திங்கள், 3 மார்ச், 2014

தினமணி: இப்போதே தடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு அவசரச கால நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும்

Dinamani_logo
ஊடகங்கள் அரசியல்வாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் காலம் இது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல நீதித்துறையும் ஊடகங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதுதான் விசித்திரமாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்திற்கும், பேச்சு சுதந்திரத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் நமது அரசியல் சட்டத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய நிர்வாகத் தலைமையும், நீதித்துறையும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் விமர்சிக்கவும் முற்படுமேயானால், அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் கருதப்பட வேண்டும்.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது, முன்னாள் சட்டப் பயிற்சி மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுப் புகார் எழுப்பிய பிரச்னையில், அதுபற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தில்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதே போன்ற புகார்தான் பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் மீதும், மேற்கு வங்க மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி அசோக்குமார் கங்குலி மீதும் சுமத்தப்பட்டது. அவர்களுக்கு இல்லாத நீதித்துறைப் பாதுகாப்பு நீதிபதி ஸ்வதந்தர் குமாருக்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன்? ஆஸ்ரம் பாபு தன்னைப் பற்றிய செய்தி வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அப்படிப்பட்ட கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பே இருக்கும்போது, தில்லி உயர்நீதிமன்றம் எப்படி இதுபோன்று ஒரு கட்டளையைப் பிறப்பித்தது என்கிற கேள்வி எழுகிறது.

இரண்டு நாள்கள் முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் தொடர்பான செயல்பாடுகளையும், 2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களையும் வெளியிட்ட ஒரு இணையதளச் செய்தி மடலை முடக்க வேண்டும் என்றும், அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வழக்கில் மனுதாரர் ஆட்சேபணை செய்யும் குறிப்பிட்ட செய்தித்தகவலை விரிக்கும் "திறப்புகளை' மூடுவதற்கு உத்தரவிடுவதுதான் வழக்கம். ஆனால் இணைய இதழை முழுமையாக முடக்க வேண்டும் என்பது தவறான முன்னுதாரணத்துக்கு வழிவகுத்து விடக் கூடும்.

இதுபோன்ற இணையதள இதழ்களை அமெரிக்காவிலோ, அண்டார்டிக்காவிலோ இருந்தபடியே கூட நடத்த முடியும். அவற்றை முடக்குவதும், நடத்துபவரைக் கைது செய்வதும் எளிதானதல்ல. இணையதளத்தில், இந்திய குற்றவியல் சட்டத்தின்படி தண்டனைக்குரிய பல செய்திகளும், படங்களும், கருத்துகளும் வெளியிடப்படுகின்றனதான். ஆனால், அதையெல்லாம் நீதிமன்ற உத்தரவால் கட்டுப்படுத்திவிட முடியும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். கருத்து சுதந்திரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் உலக சூழலில், விமர்சனங்களையும் வக்கிரங்களையும் பொருள்படுத்தாமல் விட்டுவிடுவதுதான் சிறந்த வழி.

அரசியல் கட்சிகள் வழக்கம்போல, தங்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது வெறுப்பை உமிழ்வது அதிகரித்திருக்கிறது. பா.ஜ.க.வில் சேர்ந்திருக்கும் இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் சில நாள்களுக்கு முன்னால், பத்திரிகையாளர்களை "விபசாரிகள்' என்று வர்ணித்தார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவாளோ, தனது செயல்பாடுகளை விமர்சிக்கும் ஊடகங்கள் சிலரின் சுய ஆதாயத்திற்குத் துணை போவதாகவும், ஊழல்வாதிகளுக்கு விலை போவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை நசுக்கி விடுவதாக எச்சரித்திருக்கிறார். "உள்துறை அமைச்சரான என்னிடம்தான் புலனாய்வுத் துறையும் இருக்கிறது. நான் எல்லா ஊடகங்களையும் கண்காணித்து வருகிறேன். அவர்களின் செயல்பாடுகளை எப்படித் தடுப்பது என்று எனக்குத் தெரியும்' என்று மிரட்டுகிறார்.

தான் ஊடகங்களைக் குறிப்பிடவில்லை என்றும் சமூக வலை தளங்களைத்தான் குறிப்பிட்டதாகவும் இப்போது சப்பைக் கட்டுக் கட்டுகிறார் ஷிண்டே. சமூக வலைதளங்களை தடை செய்ய முடியுமா? மற்றவர்கள் ஊடகங்களைக் குற்றம் சாட்டுவதற்கும் உள்துறை அமைச்சர் ஷிண்டே எச்சரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஊடகங்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டியவர் பேசும் பேச்சா இது?

அரசு இயந்திரம் ஊடகங்களுக்கு எதிராகச் செயல்படும் அவலத்துக்கு அச்சாரம் போட முற்பட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர். கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இந்தியாவில் அச்சுறுத்தப்படுகிறது என்பதற்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். இந்தப் போக்கு இப்போதே தடுக்கப்படாவிட்டால், இந்தியா மீண்டும் ஒரு அவசரச் சட்ட கால நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிடும்
நன்றி தினமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக