தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள் மு.க.அழகிரி, “கட்சி யாருக்கும் சொந்தமானதல்ல” என்றும் பொடி வைத்து பேசியிருக்கிறார்.
தி.மு.க.விலிருந்து அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்ததை அடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் அழகிரி. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க.,விலிருந்து என்னை நீக்கும் முடிவு, கருணாநிதியால் எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றார்.
“எந்த காரணத்தை காட்டி என்னை நீக்க நிர்பந்திக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த நீக்கத்தில் ‘அவர்களின் நண்பர்களின்’ பங்கு உள்ளது. இந்த உண்மை விரைவில் தெரியவரும்” என்றும் கூறினார்.
அவர் கூறியதன் அர்த்தம், நிழல் போல இருக்கிறதா? இதைப்பற்றித்தான், இன்று ஆதரவாளர் கூட்டத்தில் பேசினார் என்று தெரிகிறது. அதில் ‘அவர்களின் நண்பர்களின்’ பெயர்களை குறிப்பிட்டு சொன்னாராம்.
இதை ஏன் செய்தியாளர்களிடம் இன்று சொன்னார்? காரணம், தி.மு.க.வில் புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அழகிரிக்கு தெரியும்.
கட்சியில் இருந்து தாம் நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து என்ன சொல்கிறார் அழகிரி?
“எனக்கு நோட்டீசும் அனுப்பப்படவில்லை. விளக்கமும் கேட்கப்படவில்லை. கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் என மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் கூறினேன். தந்தையிடம் மகன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது எனவும் கூறினேன்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று தான் கூறினேன். நான் தென் மண்டலஅமைப்பு செயலாளர் பதவியை கேட்கவில்லை. தொண்டர்களைத்தான் கட்சியில் சேர்க்க வேண்டும் என கூறினேன்” என்றார்.
அவர் அடுத்து கூறியதை கவனியுங்கள்: “கட்சி என்பது யாருக்கும் சொந்தமல்ல. யாரும் உரிமை கோர முடியாது. அறிவாலயம் எங்களுடைய உழைப்பால் உருவானது” என்பதன் அர்த்தம், புரிகிறதா? ஸ்டாலினுக்கு மட்டும் கட்சி சொந்தமானதல்ல என்கிறார். அதாவது இவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போகப்போவதில்லை.
“அடுத்த கட்டமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்கம்கேட்டு பொதுச்செயலாளர் மீது வழக்கு தொடர்வேன். எனக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால் உட்கட்சி தேர்தல் முறைகேடு குறித்த ஆதாரம் என்னிடம் உள்ளது” என்றவர், வைகோவை சந்தித்தது பற்றி இப்படி கூறியிருக்கிறார் “பூந்தமல்லி கோர்ட்டில் கருணாநிதி கூட வைகோவை கட்டியணைத்து பேசினார். வீட்டிற்கு வந்தவர்களை வெளியில் நிற்க வைக்க முடியாது. என்னை சந்தித்தவர்களுக்கு ஆதரவு தருவேன் என யாரிடமும் கூறவில்லை”
“நான் தி.மு.க.காரன்தான். எனது ஆதரவாளர்களும் தி.மு.க.வினர்தான். ஆனால், (என்னைப் பற்றி விமர்சித்த) சாத்தூர் ராமச்சந்திரன் தி.மு.க.வை சேர்ந்தவரா?” என்ற அழகிரியின் கேள்வியில் இருந்து, நன்றாகவே ஹோம்வெர்க் பண்ணிக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார் என்று புரிகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக