புதன், 12 மார்ச், 2014

மலேசிய விமானம் மலாக்கா பகுதியில் மாயமாகவில்லை: குழப்பும் மலேசிய விமானப்படை!


கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம், சீனா செல்லாமல் வழி மாறி மலாக்கா வழியில் கடைசியாக தென்பட்டது என்றத் தகவலை மலேசிய விமானப் படை அதிகாரி மறுத்துள்ளார். கடந்த வாரம் 7ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமானது. தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்தது என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அடுத்து இந்த விமானம், ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம், மலேசியாவின் கிழக்கு கடலோர நகரான கொட்டா பாருவுக்கும், வியட்நாமின் தெற்கு முனைக்கும் இடையே 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இந்த விமானம், மலாய் தீபகற்பத்துக்கும், இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே சுமார் 805 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் வியட்நாமும் தனது எல்லைக்குட்பட்ட வனப்பகுதியை அலசி வருகிறது. மலேசிய ராணுவ அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அத்தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியே மறுத்துள்ளார். தான் அவ்வாறு குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்திய கப்பற்படை உட்பட பல நாடுகளின் படைகள் மாயமான விமானத்தை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாவது அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக