சனி, 22 மார்ச், 2014

ஏன் மோடியிடம் ஊடகங்கள் பயப்படுகின்றன ? கேள்வி கேட்காமல் பம்மும் அர்னாப் கோஸ்வாமி: கேஜ்ரிவால் தாக்கு


டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியிடம் மற்ற தலைவர்களிடம் கேட்பது போல் கேள்வி எதுவும் கேட்காமல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி பம்முகிறார் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார். ஏ.பி.பி தொலைக்காட்சிக்கு ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பல ஊடகங்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஊடகங்கள் ஒருபோதும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கேள்விக்குள்ளாக்குவதில்லை. குஜராத்தில் வேளாண்வளர்ச்சி அதிகம் என்பது பொய். இந்த பொய் குறித்து மோடியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்புவது கிடையாது. மோடி பேசுவதை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு அவர் மீதான புகார்கள், அவரது தவறுகளை எங்கோ ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாமல் போடுகின்றன இந்த ஊடகங்கள். டைம்ஸ் நவ் அர்னாப் கோஸ்வாமி, இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில், நீங்கள் ராஜினாமா செய்வீர்களா? இல்லையா? என்று இந்த தேசம் அறிந்து கொள்ள விரும்புகிறது என மோடியிடம் கேட்பாரா? ஏன் இதுவரை மோடியிடம் இத்தகைய கேள்வி எழுப்பப்படவில்லை? குஜராத்தில் விவசாயிகள் மிக மோசமாக நடத்தப்படுகிற நிலையில் அவர்களின் பாதுகாவலனாக எப்படி மோடி இருக்க முடியும்? இவ்வாறு கேஜ்ரிவால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக