ஞாயிறு, 23 மார்ச், 2014

சுரங்க ஊழல்: பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை

நிலக்கரிச் சுரங்க ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது.
இதுதொடர்பான பல்வேறு கேள்விகளை தயாரித்து அனுப்பி, அவரிடம் இருந்து அதற்கான பதில்களைப் பெற்ற சி.பி.ஐ., விரைவில் அந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் வசம் நிலக்கரித்துறை அமைச்சகம் இருந்தபோது நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக் கருவூலத்துக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஊழல் விவகாரத்தில், நிலக்கரித்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பி.சி.பாரேக், ஆதித்ய பிர்லா குழும நிறுவனங்களின் தலைவர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், ஹிண்டால்கோ, பிஎல்ஏ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
2006-2009ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகளாக பணியாற்றிய வினி மகாஜன், ஆசிஷ் குப்தா ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் வசம் 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நிலக்கரித்துறை அமைச்சகம் இருந்தபோது நிலக்கரி தொடர்பாக பின்பற்றப்பட்ட கொள்கை மற்றும் நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் ஒதுக்கீடு செய்ய பின்பற்றப்பட்ட கொள்கை, நிலக்கரிச் சுரங்க உரிமங்கள் ஒதுக்கீடு தொடர்பான முக்கிய கோப்புகள் காணாமல் போன விவகாரம், நிலக்கரித் துறை அமைச்சக ஆய்வுக்குழு நிராகரித்த பிறகும், ஒடிஸா மாநிலம் தாலிபாராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்துக்கான உரிமம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை தயாரித்து அனுப்பி, அவரிடம் இருந்து அதற்கான பதில்களை சி.பி.ஐ. பெற்றிருக்கிறது.
இந்த ஊழல் விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள 5 வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் வரும் 26ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை சி.பி.ஐ. சமர்ப்பிக்க உள்ளது.
அப்போது டி.கே.ஏ. நாயரின் பதில் குறித்த விவரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க இருக்கிறது.  dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக