வியாழன், 13 மார்ச், 2014

தமிழகத்தில் காங்கிரஸ் + அழகிரி Versus ஸ்டாலின் ?

மன்றாடிப் பார்த்தும் மசியாத தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, அதிரடி திட்டம் ஒன்றை, காங்கிரஸ் மேலிடம் கையில் எடுத்து உள்ளது என்ற தகவல் கசிய துவங்கி உள்ளது. கூட்டணி கதவுகளை திறக்க விடாமல் கடைசி வரை முட்டுக்கட்டை போட்ட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, அது பெரும் சவாலாக இருக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியான அதே நாளில் சென்னையில் இருந்த அழகிரி, 'தனி கட்சி துவங்குவது குறித்து, ஆதரவாளர்களுடன் பேசி, இரண்டு மாதத்தில் முடிவெடுப்பேன்' என, பேட்டி அளித்து, பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, மதுரை திரும்பியுள்ளார். அந்த பேட்டி, காங்கிரசின் ரகசிய திட்டத்தின் ஒரு வெளிப்பாடு தான் என, கூறப்படுகிறது. தி.மு.க.,வை கூட்டணிக்கு இழுக்க, காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், வாசன் உள்ளிட்டோர் முயற்சி எடுத்தனர். இதில், சிதம்பரம் தான் ஸ்டாலினுடன் மணிக்கணக்கில் பேசிப்பார்த்தார். இருப்பினும் ஸ்டாலின் இசையாததால், சிதம்பரம் 'அப்செட்' ஆகிவிட்டார். 'அவரது அரசியல் வாழ்க்கையில் இந்தளவுக்கு யாரிடமும் இறங்கிப் பேசியதில்லை என்பது தான், அவரது வருத்தத்திற்கு காரணம்' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
கடைசியில், 'ஐந்து 'சீட்'டாவது கொடுங்கள்' என்றுகூட, கேட்டுப் பார்த்த காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலினின் பிடிவாதத்தால் கூட்டணி முயற்சியை கைவிட்டனர். தனித்துவிடப் பட்டது, தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால், ஏதோ ஒரு திராவிட கட்சி மூலம் பதவி அனுபவித்து வந்த, காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் எதிர்காலம் குறித்து கவலை அடைந்து உள்ளனர்.

'காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த போது, அமைச்சர் பதவிகளை அனுபவித்துவிட்டு, நெருக்கடியான நேரத்தில், தி.மு.க., தங்களை கழட்டிவிட்டுள்ளதே' என்பது, டில்லி காங்கிரசாரின் கருத்தாக உள்ளது. டில்லி தலைவர்களும், இதனால் கடுப்பாகி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கடுப்பின் விளைவாக தீட்டப்பட்டது தான், 'ஏ பிளான்'.

இந்த திட்டம் பற்றி, காங்கிரஸ் வட்டாரம் கோடிட்டு காட்டியதாவது: 'பா.ஜ., தான் ஆட்சிக்கு வரும். அதனால், காங்கிரசை கண்டுகொள்ள தேவையில்லை' என, ஸ்டாலின் தப்பு கணக்கு போட்டு உள்ளார். சரியான அரசியல் பக்குவம் அவருக்கு இருந்திருந்தால், இந்த தேர்தலில், காங்கிரசுக்கு தான் அவர் முன்னுரிமை தந்திருக்க வேண்டும். ஏனென்றால், மோடியே பிரதமராக வந்தாலும் கூட, மத்திய ஆட்சியை பொறுத்தவரையில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், எதையும் செய்ய முடியாது. இந்த பத்தாண்டு காலத்தில், எங்களது பங்காளி களாக இருந்த, தி.மு.க.,வினர் இதை அறிந்திருக்கலாம். ஆளும் கட்சி காங்கிரஸ் என்றாலும், எதிர்க்கட்சியான பா.ஜ., ஆதரவு இல்லாமல், அரசால் செயல்பட முடியாது. சுஷ்மா சுவராஜும், அருண் ஜெட்லியும் ஆட்சேபித்தால், எந்த வேலையும் நின்று போய் விடும். இதுதான் யதார்த்தம். அதனால், நாளைக்கு பா.ஜ., ஆட்சி ஏற்பட்டாலும் கூட, காங்கிரசின் முக்கியத்துவம் குறைந்து விடாது. எனவே, காங்கிரசை, ஸ்டாலின் குறைத்து மதிப்பிட்டு இருக்கக் கூடாது. அந்த தவறை அவர் செய்ததால், நாளை, தி.மு.க., நெருக்கடியை சந்திக்கும் நேரத்தில் காங்கிரஸ் கை கொடுக்காது. அவ்வளவு ஏன்? அந்த நெருக்கடியை காங்கிரசே கூட ஏற்படுத்தக்கூடும். அதுதான் காங்கிரசின், 'ஏ பிளான்'.

தேர்தலுக்கு பின், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி களம்புக காத்திருக்கிறார் என்பது, அவரது பேட்டி மூலம், ஸ்டாலினுக்கு சொல்லப்பட்ட செய்தி. அதற்காக, இப்போதே அழகிரிவேலையை ஆரம்பித்து விட்டார் என்பதையும், ஸ்டாலின் நிச்சயம் அறிந்திருப்பார். பணம் படைத்தவர், கட்சிக்கு அப்பாற்பட்டவர், ஸ்டாலின் குடும்பத்தின் ஆதரவு பெற்றோருக்கு தான், 'சீட்' கிடைத்துள்ளது என்ற புகார், தி.மு.க.,வில் ஊடுருவி வருகிறது. இந்த குற்றச்சாட்டை கிளப்பியுள்ள அழகிரி, குழம்பிய தி.மு.க., குட்டையில் மீன் பிடிக்க, வலை விரித்து உள்ளார். அந்த வலையில் யாரும் சிக்காமல் தடுக்க, ஸ்டாலின் போராட வேண்டிய நேரம் விரைவில் வருகிறது. இந்த முயற்சியில், ஆரம்பம் முதலே, காங்கிரஸ் ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் அழகிரிக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. அதை தான், நேற்று முன்தினம் வாசன் அளித்த பேட்டியில், 'காங்கிரசுடன் கூட்டு சேராமல் போனதற்காக வருந்த நேரிடும்' என, கூறியிருக்கிறார். இவ்வாறு, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக