செவ்வாய், 4 மார்ச், 2014

அதிமுக அங்கம் வகிக்கும் வகையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் ! அப்பதானுங்கோ வழக்குகளை ஒருவழி பண்ணலாம்


அதிமுக அங்கம் வகிக்கும் வகையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் என்று காஞ்சிபுரம் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசினார்.அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, முதல் தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மாலை 4.45 மணிக்கு காஞ்சிபுரம், காமராஜர் சாலை பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா பேசியதாவது:பத்து ஆண்டுகளில் இந்தியாவை வேட்டை காடா க்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல், மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்த தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்று கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன்மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.
மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும்.மாநில அரசு மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக, மீனவர்கள் பிரச்னை, அண்டை மாநில நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது. இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் மத்திய காங்கிரஸ் அரசு துரோகம் இழைத்து கொண்டிருக்கிறது.

வருகின்ற மக்களவை தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல். வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்க, பாதுகாப்பு துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், நமது ராணுவத்தை, கடற்படையை, விமான படையை நவீனமயம் ஆக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை. அண்டை நாடுகளிலிருந்து வரும் சவால்களை சமாளிக்கும் வகையில் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமான படைக்கு தேவையான நவீன ஆயுதங்களும், தளவாடங்களும் வாங்கப்படும்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி மத்தி யில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அதிமுகவுக்கு மக்கள் வழங்க வேண்டும்.இலங்கை போரின்போது இனப்படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழி யவும், தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

காஞ்சிபுரத்தை காணோம்

அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு, காஞ்சிபுரம் அருகே நத்தப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை பி.கே.நம்பி தெரு, காந்தி ரோடு வழியாக மாலை 4.40 மணிக்கு பிரசார மேடைக்கு வந்தார். வழிநெடுகிலும் பொய்கால் குதிரை, கேரள செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு காஞ்சிபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை அறிமுகப்படுத்தி ஜெயலலிதா பேசினார்.இலங்கை, மீனவர், நதிநீர், கச்சத்தீவு போன்ற தேசிய பிரச்னை பற்றி பேசிய ஜெயலலிதா, காஞ்சிபுரம் தொகுதியில் உள்ள நெசவாளர் பிரச்னை, பேருந்து நிலைய இடமாற்றம், குடிநீர் பிரச்னை, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிற்சாலை, வேலைவாய்ப்பு பற்றி எதுவும் பேசவில்லை.

கடைகள் மூடல்

டி.கே.நம்பி தெரு, காந்திரோடு, காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, வணிகர் வீதி, இந்திரா காந்தி சாலை பகுதிகளில் பெரும்பாலான பட்டு சேலை விற்பனை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. பட்டு சேலை கடைகள், நகைக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் ரூ.5 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கொடி கம்பத்தில்  மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

காஞ்சிபுரம் டோல்கேட் கோபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜி (54). டோல்கேட் அருகே நடமாடும் டிபன் கடை நடத்தி வருகிறார். ஜெயலலிதா பிரசாரத்துக்காக அவர் வரும் வழியில் அதிமுக கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.  ஒரு கொடி கம்பத்தில் ராஜி சாய்ந்திருந்தார். அப்போது அந்த இரும்பு கம்பத்தின் மீது மின்சார ஒயர் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ராஜி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக