திங்கள், 24 மார்ச், 2014

குண்டூர் காதல் திருமணம் செய்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்

காதல் திருமணம் செய்த மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்நகரி, மார்ச். 24–
கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெயர் தீர்த்தி (24). குண்டூர் அருகே உள்ள கோகுலகுடி கிராமத்தைச் சேர்ந்த அரிபாபு– சாம்ராஜ்யம் தம்பதிகளின் மகள். ஐதராபாத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது தன்னுடன் வேலை பார்த்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிரண்குமார் தனது பெற்றோருடன் பலமுறை பேசி தீர்த்தியை திருமணம் செய்ய சம்மதம் பெற்றார்.

ஆனால் தீர்த்தி வீட்டில் இறுதிவரை சம்மதிக்கவில்லை என்றாலும் தனது பெற்றோர் உதவியுடன் கிரண்குமார் தீர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இது தீர்த்தி பெற்றோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நல்ல அழகு, அந்தஸ்தான வேலை, கை நிறைய சம்பளம் என பல தகுதிகள் இருந்தாலும் கிரண்குமாரை மகள் திருமணம் செய்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த வகையில் சாதி அவர்களின் கண்ணை மறைந்தது.
இதனை காட்டிக் கொள்ளாமல் மகளையும், மருமகனையும் விருந்துக்கு அழைத்தனர். பெற்றோர் மனம் திருந்தி விட்டார்கள் என தீர்த்தியும், கிரண் குமாரும் நம்பினர். அவர்கள் அழைப்பை ஏற்று கிரண்குமார் நண்பர்கள் புடை சூழ புது மனைவி தீர்த்தியை அழைத்துக் கொண்டு குண்டூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.
ஆனால் இரவு நேரம் என்பதால் நீங்கள் இப்போது வீட்டுக்கு வரவேண்டாம் தீர்த்தியை மட்டும் நாங்கள் அழைத்துச் செல்கிறோம். நீங்கள் லாட்ஜில் தங்கி விட்டு மறுநாள் காலை நல்ல நேரம் பார்த்து வாருங்கள்’’ என்று தீர்த்தியின் பெற்றோர் கூறினர்.
இதை நம்பி மனைவியை அவர்களுடன் அனுப்பிவிட்டு கிரண்குமார் நண்பர்களுடன் லாட்ஜில் தங்கினார்.
இரவு கிரண்குமார் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் எடுக்கப்படவில்லை. பல முறை தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையில் மீண்டும் தொடர்பு கொண்டார். அப்போதும் போன் எடுக்கப்படவில்லை. இதனால் கலக்கம் அடைந்தார்.
உடனே கிரண்குமார் நண்பர்கள் நாங்கள் தீர்த்தி வீட்டுக்கு சென்று பார்க்கிறோம் நீ நல்ல நேரத்தில் வா எனக் கூறி விட்டு தீர்த்தி வீட்டுக்கு சென்றனர்.
கிரண்குமார் நண்பர்கள் சென்ற போது ‘‘தீர்த்தியின் பெற்றோர்கள் வீட்டை பூட்டி விட்டு அவசரமாக தெருக் கோடியில் சென்று கொண்டு இருந்தனர். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் வீட்டை உடைத்து பார்த்தனர். உள்ளே தீர்த்தி கட்டிலில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு இருந்தது.
தீர்த்தியை அவரது பெற்றோரே கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. அவரது பெற்றோரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி விட்டனர்.
இதுகுறித்து கிரண்குமார் குண்டூர் போலீசில் புகார் செய்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தீர்த்தியின் பெற்றோரை தேடி வருகிறார்கள்.
maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக