வியாழன், 6 மார்ச், 2014

தமிழகத்தில் பாஜ கூட்டணியில் அதிரடி மாற்றம் ? மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்ன? -

சென்னை: பாஜ அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட போகிறது. இதனால், பாஜ அணியில் இடம் பெற்றுள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்னவாக போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜ கூட்டணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், தேமுதிக 20, பாமக 14 தொகுதிகளை கேட்டது. இதற்கு பாஜ ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கூட்டணியில் 2 கட்சிகளும் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. கூட்டணியில் சேர பாஜ விதித்த கெடுவை 2 கட்சிகளும் மதிக்கவில்லை. இதனால், இரண்டு கட்சிகளும் பாஜ அணியில் சேருவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, அகில இந்திய பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை அவசரமாக டெல்லிக்கு வருமாறு அழைத்தார். அதைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் நேற்று மாலை டெல்லி சென்றனர். இன்று பிற்பகல் ராஜ்நாத்சிங் அவர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்துங்கள். நாங்கள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை பார்த்து கொள்கிறோம் என்று பாஜ மேலிடம் அதிரடியாக தெரிவித்துள்ளது என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தமிழகத்தில் பாஜ கூட்டணியில் அதிரடி மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை திரும்பியதும் அதிரடி மாற்றத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை பாஜ அணியில் மாற்றம் ஏற்பட்டால், பாஜ அணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதிக்கட்சிகளின் நிலை என்னவாக போகிறது என்று தெரியவில்லை. பாஜ தலைமையின் இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக