சக்தி மில்ஸ் பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளில் ஒருவர் (நடுவில்) | படம்: விவேக் பேந்த்ரா
மும்பை புகைப்பட பெண் நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்,
குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்தது.
மும்பை சக்தி மில்ஸ் வளாகத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற புகைப்பட பெண்
நிருபர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, ஒரு கும்பலால் பலாத்காரம்
செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜய் ஜாதவ், (19), காசி்ம் பெங்காலி
(21), முகம்மது சலீம் அன்சாரி (28), ஆகியோர் இந்திய தண்டனை சட்டம் 376(இ)
பிரிவின் கீழ் (திரும்பவும் பலாத்கார குற்றம் புரிதல்) குற்றம்
இழைத்துள்ளவர்கள் என முதன்மை செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி
அறிவித்தார்.
சக்தி மில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த
வழக்கில் இந்த மூவரையும் குற்றவாளிகள் என ஏற்கெனவே அறிவித்து அவர்களுக்கு
நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குற்றவாளிகள் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து, முதன்மை
செஷன்ஸ் நீதிபதி சாலினி பன்சால்கர் ஜோஷி இன்று தீர்ப்பளித்தார்.
டெல்லியில் 2012-ல் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்குப்
பிறகு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(இ) திருத்தப்பட்டு, அது அமலுக்கு
வந்தது. இந்த பிரிவு அதிகபட்சமாக மரண தண்டனைக்கு வகை செய்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக