திங்கள், 24 மார்ச், 2014

சாமிக்கண்ணு வின்சென்ட்! தமிழ் சினிமாவின் தந்தை!'இப்படி ஒருவர் இருந்ததே பலருக்கும் தெரியாது


1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன்
சாமிக்கண்ணு வின்சென்ட்.

சாமிக்கண்ணு வின்சென்ட் (1883 - 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே.
திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.
வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.
ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது. இந்த வரலாற்றை நமது திரையுலகம் மறந்துவிட்ட நிலையில் ’ஒன்பது குழி சம்பத்’ திரைப்படக் குழு சாமிக்கண்ணு பிறந்த தினமான ஏப்ரல் 18 ஆம் நாளை திரையரங்கு தினமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
''இப்படி ஒருவர் இருந்ததே பலருக்கும் தெரியாத நிலையில், உங்களுக்கு எப்படி இப்படியொரு ஐடியா வந்தது?'' என்று படத்தின் க்ரியேட்டிவ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசிடம் கேட்டதற்கு:
”கேரள மண்ணில் சினிமாவுக்கான முதல் விதையைத் தூவிய டேனியல் தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்த மாநில மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மலையாள முதல் சினிமாவின் அவருடைய பங்களிப்பையும் வாழ்க்கையையும் அவர் ஞாபகமாக திரைப்படம் எடுத்து கொண்டாடுகிறார்கள்.
இன்றைக்கு தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக, தீர்மானிக்கும் இடத்தில் திரையரங்குகள் இருக்கிறது. அதற்கு காரணமான சாமிக்கண்ணு வின்சென்ட்டை கொண்டாடாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அதை நாமே முன்னெடுத்துச் செய்வோம் சின்னதாகத் தொடங்கினோம் திரையுலகைச் சார்ந்த நண்பர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் எல்லோரும் நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது அவரது பிறந்த நாளான ஏப்ரல் 18 அன்று பெரிய அளவில் விழா எடுத்து கொண்டாட இருக்கிறோம்” என்றார்.

படம் காட்டும் முறையில் சில புதுமைகளை அறிமுகப்படுத்தினார் சாமிக்கண்ணு, அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) சினிமா. ஒரு புதிய ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிட்டார். சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார். மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்திக் காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது).
அயல் நாடுகளிலிருந்து படச்சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார். தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவினார். பின்னர் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலை ஒன்றையும் நிறுவினார். தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு விற்க அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமி ஐயரின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.

தயாரிப்பாளராக

ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்கேற்ப புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். 1927 இல் எடிசன் திரையரங்கை விலைக்கு வாங்கி அதில் தமிழ்ப் படங்களைத் திரையிட்டார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, அப்புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினார். 1933 இல் கல்கத்தாவின் பயனியர் ஃபிலிம் கம்பெனியுடன் இணைந்து வள்ளி திருமணம் என்ற பேசும் படத்தைத் தயாரித்தார். புகழ்பெற்ற நடிகை “சினிமா ராணி” டி. பி. ராஜலட்சுமி, வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணுவின் வெரைட்டி ஹால் டாக்கீஸ் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் (1935).
1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார். 1937 இல் கோவையில் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்ட போது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக