புதன், 30 ஏப்ரல், 2014

ஏழை மக்களின் வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் திட்டம்: அரசு ஆய்வு

எரிபொருள் பயன்பாட்டிற்காக இந்தியாவில் தற்போது 59 மில்லியன் டன் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகின்றது. இது இங்கு உபயோகப்படுத்தப்படும் டீசலைவிட சற்றே குறைவான அளவாகும்.கடந்த 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி 47 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவர்களின் பயன்பாட்டிற்காக மானிய விலையில் அளிக்கப்படும் இந்த எண்ணெயில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிக பணத்திற்காக கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றது. இதனைத் தடுக்கவும், இதற்கான அரசு மானிய ஒதுக்கீட்டு செலவைக் குறைக்கவும் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணையை உபயோகிக்கும் பெரும்பான்மை வீடுகளில் சோலார் விளக்குகளைப் பொருத்தும் திட்டத்தை அரசு முன்வைத்துள்ளது.


இந்தியாவின் பெரும் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஜிஏஐஎல், ஆயில் இந்தியா மற்றும் எண்ணெய் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்தத் திட்டம் குறித்து இந்த மாத ஆரம்பத்தில் அமைச்சகத்தின் தரவு நிர்வாக மையமான பெட்ரோலியம் திட்டமிடல் பகுப்பாய்வு மையத்தில் ஆலோசனை செய்தனர்.

ஐஐடி- பாம்பே நிறுவனத்தில் சோலார் விளக்குகளைப் பொருத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்த எண்ணத்தை வெளியிட்டது. ஐஐடி மூலமாகவோ அல்லது எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே செயல்படுத்திவரும் தனித் திட்டத்தின்மூலமாகவோ இந்த ஏற்பாடுகள் செய்துதரப்படும்.

வருடத்திற்கு 1000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ள இதற்கான செலவுத்தொகை சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து செலவழிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே டெல்லியில் வாழும் ஏழை மக்களுக்காக சமையல் எரிவாயு இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து அங்கு மண்ணெண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக