திங்கள், 10 மார்ச், 2014

Malaysia Airlines Flight MH370 விமானம் எங்கே?- 40 கப்பல், 22 விமானம் தேடுதல் வேட்டை!

ரேடாரில் இருந்து திடீரென மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 கப்பல்கள், 22 ஜெட் விமானங்கள் தேடி வருகின்றன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் எம்.எச். 370 விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து திடீரென மாயமானது. அதனால் தென் சீனக் கடலில் விழுந்து மூழ்கியிருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் வியட்நாம், மலேசியா, சீனா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளைச் சேர்ந்த 40 கப்பல்கள் மற்றும் விமானப் படைகளைச் சேர்ந்த 22 ஜெட் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
விடிய விடிய தேடுதல் பணி
சனிக்கிழமை மாலை வியட்நாம் எல்லை கடல் பகுதியில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலம் மிதப்பதாக அந்த நாட்டு விமானப் படை ஜெட் விமானிகள் தெரிவித்தனர். அங்கு கடற்படை கப்பல்கள் தேடியபோது விமானத்தின் எந்தப் பாகத்தையும் கண்டுபிடிக்க முடிய வில்லை.
சனிக்கிழமை இரவு தொடங்கி கடற்படை கப்பல்கள் விடிய விடிய கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டன. ஞாயிற்றுக்கிழமை காலையில் பன்னாட்டு விமானங்கள் மீண்டும் வான்வழி தேடுதலை தொடர்ந்தன. இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனிடையே விமான மீட்புப் பணியில் முன்னோடியாக விளங்கும் அமெரிக்க நிறுவனத்தின் உதவியை மலேசிய அரசு நாடியது. அந்த நிறுவனத்தினர் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர்.
தேடுதல் எல்லை அதிகரிப்பு
மீட்புப் பணியில் உதவுவதற்காக அமெரிக்க கடற்படை சார்பில் வியட்நாம் தெற்கு கடற்கரைப் பகுதிக்கு அதிநவீன போர்க்கப்பல், விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது தேடுதல் எல்லை அதிகரிக்கப்பட்டு சுமார் 120 கடல் மைல் தொலைவுக்கு கடற்படை கப்பல்கள், விமானங்கள் ரோந்து சுற்றி வருகின்றன.
தென்சீனக் கடலில் சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. அந்தப் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
விமானத்தில் 4 தீவிரவாதிகள்?
காணாமல்போன விமானத்தில் மொத்தம் 227 பயணிகள் இருந்தனர். இதில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த இருவர் தங்கள் பாஸ்போர்ட்டை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.
அந்த பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் 2 பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இதேபோல் மேலும் 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர்.
அவர்கள் 4 பேர் குறித்தும் கோலாலம்பூர் விமான நிலைய விடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. உள்பட பன்னாட்டு விசாரணை அமைப்புகளின் உதவியும் கோரப்பட் டுள்ளது.
தீவிரவாதம் என்பது பன்னாட்டு நெட்வொர்க்; மலேசியாவால் மட்டும் இந்தப் பிரச்சினையை கையாள முடியாது. எனவே பல்வேறு நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது, காணாமல்போன விமானம் குறித்து தீவிரவாதம் உள்பட அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மலேசிய பாதுகாப்பு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஸ்காமுதீன் தெரிவித்தார். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக