வியாழன், 24 ஏப்ரல், 2014

ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.


வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்!

வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!
என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையின் முன்பு 21.04.2014 காலை 10.00 மணியளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் சார்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம் அவர்களின் தலைமையில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசும் போது “ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உடனே முடிக்கவேண்டும் என்று லோதா தலைமையிலான அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்தது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் 3 வாரம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கிய சௌகான் – தலைமை நீதிபதி சதாசிவத்தின் நெருங்கிய நண்பர். நீதியரசர் சதாசிவத்தின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பவர். எனவே இந்த 3 வார காலத்தடைஎன்பது “ஜெ”க்கு வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, ஜெ-யால் வாங்கப்பட்ட தீர்ப்பு. நீதித்துறை செல்லரித்துப் போய்விட்டது.
நீதிக்குப் புறம்பான தீர்ப்பால் நீதித்துறை அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மாற்ற நாம் தான் போராட வேண்டும்” எனக் கூறினார்.
சமநீதி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகவேல் பேசும் போது “ஏமாற்றமடைந்த மக்களின் இறுதிப் புகலிடமாக நீதிமன்றங்கள் தான் இருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதிகளின் அணுகுமுறைகள் படுகேவலமாக இருக்கிறது. கோடிக் கணக்கான ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெ க்கு நீதிமன்றம் துணை போவது கேவலமானது.
தலைமை நீதியரசர் சதாசிவம், பொதுமேடையில் 3 பேரின் விடுதலையை பற்றிப் பேசியது, நீதிமுறைக்குப் புறம்பானது.ஜெயாவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவாக நடக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது. ஜெ-யின் சொத்துக்குவிப்பு வழக்கிலும் நீதியரசர் சதாசிவம் கேவலமாகவே நடந்து வருகிறார். வழக்கை விரைந்து முடிப்பதற்கு மாறாக, வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெ-க்கு நீதித்துறை துணைபோவது கேவலமாகும். மனிதஉரிமை பாதுகாப்புமையம் சரியான நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள்” என்று பேசினார்.
சமநீதி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்கள், “வழக்குகளை விரைவாக முடிக்கச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் ஜெ சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும் வழக்கை எப்படியெல்லாம் நீட்டிக்கமுடியும் என்று யோசித்துச் செயல்படுகிறது” என்று உச்சநீதிமன்றத்தின் கேவலமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் பேசும் போது, ”1998- லிருந்து, ஜெ யின் சொத்துக்குவிப்பு வழக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீண்டு கொண்டே இருக்கிறது. இதேமுறை மற்ற வழக்கிலும் கையாளப்படுமா? கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, 12 ஆண்டுகள் சிறையில் இருந்தனர். ஆனால் ஜெ வழக்கில் மட்டும், ஜெ சொல்வதையெல்லாம் நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. விரைந்து வழக்கை முடிக்க நீதிமன்றம் யோசிக்கிறது. இப்படிப்பட்ட நிலையை மாற்ற HRPC போன்ற அமைப்புகளின் போராட்டங்களால் மட்டுமே முடியும்.” என்று பேசினார்.
வழக்கறிஞர் அறவாழி பேசும் போது, “உச்சநீதிமன்றம் அல்ல உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்றே சொன்னார் பெரியார். அது மிகச் சரிதான். ஜெ க்கு காட்டப்படும் இந்தச் சலுகைகளை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் மீது இந்த நீதிமன்றங்கள் காட்டுமா? இது சாதிய அமைப்பு முறைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜெயின் மீது காட்டப்படும் பரிவுக்குக் காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பது தான். இதை சட்டசபையிலேயே பேசியவர் ஜெயலலிதா. இதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த சாதியக் கட்டமைப்பை தகர்த்தெறிய தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டத் துணைத்தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் பேசும் போது, “உச்சநீதிமன்றம் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிவிட்டது. ஜெயின் சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிப்புக்கு பின்னால் சாதியம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் இந்த நிலையை மாற்ற முடியும்” என்றார்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலர் வழக்கறிஞர் அப்பாஸ் பேசும் போது, “17 ஆண்டுகள் இந்த வழக்கு நீடித்து இருக்கிறது. இதைக் கண்டிக்க யாருக்கும் துப்பில்லை. HRPC மட்டும் தான் துணிவோடு போராடிக் கொண்டிருக்கிறது” என்றார்.
மதுரை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞர் கண்ணன் பேசும் போது, “HRPC யின் துண்டு பிரசுரத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் உண்மையானவை. சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பெங்களூரில் தனிநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போது சென்னை உயர்நீதிமன்றம், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தது எப்படிச் சரியாகும்? இது மரபு மீறிய செயல். அரசியல் சட்டத்திற்கே புறம்பானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் கிடையாது. ஆனால் அது வழக்கை ஏற்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி அருணா ஜெகதீசன். யார் அரசு வழக்குரைஞர் தெரியாது. அவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் தெரியாது. யாரால் நியமிக்கப்பட்டார் தெரியாது. ஆனால் சொத்துக்கள் மீதான தடை நீக்கப்பட்டு விட்டது. இதை எங்கே போய் முறையிடுவது” என்று நீதித்துறையின் அவலங்களை பற்றி விளக்கிப் பேசினார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் அவர்கள் பேசும் போது, “ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ 66 கோடி ரூபாய்க்கு சொத்துச் சேர்த்த வழக்கு 1997 -ல் தொடங்கியது. இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. சட்டப்பூர்வமாகவே ஒரு வழக்கை 17 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்பதை ஜெ. நிரூபித்துள்ளார். இதை அவர் புத்தகமாக வெளியிட்டால், அது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஜெ யின் கைக்கூலியாகவே செயல்படுகிறார். உடல்நிலை சரியில்லை என்று சொல்லி வாதாட மறுத்து விட்ட நிலையில் 65,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிடுகிறார். கர்நாடக உயர்நீதிமன்றம் அதை உறுதி செய்கிறது. உச்ச நீதிமன்றத்தில் முறையிட, உச்ச நீதிமன்றமே அநீதியாக விசாரணைக்கு 3 வார காலம் இடைக்காலத் தடைவிதிக்கிறது.
தலைமை நீதியரசர் சதாசிவம், தனது எண்ணங்களை பிரதிபலிக்கும் சௌகானிடம் இந்த வழக்கை தள்ளிவிட அவர் 3 வாரம் தடைவிதித்து உத்தரவிடுகிறார். சதாசிவத்திற்கும் சௌகானுக்கும் உள்ள உறவு இந்தியா முழுவதும் அறிந்தது தான்.
வருமானவரி ஏய்ப்பு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் நான்கு மாதங்களில் வழக்கை முடிக்க ஜனவரி 30-ல் உத்தரவிடுகிறார்.ஆனாலும் ஜெயா இன்றுவரை ஆஜராகவில்லை, அதனால் ஏப்ரல் 28-ல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுகிறார் விசாரணை நீதிமன்ற நீதிபதி. உடனே அவர் மாற்றப்படுகிறார். மறுநாளே மாறுதல் ரத்து செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் ஜெ. தனது சாதிப்பாசத்தாலும் பணப்பாசத்தாலும் சாதித்துக் கொள்கிறார்.
22 நிறுவனங்களில் குவிக்கப்பட்ட ஜெ-யின் சொத்துக்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணாஜெகதீசன் உத்தரவிடுகிறார். தனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நீதிபதியின் இந்தத் தீர்ப்பு ஜெ க்கு ஆதரவானது மட்டுமல்ல வரம்பு மீறிய செயலும் ஆகும்.
ஜெ-க்காக எல்லா சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கிறது. ஜெ என்ன கேட்டாலும் செய்யக் காத்திருக்கிறது நீதிமன்றம்.
“ஜெ“ யின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி கேள்வி கேட்க துணிவில்லாத ஊடகங்கள், கருணாநிதியிடம் 2G வழக்கு பற்றி துருவி துருவிக் கேட்கின்றன. ஜெயிடம் ஏன் இதைப்பற்றி கேட்பதில்லை என்று நிருபர்களிடம் கருணாநிதி கேட்டால் அவர்கள் யாரும் பதில் சொல்வதில்லை.
ஆக நம் நாட்டில் உள்ளது ஒரு போலித்தனமான ஜனநாயகம், போலியான நீதிமன்றங்கள் இவைகளை எதிர்த்து போராட வேண்டியது இன்றைய அவசியமாகும்.
இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறையின் கீழான நீதித்துறை, தானே உருவாக்கிய நெறிமுறைகளை, மரபுகளை மீறிச் செயல்படுகிறது. அது மக்கள் மத்தியில் அப்பட்டமாக அம்பலமானாலும் அதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. அநீதிமான்கள் கூச்சநாச்சமின்றி சுதந்திரமாக திரிகின்றனர். எனவே இந்த அமைப்பே புழுத்து நாறுகிறது. இந்த ஜனநாயகம் தோல்வியடைந்துவிட்டது. நீதித்துறை ஊழல் பேர்வழிகளின் உறைவிடமாகி விட்டது. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்க வேண்டும் அதற்குப் பதிலாக 3 வாரம் விசாரணைக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரசின் ஊழல், கருணாநிதியின் ஊழல் என்று பேசிவரும் ஜெயலலிதா செய்த ஊழல் நீதிமன்றங்களால் மறைக்கப்பட்டுவிட்டதால் அவர் ஊழலற்றவராக மாறிவிட்டார்.
மேலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ராஜீவ்கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் 25-க்குள் தீர்ப்பு வழங்குவேன் என்று நீதிமன்ற மரபை மீறி பொது இடத்தில் அறிவிக்கிறார். இது தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதைக் காட்டுகிறது. இது தேர்தலில் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுவதற்கு ஜெ மட்டும் காரணம் அல்ல. இந்த மொத்த அமைப்பு முறையும் அவருக்கு ஆதரவாக செயல்படுவதையே காண முடிகிறது. ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதி என்பதை இந்த நீதிமன்றங்கள் வெளிப்படையாகவே செயல்படுத்துகின்றன. இந்த நீதிமன்றங்களில் உழைக்கும் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை. எனவே மக்கள் தங்களுக்கான நீதியை வீதியில் இறங்கிப் போராடியே பெறவேண்டும்.
ஜெயா வழக்கில் 3 வாரம் இடைக்காலத் தடை வழங்கப்பட்டதன் நோக்கம் தேர்தலுக்குப்பின் ஏற்படும் அணி மாற்றங்கள் ஆட்சி மாற்றத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த வழக்கையும் ஊத்தி மூடும் சதித்திட்டம் இதன் பின்னணியில் தெள்ளத்தெளிவாக உள்ளது,” என்று விளக்கிப் பேசினார்.
இறுதியில் ம.உ.பா.மையத்தின் மாவட்டப் பொருளாளர் மு.சங்கையா நன்றி கூறினார். வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, ஆறுமுகம், இராபர்ட் சந்திர குமார்,கருணாநிதி,ராஜசேகர்,மன்மதன்,ஒத்தக்கடை எவர் சில்வர் பட்டறைத் தொழிலாளர்கள், தோழமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். உளவுப்பிரிவு, கியூபிரிவு, உள்ளுர் போலீசு, பெண்போலீசு உட்பட ஒரு பட்டாளமே தனியாகக் கூடிநின்றது. அதிகம் பேர் கலந்து கொள்ள விடாமல் மிரட்டும் போக்காகக் காணப்பட்டது. அதையும் மீறி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்ததுடன் வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக