புதன், 12 மார்ச், 2014

‘இமயமலை குத்தகைக்கு’ நேபாள அரசு முடிவு
காத்மாண்டு:இமயமலை சிகரங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிகரங்களை குத்தகைக்கு விட நேபாள அரசு முடிவு செய்துள்ளது.இமயமலையில் ஆண்டுதோறும் மலையேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான உயரமான மலை சிகரங்கள் நேபாள நாட்டின் எல்லைக்குள் அமைந்துள்ளன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகளை நேபாள அரசு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நேபாளத்தின் வருவாயை பெருக்குவதற்காகவும், சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும் நேபாள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 326 சிகரங்கள் மலையேறுபவர்களுக்காக திறந்து விடப்பட்டு உள்ளன.


இந்நிலையில் இமய மலையில் உள்ள சிகரங்களை தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலமாக நேபாள நாட்டின் வருவாயை அதிகரிக்க நேபாள அரசு யோசனை செய்து வருகிறது. மேலும் மலையேற வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேற்ற வீரர்களிடம் சிறிய தொகை வசூலித்து, அதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.

அதே போல் இமயமலையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாமல் உள்ள மற்ற சிகரங்களையும் குத்தகைக்கு விடுவது தொடர்பாக வெளிநாட்டு தனியார் சுற்றுலா நிறுவனங்களுடன் நேபாள அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து நேபாள சுற்றுலா துறை அமைச்சர் மோகன் கிருஷ்ணா கூறுகையில், இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் சிகரங்களை குத்தகைக்கு விடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இதனையடுத்து இவற்றை சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விடும் வகையில் நேபாளம் மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு அதன் மூலம் வருவாயை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இனி இமயமலையில் பார்க்கலாம் ‘சிகரங்கள் வாடகைக்கு’ என்கிற போர்டுகளை. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக