புதன், 19 மார்ச், 2014

சூட்கேஸ் (பணம்)​ பற்றாக்குறையால் வேட்பாளர்கள் பாதிப்பு

தேர்தலில் ஜெயித்த பின் ஓட்டம் பிடிப்பது தான் தே.மு.தி.க.,வினரின் வழக்கமாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், தே.மு.தி.க.,வின் நாமக்கல் வேட்பாளரே ஓட்டம் பிடித்தது, புதுமையை ஏற்படுத்தியது. இதே போல், மேலும் சிலர் ஓட்டம்பிடிக்க வாய்பபு உள்ளதாகவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நேற்று முன்தினம், தேர்தல் பிரசாரத்திற்காக, விஜயகாந்த் நாமக்கல் சென்ற போது, அந்த தொகுதிக்கான தே.மு.தி.க., வேட்பாளர் மகேஸ்வரன் பிரசாரத்திற்கு வராததால், விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்தார். மகேஸ்வரனோ, மூளையில் வைரஸ் காய்ச்சல் என, சொல்லி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு, தான் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.தீர விசாரித்தபோது, மூளையில் வைரஸ் காய்ச்சல் பிரச்னையை விட, அவருக்கு 'வைட்டமின் ப' பற்றாக்குறை தான் முக்கிய பிரச்னை என, தெரியவந்தது.பொதுவாக. தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியின் வேட்பாளர்களுக்கு, எங்கிருந்தோ பிரச்சாரத்திற்கு தேவையான கோடிகள் வந்துவிடும். அந்தந்த தொகுதி தொழிலதிபர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பெருந்தனக்காரர்கள், நல்லெண்ணத்தோடு, நன்கொடை வழங்குவர் அல்லது செலவுகளை ஏற்றுக்கொள்வர். சமயத்தில், கட்சி தலைவர் பிரதமராவதில் முனைப்பு காட்டினால், கட்சியே செலவும் செய்யும். தி்றமை உள்ளவன் மூன்று கோடி முதல் வைத்து முன்னூறு கோடி சம்பாதி்க்கிறான்.
ஆனால், அந்த வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான ஏதோ ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிந்தால் மட்டுமே இந்த கோடிகள் தானாக வரும். இல்லாவிட்டால், வேட்பாளரே சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள வேண்டியது தான். நியாயமாக பார்த்தால், நாடு முழுவதும் மோடி பஜனை ஒலித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தால் ஏதாவது ஆதாயம் தேடிக்கொள்ளலாம் என்ற, நோக்கத்திலாவது பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நன்கொடைகள் குவிந்திருக்க வேண்டும்.ஆனால், தமிழக பா.ஜ., கூட்டணியில் தொடர்ந்து வரும் குழப்பங்களால் யாரும், பா.ஜ.,வையோ அதனுடன் கூட்டணி பேசி வரும் கட்சிகளையோ சீண்டக்கூட தயாராக இல்லை. இதுவே, தே.மு.தி.க., வேட்பாளர்களின் 'வைட்டமின் ப' பற்றாகுறைக்கு காரணம். மேலதிகமாக, தே.மு.தி.க., தலைமையும் படு 'சிக்கனமானது' என்பதால், பிரசாரத்திற்காக, விஜயகாந்தின் வேன் செலவை தவிர வேறு ஒன்றையும் ஏற்காது என, தெரிகிறது.

நிலைமை இப்படி இருக்க, வலுக்கட்டாயமாக வேட்பாளர்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சிலர், தங்கள் நிலையை பற்றி கூறுகையில், 'தேர்தல் செலவுகளை பெரிய கட்சிகள் மட்டும் ஏற்றுக் கொள்கின்றன. மற்ற கட்சிகளில், வேட்பாளர்களே தான் செலவு செய்ய வேண்டும். இதற்காகவே, விருப்ப மனு கொடுத்த பின்னால், எல்லா கட்சிகளிலும் நேர்காணல் நடத்தப்படுகிறது' என்றனர்.

மேலும், 'இப்படி பணம் இல்லாமல் களத்துக்கு வந்து, சிரமப்படுகிறவர்கள் எத்தனையோ பேர். அதுமட்டுமல்ல, இப்படி செலவு செய்துவிட்டு தேர்தலுக்குப் பின்னால், சொத்துக்களை இழந்து ரோட்டுக்கு வந்தவர்களும் ஏராளம். இதை தவிர்க்கத் தான் ஒருவர் ஓட்டம் பிடித்து உள்ளார். அவர் ஏற்கனவே நாலு கோடி ரூபாய் வரை, கடந்த தேர்தலில் தொலைத்ததே இதற்கு காரணம்' என்றனர்.தற்போதைய நிலையில், ஒரு வேட்பாளருக்கு, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா உள்ளிட்டவை இல்லாமல், சாதாரணமாக மூன்று கோடி ரூபாய் வரை செலவாவதாக கணிக்கப்படுகிறது. இதற்கு விலைவாசி உயர்வும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வேட்பாளர்கள் சந்திக்கும் முக்கிய செலவுகள்;
*தமிழகத்தில், ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும், ஆறு சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 1,200 - 1,600 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஒட்டுச்சாவடிக்கும், பூத் ஏஜென்ட், பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கமிட்டிக்கும் தேர்தல் முடியும் வரை, ஆறு கட்டங்களாக பணம் தரப்படும். முதல்கட்டமாக, 1,000 ரூபாயில் தொடங்கி, கடைசியாக 6,000 ரூபாய் தரப்படும்.
*இது தவிர, தொகுதி வாரியாக, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம் வாயிலாக செயல் வீரர் கூட்டங்கள் நடத்தப்படும். இதற்கு 200 பேர் வருவர். சாதாரண துண்டு போடுவது முதல், அன்றைய செலவுகள் அனைத்தையும் வேட்பாளரே பார்க்க வேண்டும். பெரிய கட்சிகளோடு அல்லது வெற்றி கூட்டணியில் இடம் பிடிக்காதவர்களுக்கு இதை தேற்றுவது சிக்கலான விஷயம் தான். அதனால், விரைவில் கூட்டணியில் தெளிவு பிறக்காவிட்டால், தே.மு.தி.க.,வில் இருந்து மேலும் பலர் ஓட்டம் பிடிக்கக் கூடும் என, கூறப்படுகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு அசாத்ய பலமுனை போட்டி சூழல் ஏற்பட்டு உள்ளதால், தனித்துவிடப்பட்ட மற்ற கட்சிகளிலும் இந்த நிலை ஏற்படலாம் என்ற, பேச்சு எழுந்து உள்ளது.
*ஆங்காங்கே கட்சியின் தேர்தல் அலுவலகம் திறக்க வேண்டும். இவற்றுக்கு, தினசரி, குறைந்தபட்சம் தலா 1,000 ரூபாய் வரை செலவாகும்
*தொகுதிக்கு 40 - 50 பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும். நடிகர், நடிகைகளின் பிரசாரத்திற்கு கட்சி பணம் கொடுத்தாலும், அவர்களின் போக்குவரத்துக்கான வாகன செலவு உட்பட மற்ற எல்லாவற்றுக்குமே, வேட்பாளர் தான் செலவு செய்ய வேண்டும்
*பிரசார செலவு, கைத்தடிகளுக்கான செலவு என, தினமும், சராசரியாக, குறைந்த பட்சம், 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்
*வேட்பு மனு தாக்கலின்போது, எவ்வளவுதான் தடை போட்டாலும் வாகனங்கள், ஆதரவாளர்கள் என, ஒரு கூட்டம் சேர்க்க வேண்டும்
இப்படி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 50 லட்சம் ரூபாய் என, ஆறு சட்டசபை தொகுதிகளை கொண்ட லோக்சபா தொகுதிக்கு, குறைந்த பட்சம் மூன்று கோடி ரூபாய் வரை செலவாகும். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக