அங்கே வர மேலும் மோதலுக்கான சூழல் ஏற்பட்டது. இதனால் தி.மு.கவினரை வெளியே அனுப்பி விடுதியின் முன்பக்கக்கதனவ போலீஸார் சாற்றி வைக்க, அதை தி.மு.கவினர் தள்ளி மோத, அதற்கு எதிர்புறத்தில் அ.தி.மு.கவினர் மோத இருதரப்புக்கும் கைகலப்பு ஆகிற அளவு சென்றுவிட்டது. எனவே போலீஸார் 12.15 மணி வாக்கில் தடியடி பிரயோகம் செய்ய இருதரப்புக்கும் அடி விழுந்தது.
தொடர்ந்து விடுதியின் கதவு பூட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.கவினரும், தி.மு.கவினரும் சுமுகமான சூழல் ஏற்பட்டு ஒழுங்குக்கு வரவிருந்த நேரத்தில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா காரில் வந்திறங்க, அவர் பின்னாலேயே வெவ்வேறு கார்களில் அவரது பரிவாரங்கள் 20க்கும் மேற்பட்டோர் வந்ததோடு முஷ்டியை மடக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, நாக்கை மடக்கி கடித்து போலீஸாரை தள்ளிக்கொண்டு கைகலப்பில் இறங்கிவிட்டனர்.
இதனால் மேலும் டென்ஷன் கூடி விட்டது. போலீஸ் படை இருதரப்பையும் பிரித்து கேட்டுக்கு வெளியேயும், உள்ளேயும் நிறுத்தி வைக்க, வாசல் முன்பு இரவு 1.45 மணிக்கு ஆ.ராசா தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. தொடர்ந்து ராசாவிடம் போலீ்ஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சமாதானப்பேச்சு வார்த்தையில் ஈடுபட, ‛அந்த 112 ஆம் எண் அறையை ஏன் திறக்க மாட்டேங்கறீங்க. எங்க முன்னிலையில் ஏன் சோதனை நடத்த விடமாட்டேங்கறாங்க. என் வீட்டை, நேற்று முன்தினம் நாங்கள் தங்கியிருந்த லாட்ஜை இதே அ.தி.மு.ககாரங்க முன்னிலையில்தானே சோதனை போட்டீங்க. அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? வேணும்ன்னா அந்த 112 எண் அறையை பூட்டி சீல் வையுங்க. தேர்தலுக்கு பிறகு திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம்!’ என்றெல்லாம் கோரிக்கை வைத்தார். அதை கேட்டு அ.தி.மு.கவினர் கொதித்துப்போயினர்.
இவங்க அராஜகத்திற்கு ரவுடித்தனத்திற்கு பயந்துகிட்டு அதை சீல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.! என்று பதிலுக்கு பேச ஆரம்பித்தனர். இறுதியாக பின்னிரவு 3.45 மணிக்கு இருதரப்பையும் சமாதானப்படுத்தி அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் புடைசூழ அந்த 112 ஆம் எண் அறை சோதனையிடப்பட்டது. கடைசியில் அந்த அறையில் ஒன்றுமில்லை. 4 மணிக்கு மேல் இருதரப்பும் கலைந்து சென்றனர். என்றாலும் இருதரப்புக்கும் எந்த நேரமும் மோதல் ஏற்படலாம் என்று சூழல் நிலவுவதால் கோவை எஸ்.பி சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஆயுதப்படை போலீசார் மேட்டுப்பாளையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக