வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தமிழ் சினிமாவின் வருமானம், இன்றும் 80 முதல் 85 சதவீதம் தனியரங்குகளை நம்பியே

பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே?
பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படம் அரிதினும் அரிதாக
வெளிவருகிறது. அப்படியிருக்க அதுபற்றிய சொல்லாடலும் தமிழ்ச் சூழலில் அரிதாகவே இருக்கிறது.
ஆனால் இந்திப் பட உலகில் பேஷன், நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா, த டர்ட்டி பிக்சர், ஹீரோயின், காஹானி, இங்க்லிஷ் விங்கிலிஷ், இஷ்கியா, குலாப் கேங், ஹைவே, குயீன் என பல படங்கள் வெற்றி பெறுகின்றன. கான்சி, பாபீ ஜாஸூஸ், மேரீ கோம் என பல படங்கள் தயாராகி வருகின்றன. தமிழில் மட்டும் ஏன் இது நடப்பதில்லை? இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும் முன், தமிழில் வெற்றி கண்ட, பெண்களை மையப்படுத்திய படங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு சாதனைப் பட்டியல்
1938-ல் கே.சுப்ரமணியத்தின் சேவாசதனம் என்ற படம் தொடங்கி, சகுந்தலா, கண்ணகி, மீரா, மணமகள், அவ்வையார், அடுத்த வீட்டு பெண், கொஞ்சும் சலங்கை, அன்னை, நானும் ஒரு பெண், வெண்ணிற ஆடை, இதய கமலம், சித்தி, எங்கிருந்தோ வந்தாள், வெகுளி பெண், அரங்கேற்றம், சூரியகாந்தி, அவள் ஒரு தொடர்கதை, அவளும் பெண் தானே, அன்னக்கிளி, பத்ரகாளி, அவர்கள், அவள் அப்படிதான் என்று கருப்பு வெள்ளை காலத்தில் ஒரு சாதனைப் பட்டியலே போடலாம்.
சினிமா வண்ணம் பூசிக்கொண்ட பிறகு, நீயா, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னி சாட்சி, விதி, புதுமைப் பெண், சம்சாரம் அது மின்சாரம், பூவே பூச்சுடவா, சிந்து பைரவி, ஒரே ஒரு கிராமத்திலே என பல படங்கள் 1990 வரை பெண்களை மையப்படுத்தி வந்தன. இந்த நிலை 1991 முதல் மாறத் தொடங்கி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், மிருகம், பூ, ஆரோஹணம் என வெகுசில படங்களே அவ்வாறு பெண்களை மையப்படுத்தின. கடந்த 20 வருடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
தொலைக்காட்சியின் ஆட்சி
தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் பெண்களின் அனேக நேரங்களை தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துக்கொண்டன. இதனால் பெண்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது. மாலையில் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களிலும், மற்றும் உள்ள வீட்டு/அலுவலக வேலைகளிலும் பிஸியாக இருப்பதால், சினிமா அவர்களுக்கு இரண்டாம் பட்சமாகிறது. பெரிய நடிகர்கள் நடித்த, அல்லது எதிர்பார்ப்பை உருவாக்கும் படங்களை வார இறுதியில் மட்டுமே பார்க்க வருகிறார்கள்.
மேலும் கடந்த 5 வருடங்களில், புதிய படங்களைத் தொலைக்காட்சிகளில் வெளியான 100 நாட்களுக்குள்ளாகவே ஒளிபரப்ப ஆரம்பித்தவுடன் முக்கியமான / பேசப்படும் படமாக இருந்தால் மட்டுமே திரையரங்குக்கு வருவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எஞ்சிய படங்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் அநேகம் பேருக்கு வந்துவிட்டது.
மல்டிபிளக்ஸ்களும் தனி அரங்குகளும்
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களில் சராசரியாக 40 முதல் 50 சதவீதம் பெண்கள் எனவும், தனித் திரையரங்குகளுக்கு வருபவர்களில் சராசரியாக 20 25 சதவீதம் மட்டுமே பெண்கள் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. இதற்கு முக்கியக் காரணம்: மல்டிபிளக்ஸ்களுக்கு வருபவர்களில் அநேகம் பேர், சினிமா பார்ப்பதற்கு மட்டுமல்ல. குடும்பமாக வந்து, உணவு விடுதிகளிலும், கடைகளிலும் பொழுதைப் போக்கி, படத்தையும் ஒரு சிறிய அரங்கில் எல்லா வசதிகளுடன் பார்ப்பவர்கள். மேலும், மல்டிபிளக்ஸ்களுக்கு பெண்களைத் தனியாகவோ அல்லது அவர்களின் நண்பர்களுடனோஅனுப்புவதற்கு குடும்பங்களில் தயக்கம் இல்லை. ஆனால் பெண்களைத் தனியாகத் தனியரங்குகளுக்கு அனுப்பத் தயங்குகிறார்கள்.
இந்தி சினிமாவில், பெண்களை மையப்படுத்தி வரும் பல நல்ல படங்களின் வெற்றிக்கு இதே முக்கியக் காரணம். இந்தி சினிமா வெளியாகும், மும்பை, டில்லி, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், போபால், ஜெய்பூர் என பல நகரங்களை இன்று மல்டிபிளக்ஸ்கள் ஆதிக்கம் செய்கின்றன. ஐந்து வருடங்களுக்கு முன்புவரை வெற்ற பெற்ற ஓரு இந்திப் படத்திற்கு 80 சதவீத வருமானம் தனியரங்குகள் மூலமாகவும், 20 சதவீதம் மல்டிபிளக்ஸ்கள் மூலமாகவும் கிடைத்து வந்தது. தற்போது இந்த நிலைமை மாறி, இன்று 65 முதல் 75 சதவீத வருமானம் மல்டிபிளக்ஸ்கள் மூலமாகவே வர ஆரம்பித்துவிட்டது. பெண்களை மையப்படுத்தி வந்து வெற்றி கண்ட பல இந்திப் படங்களுக்கு மல்டிபிளக்ஸ் மூலம் வருமானம் 80 முதல் 85 சதவீதம் அளவிற்கு உள்ளது. பெருகிவரும் மல்டிபிளக்ஸ் களால் மிதமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 2 ஸ்டேட்ஸ் என்ற படம்கூடக் கடந்த வாரம் இந்தியா முழுவதும் 2,700-க்கும் மேற்பட்ட திரைகளில் (அதில் 75 முதல் 80 சதவீதம் மல்டிபிளக்ஸ் திரைகள்) வெளியிடப்பட்டு முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 36 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குயீன் என்ற படம் 800-க்கும் மேற்பட்ட திரைகளில் (அதில் 85 முதல் 90 சதவீதம் மல்டிபிளக்ஸ் திரைகள்) வெளிவந்து பெரும் வெற்றி கண்டது.
தமிழ் சினிமாவின் வருமானம், இன்றும் 80 முதல் 85 சதவீதம் தனியரங்குகளை நம்பியே உள்ளது. 15 முதல் 20 சதவீதம் மட்டுமே தற்போது மல்டிபிளக்ஸ்கள் மூலம் வருகிறது. மல்டிபிளக்ஸ்களின் எண்ணிக்கை பல மடங்கு தமிழ்நாட்டில் கூடினால், பெண்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் வாய்ப்பு கூடும். தொலைக்காட்சித் தொடர்களும், திருட்டு டிவிடி-களும், பெரும்பாலான பெண்களைத் திரையரங்கங்கள் வர விடாமல் செய்யும் தற்போதைய நிலை மாற, எல்லா சிறு/பெரு நகரங்களிலும் மல்டிபிளக்ஸ்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். திரையரங்குக்கு வருவது ஒரு நல்ல அனுபவமாக, குடும்பத்துடன் வந்து பொழுதுபோக்க ஒரு சரியான இடமாக வேண்டும். அத்தகைய மல்டிபிளக்ஸ் வளாகங்கள் தமிழகமெங்கும் உருவாகும்போது, இந்தி சினிமாக்கள் போல, பெண்களை மையப்படுத்தும் தமிழ் படங்களுக்கும் நல்ல வசூல் வரும் வாய்ப்பு ஏற்படும். அதுவரை, எப்போதாவது தமிழில் வெளிவரும் அத்தகைய பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களை ஆதரிப்பது நம் கடமை.
இன்று தமிழகத் திரையரங்கங்களுக்கு ஆண்களே அதிகம் வரும் காரணத்தினால்தான், அவர்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை முன்னிறுத்தும் பொழுதுபோக்கு படங்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. பார்வையாளர்களில் பெண்களின் எண்ணிக்கை கூடினால் அனைத்து விதமான படங்களும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக