ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு ரூ.200 கூலி பேசி 500 பேருக்கு தலா ரூ.100 ! பஸ்கள் சிறைபிடிப்பு !

அன்னூர்: கோவை அருகே தனியார் பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக, முதல்வர் ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கோவை மாவட்டம், காரமடையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். இதில் பங்கேற்க அன்னூர் ஒன்றியம், கரியாம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையம், சுப்பிரமணிக் கவுண்டன் புதூர், வெள்ளாள பாளையம், காந்திநகர் பகுதிகளை சேர்ந்த  650 பேரை பஸ்களில் கட்சி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு ரூ.200, சாப்பாடு மற்றும் தண்ணீர் தருவதாக உறுதி அளித்திருந்தனர்.


இவர்கள் சென்ற பஸ், குமரன்குன்று பகுதியில் செல்லும் போதே ஜெயலலிதா கூட்டத்தில் பேச தொடங்கி விட்டார். இதனால் பொதுக் கூட்டத்துக்குள் இனி செல்ல முடியாது என கூறி கட்சி நிர்வாகிகள் பஸ்சை மாலை 5 மணி வரை அங்கேயே காக்க வைத்தனர். கூட்டத்துக்கு வந்தவர்களை பின்னர் அதே பஸ்சில் எல்லப்பாளையம் அனுப்பி வைத்தனர். ஆனால், ரூ.200, சாப்பாடு மற்றும் தண்ணீர் தரவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த மக்கள், பஸ்சில் இருந்து இறங்கியதும் அந்த பஸ்களை சிறைபிடித்தனர்.

இந்நிலையில், நேற்று காலை அதிமுக நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், பொதுக் கூட்டத்துக்கு வந்த 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 500 பேருக்கு தலா ரூ.100ஐ வீடு வீடாக சென்று வழங்கினர். ரூ.200 கூலி பேசி அழைத்து சென்று பணம் வழங்கவில்லை. பஸ் சிறை பிடிப்பு போராட்டத்துக்கு பின்னர் ரூ.150 வழங்குவதாக கூறினீர்கள். தற்போது வெறும் ரூ.100 கொடுக்கிறீர்களே; இனிமேல் பொதுக் கூட்டத்துக்கு ஆள்பிடிக்க இந்த பக்கம் வந்துவிடாதீர்கள் என ஆவேசமாக கூறி நிர்வாகிகளை எச்சரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக