வியாழன், 6 மார்ச், 2014

Chennai மாணவர்கள் கொலை வெறி தாண்டவம்: பெண் பயணிக்கு அரிவாளால் வெட்டு !


3 இடங்களில் கல்லூரி மாணவர்கள் கடும் மோதல்மெரினாவில் பஸ் நொறுக்கப்பட்டது வியாசர்பாடியில் அரிவாள் வெட்டு


சென்னை: சென்னையில் நேற்று நான்கு இடங்களில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் நடத்திய அராஜகத்தில், ஒரு பெண் பயணிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பள்ளி மாணவன் காயம் அடைந்தான். மாநகர பேருந்து அடித்து நொறுக்கப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில், பட்டினப்பாக்கம் சுங்கச்சாவடி வழித்தடம் எண் '6 டி' மாநகர பேருந்து கண்ணகி சிலை அருகே சென்று கொண்டிருந்தது. அதில், மாநில கல்லூரி மாணவர்கள் இருந்தனர். அதையறிந்த, நியூ கல்லூரி மாணவர்கள், திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இருந்து, அரிவாள் மற்றும் மூட்டையில் கற்களை எடுத்து வந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் நடத்திய கல்வீச்சில், பேருந்து கண்ணாடிகள் நொறுங்கின. பயணிகள் அலறி ஓடினர். பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. மாணவர்கள், பேருந்தின் உள்ளே புகுந்து, மாநிலக் கல்லூரி மாணவர்களை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். மாநிலக் கல்லூரி மாணவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் காமராஜர் சாலையே பெரும் போர்க்களம் போல் காணப்பட்டது. மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில், கணவர் கண் முன்னே, மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதற்கு முழு காரணமும் நாம் தமிழர் மற்றும் சைக்கோ கட்சிகளையே சாரும். வன்முறை தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லி, காங்கிரஸ் எதிர்ப்பு போராட்டம், காங்கிரஸ் கருவறுக்கும் போராட்டம், என்று மாணவனை ஒரு போராளியாக மாற்றியது இவர்கள் தான். அந்த பழக்கம் மறந்து விடக்கூடாது என்று தான், மாணவன் சக மாணவனை அடித்துக்கொல்கிறான். இத்தகைய தலைவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் சொல் கேட்டு அகிம்சைவாதிகளை வதைத்தால், ஒரு நாள் ஊராரிடம் இதேப்போல் அடிவாங்க நேரிடும். மாணவ சமூகமே திருந்து.... 
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, கணவர் ஆட்டோவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இந்த தாக்குதலில், தேர்வுக்கு சென்று கொண்டு இருந்த, மூன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தனுஷ் என்பவனுக்கு, பேருந்து கண்ணாடித் துண்டு சிதறியதில், முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு, மெரீனா போலீசார் அரைமணிநேரம் தாமதமாக வந்ததால், திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து வந்து மாணவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரச்னைக்குரிய கல்லூரிகளுக்கு அருகில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருவர். ஆனால், கடந்த சில வாரங்களாகவே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அங்கு இருந்து இருந்தால், இந்த மோதல் சம்பவம் பெரிய அளவில் நடந்து இருக்காது.

அய்யப்பன் தாங்கல் பாரிமுனை இடையே இயக்கப்படும் வழித்தடம் எண் '17 எம்' மாநகர பேருந்து, நேற்று, அண்ணா சாலை வழியாக, பாரிமுனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்துக்குள் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர், ஆபாச வார்த்தைகளால் பாட்டு பாடியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பல்லவன் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை, போலீசார் மடக்கி நிறுத்தினர். பின், பேருந்து மேற்கூரை மீது அமர்ந்திருந்த மாணவர்களையும், படியில் நின்றிருந்த மாணவர்களையும், உள்ளே செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், போலீசாரை பார்த்த பேருந்து ஓட்டுனர், 'மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிடுங்கள். அவர்கள் இருந்தால், நான், பேருந்தை இயக்க மாட்டேன்' என, கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், 'பேருந்தை எடுக்கவில்லை என்றால், கண்ணாடியை உடைத்து விடுவோம்' என மிரட்டினர்.





சாலை மறியல்:
மாணவர்களின் இந்த அராஜகத்தை பார்த்து கொண்டிருந்த, பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்கள், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, அரசு போக்குவரத்து கழக சங்க செயலர், அஸ்லாம், சமாதானப்படுத்தினார். ஆனால், 'மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் நாங்கள் கலைந்து செல்வோம்' என, ஊழியர்கள் பிடிவதாமாக இருந்தனர். இதை பார்த்த மாணவர்கள், அங்கிருந்து மெல்ல நகர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றனர். இதற்கிடையே, சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார், சென்ட்ரலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது, தடியடி நடத்தினர். மாணவர்கள் சிதறி ஓடினர். பின், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்த போலீசார், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரித்து வருகின்றனர். சாலை மறியல் மற்றும் தடியடி சம்பவத்தால், அந்த பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






வியாசர்பாடியில்...:
பெரியபாளையம் பிராட்வே இடையே செல்லும் வழித்தடம் எண் '597' மாநகர பேருந்து, நேற்று காலை வியாசர்பாடி சர்மாநகர் வழியாக பிராட்வே நோக்கி சென்றது. அம்பேத்கர் கல்லூரி அருகே பேருந்து வந்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தை நிறுத்தி ஏற முயன்றனர். அப்போது பேருந்து சில அடி தூரம் சென்று நின்றது. அதற்குள் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் சிலர், அதில் இருந்து இறங்கி ஓடினர். ஓடிய மாணவர்களை ஆயுதங்களுடன் துரத்திய கல்லூரி மாணவர்கள், கையில் சிக்கியவர்கள் மீது, தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன், 21, என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். எம்.கே.பி.நகர் போலீசார், மோதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த, சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட, முன் விரோதம் காரணமாக, மாணவர்கள் மோதிக் கொண்டது தெரியவந்துள்ளது.






போதையில் ஆட்டம்:
அதேபோல் கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், சில மாணவர்கள் மதுபோதையில் மாணவியருக்கு தொந்தரவு தரும் வகையில் தொல்லை கொடுத்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் புகாரையடுத்து, போதையில் ஆட்டம் போட்ட மாணவர்களை கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.






'எதிர்காலம் பாதிக்கும்':
அப்பாவி பொதுமக்கள் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தும் அளவுக்கு மாணவர்களின் மோதல் சம்பவங்கள் எல்லை மீறி சென்று விட்டன. இருந்தாலும், அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை. இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மோதலில் ஈடுபடுவோர், மாணவர்கள் என்பதாலேயே, அவர்களின் எதிர்காலம் கருதி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு முன் மோதிக்கொண்ட பச்சையப்பன், நந்தனம், மாநிலக் கல்லூரி, நியூ கல்லூரிகளை சேர்ந்த, 30 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 20 மாணவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளோம். மோதலில் ஈடுபடுவதை மாணவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். தவறினால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார் dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக