இதைக்கேட்டதும் நான் துணுக்குற்றேன்.
பிராப்தம்’’
படத்தின் வெளிப்புற படப்பிடிப்பிற்கான இடத்தை அதன் கதை அமைப்பிற்கு
ஏற்றபடி, தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணத்தை மையமாகக் கொண்டு அதன் மேற்கு
அல்லது கிழக்குப் பகுதிகளில் காவிரிக் கரையில் அமைந்திருக்கும் இயற்கை
எழில் நிறைந்த ஏராளமான கிராமங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம். சென்னையிலிருந்து 225 மைல்களுக்குள் போக்குவரத்து வசதியாகவும்,
செலவும் குறைவாகவும் இருக்கும் என்று சாவித்திரிக்கு எடுத்துக் கூறினேன்.
அவர் அதைக் கேட்கவில்லை.
‘சென்டிமென்டாக ‘மூகமனசுலு’ தெலுங்குப்பட ஷூட்டிங் நடந்த அதே
ஆந்திரப்பிரதேச கோதாவரி நதிக்கரை ஊர்தான் வேண்டும்’ என்று கூறி அங்கு
படப்பிடிப்பிற்காக ‘செட்டிங்ஸ்’ மற்றும் ஏற்பாடுகளைச் செய்ய
முனைந்துவிட்டார்.தமிழ்ப்படத்திற்கு தகுந்தவாறு – தெலுங்கு கோதாவரி நதியை நான் காவிரி நதியாக மாற்றியிருந்ததை அவர் பொருட்படுத்தவில்லை. ஒரு நேரத்தில் நான் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்ட என் அண்ணி சாவித்திரி, இப்பொழுது அவர் எது சொன்னாலும் நான் கேட்க வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கிவிட்டார்.
ஒருவருடைய கெட்ட நேரம் அவருக்கு நல்லது சொல்ல அல்லது செய்ய வருபவர்களுக்கான வாசல் கதவுகள் அனைத்தையும் அடைத்து விடும்!
வெளிப்புறப் படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளுடன் கூட, எந்த நிதி உதவியும் பெறாமல், சொந்தப் பணத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு ஆந்திராவில் ‘ராஜமுந்திரி’ அருகில் கோதாவரி நதி பாயும் ‘அமலாபுரம்’ என்னும் ஊருக்கு சாவித்திரி புறப்பட்டு விட்டார்.
புறப்பட்டுப் போய்ச் சேர்ந்த முகூர்த்தம் – அமலாபுரத்தில் அடைமழை! கோதாவரியில் வெள்ளப்பெருக்கு! அதன் காரணமாக ஏற்கனவே அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘செட்டிங்ஸ்’ நனைந்து ஊறி நாசமாகி விட்டன! மழை ஓய்ந்தபிறகு மறுபடியும் செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. இரட்டை வேலை. ஒன்றுக்கு இரண்டாக வீண் செலவு.
கத்திக் கதறிக் கண்ணீர் வடித்து அழுது, படத்திற்குப்படம், காட்சிக்குக்காட்சி தத்ரூபமாக நடித்து தன்னை வருத்திக்கொண்டு, ‘நடிகையர் திலகம்’ என்னும் பட்டம் பெற்று, சாவித்திரி கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் சேர்த்த பணம், கணக்குக்கு அப்பாற்பட்டு கோதாவரியில் அன்றாடம் நீரோடு நீராகக் கலந்து கரைந்தது!
சிவாஜியிடம் ஏற்கனவே வாங்கிய கால்ஷீட்டுடன் கூட, மேற்கொண்டும் கூடுதல் கால்ஷீட் வாங்கி, ஒரு வழியாக அவுட்டோர் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சாவித்திரி சென்னை வந்து சேர்ந்தார்.
துடுப்பின்றி தத்தளிக்கும் துன்ப நாட்களை சாவித்திரி சந்திக்க வேண்டிய சங்கடமான நிலை ஏற்பட்டது. அவர் எதிர்பார்த்தபடி படம் முன்கூட்டியே விநியோகஸ்தர்களால் வாங்கப்பட்டு, அவர்கள் மூலமாக பணம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதனால் படத்தின் வளர்ச்சி தடைப்பட்டுத் தேங்கிப்போய் தாமதப்பட்டு, இறுதியில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, ‘எடிட்டிங்’, ‘ரீரெக்கார்டிங்’ பணிகள் நிறைவு பெற்று, முதல் பிரதி எடுக்கும் வரையிலும், ஒவ்வொரு ரூபாயும் சாவித்திரியே தன் சொந்தப்பணத்தை எடுத்துச் செலவழிக்க வேண்டியதாயிற்று.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை அமைப்பில் சாவித்திரியின் ‘பிராப்தம்’ படத்திற்காக இயற்றிய ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது’, ‘சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து’, ‘நேத்துப் பறிச்ச ரோஜா – நான் பாத்துப் பறிச்ச ரோஜா’, ‘சல சல ஆத்தோட்டம்..’ ஆகிய பாடல்களை இன்றைக்குக் கேட்டாலும் செவிகள் இனிக்கும்.
அப்படி – இப்படி என்று 14.4.1971 தமிழ் புது வருடப்பிறப்பன்று ‘பிராப்தம்’ வெளிவந்து சரியாகப் போகவில்லை. வேண்டாத அந்தப் படத்தை எடுத்ததன் விளைவாக, அதுவரையில் கண்ணியமாக வாழ்ந்த அண்ணியைக் கடன் தொல்லை சூழ்ந்து கொண்டது தான் கண்ட பலன்!
‘பிடிவாதமும், எதிர்வாதமும் பெண்களுக்கே கூடாது. பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாகப் பழகத் தெரியவேண்டும் – உலகில் பார்த்து நடக்க வேண்டும் – பெண்ணே பழகத் தெரியவேண்டும்’.
‘நடிகையர் திலகம்’ சாவித்திரி நடித்து, பெரும் புகழ் பெற்ற நாகிரெட்டி – சக்ரபாணியின் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த வெற்றிப்படம் ‘மிஸ்ஸியம்மா’வில் என் ஆசான் தஞ்சை ராமையாதாஸ் இயற்றி, படத்தில் ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசன் பாடிய இந்தப்பாடல் அன்றைய நிலையில் சாவித்திரியின் வாழ்க்கைக்கும் பொருத்தமாக அமைந்தது.
‘விதி’ சில வேளைகளில் குருடாகி பார்வை இழந்துவிடுகிறது. அதனால்தான் அது நல்லவர் என்றும் பாராமல் அவர்களின் வாழ்க்கையோடு விளையாடி விடுகிறது.
அன்று ஒரே உப நதியாகக் கலந்தோடி, இன்று பிரிந்து கிளை நதிகளாகி விட்ட என் அண்ணனுக்கும், அண்ணிக்கும் இடையில், நான் ஒரே ஒருவன் மட்டும் – பலமான ‘கான்கிரீட்’ பாலமாக அல்ல – தற்காலிக ‘மூங்கில் பாலமாக’ அமைந்து போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தேன்!
மீண்டும் அந்த இருவரும் இணைய வேண்டும் என்பதற்காக, அடுத்தடுத்து நான் எடுத்த முயற்சிகள் ஒன்றுகூட எனக்குப் பலன் அளிக்கவில்லை.
தங்கம் பிளவுபட்டால், இடையில் செம்பை வைத்து உருக்கி இரு துண்டுகளையும் ஒன்றாகச் சேர்த்துவிடலாம்!
தண்ணீர் பிளவுபட்டால், உடனே ஒன்றிணைந்து விடும்!
தரை பிளவுபட்டால், இடையில் என்னதான் சேற்றையும், சிமெண்டையும் வைத்துப் பூசி இணைத்தாலும், அந்த விரிசல் இருந்து கொண்டுதான் இருக்கும்.
வெறுப்பின் எல்லைக்கு அண்ணனும், விரக்தியின் விளிம்பிற்கு அண்ணியும் சென்று விட்டதால் இருவருமே ‘ஈகோ’வினால் முழுக்க முழுக்க ‘பெஸ்ஸி மிஸ்டுகளாக’ மாறிவிட்டனர்.
அப்பொழுதெல்லாம் ஒரே நாளில் ஒரே இடத்தில் வீட்டிலோ அல்லது ஸ்டூடியோவிலோ அண்ணன் ஜெமினியையும், அண்ணி சாவித்திரியையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்து வந்த நான் இப்பொழுது இருவரையும் தனித்தனியாகப் பார்க்கும்படியான ஒரு தர்மசங்கடமான நிலைக்கு ஆளானேன்.
அண்ணனைப் பார்க்கும்போது, ‘உன் அண்ணியைப் பாத்தியா? எப்படி இருக்கா?’ என்று ஒரு வார்த்தைகூட அவர் என்னைக் கேட்பதில்லை. அதேபோல அண்ணியைப் பார்க்கும்போது, ‘ஒங்க அண்ணனைப் பாத்திங்களா? என்னைப்பத்தி ஏதாவது கேட்டாரா?’ என்று விசாரிப்பார் என நான் எதிர்பார்ப்பேன். ஆனால் தப்பித்தவறிகூட அப்படி எதுவுமே கேட்கமாட்டார். அந்த அளவிற்கு இருவருடைய இதயங்களையும் ‘ஈகோ’வும் கசப்புணர்வும் கவ்விக்கொண்டிருந்தது.
அண்ணன் இயல்பாகவே உயர்வு மனப்பான்மையோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ இரண்டுமே இல்லாத நடுத்தர நிலையில் இருப்பவர். காசு பண விஷயத்தில் மிகவும் கணக்கோடும், கவனத்தோடும் வாழ்பவர். அவரிடம் நெருங்கிப் பழகிப்பழக்கப்பட்டவர்கள் அவரை ‘கஞ்சன்’ என்று சொல்வார்கள். அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். வாழ்க்கையில் ‘வில்லாக’ வளைந்து இருக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டவர்.
ஆனால் சாவித்திரியோ அதற்கு நேர்மாறாக ‘அம்பாக’ இருப்பவர்! எப்பொழுதுமே ‘சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘உயர்வு மனப்பான்மை’ நிறைந்தவர். எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் எவரிடமும் தன்னைத் தாழ்த்திக்கொள்ள எண்ணமாட்டார்.
அண்ணி சாவித்திரியின் அந்த இயல்பான ‘ஈகோ’ என்னும் ‘தன்னுணர்வு’ இப்பொழுது தலைதூக்கி மேலோங்கி இருந்தது. அதற்குக் காரணம், ஆரம்பத்திலிருந்தே அவர் தன் கணவரான ஜெமினி கணேசனைச் சார்ந்து, அவருடைய ஆதரவின் நிழலில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அல்ல.
1952–க்கு முன்பிருந்தே சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்து சொத்துக்கள் தேடிக்கொண்டு சுகமாக வாழ்ந்து வருபவர். சொல்லப்போனால் ஜெமினியைக் காட்டிலும் சாவித்திரி – தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிப்படங்களிலும் ஏககாலத்தில் நடித்து ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமாக ஜொலித்தவர்! ஒரு காலகட்டத்தில் ஜெமினியைவிட அதிகச் சம்பளம் வாங்கியவர்! அது ஜெமினிக்கே தெரியும்.
கைதவறிய கண்ணாடி கல் தரையில் விழுந்து பிளவு பட்டதைப்போல அந்தக்காதல் தம்பதியினரின் பிரிவுக்கும், மனமுறிவுக்கும் காரணம் இது தான்.
தான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் எடுத்த ‘பிராப்தம்’ சொந்தப்படத்தில் தனக்குப்பதிலாக சாவித்திரி, சிவாஜியை நடிக்க வைத்துத் தன்னை அவமானப்படுத்தி விட்டதாக ஜெமினி ஆதங்கப்பட்டார். இதை அவரே என்னிடம் வெளிப்படுத்தினார்.
‘‘என் சொந்தப்பணத்துல நான் எப்படி வேணுன்னாலும், யாரை வச்சி வேணுன்னாலும் படம் எடுப்பேன். ஏன்? போன தடவை ‘குழந்தை உள்ளம்’ படத்திலே இவரை ஹீரோவா நான் நடிக்க வைக்கலியா? ‘பிராப்தம்’ படம் எடுத்தது பிஸ்னஸ் ரீதியிலே. அதுக்கு இவர் என் கணவர்ங்குற முறையில் பக்கத்தில் இருந்து உதவி செய்து எனக்கு ஆதரவு அளிக்கவேண்டாமா? எக்கேடாவது கெட்டு ஒழிஞ்சிப்போன்னு ஒதுங்கிக்கிட்டா எப்படி?
தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணிட்டு, தன்னந்தனியா நடுக்கடலில் ஒரு தீவுல நின்னு தவிக்கிற நிலைக்கு நான் ஆளாயிட்டேன். என் தலையெழுத்து. எனக்கு இவர் கைகொடுத்துக் காப்பாற்ற வேண்டாமா? இவரை விட்டா இந்த சினிமா உலகத்துல எனக்கு வேற யார் இருக்காங்க? அநியாயத்துக்கு என்னைக் கைவிட்டுட்டு ஒரேயடியாக ஒதுங்கிக்கிட்டாரே.
முந்தி மாதிரி தினமும் என் வீட்டுக்கு வர்றதும் இல்லை. எப்போதாவது வர்றாரு. வந்தாலும் என்னோட முகம் கொடுத்துப் பேசுறதும் இல்லை. அவர் பேசலேங்கும்போது நான் ஏன் அவரோட பேசணும்? நானும் பேசுறதில்லை. அப்புறம் இவரு எனக்கு எதுக்கு? இதுக்குத்தானா – அன்னிக்கு எங்க பெரியப்பா (வளர்ப்புத் தந்தையான சவுத்திரி) அவ்வளவு தடுத்தும் அதையெல்லாம் மீறி, ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைங்களோட இருக்கிற இவரை மனசார விரும்பிக் கட்டிக்கிட்டேன்?
‘இப்போ உனக்கு சந்தோஷமா இருக்கும். பின்னால நீ ரொம்ப கஷ்டப்படுவே’ன்னு அப்போ பெரியப்பா சொன்னது சரியாப்போயிடுச்சி.
உங்களுக்கு நான் ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டேன். இப்போ சொல்றேன். நான் நல்லா இருந்தப்போ – நிறைய சம்பாதிச்சப்போல்லாம் பக்கத்திலேருந்து எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு எனக்கு உதவியாக இருந்த மானேஜர் நாகலிங்கம் இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஆபீஸ் சாவிக்கொத்தை எங்கிட்டே கொடுத்திட்டு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வேலையில் இருந்து நின்னுட்டார்.
நான்:– அப்படியா? ஐயோ அவர் ரொம்ப நல்லவர். நம்பிக்கையானவராச்சே. ஏன் இப்படி திடீர்னு நின்னுட்டார்.
சாவித்திரி:– பேங்க் அக்கவுண்ட், வரவு – செலவு, டேக்ஸ் கணக்கெல்லாம் அவருக்குத்தான் தெரியும். எனக்கு எதுவுமே தெரியாது. இப்போ என்ன செய்றதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. ராத்திரியில் படுத்தால் தூக்கமே வரமாட்டேங்குது. ஏதேதோ ஞாபகமெல்லாம் வருது. டாக்டர் கிட்டே கேட்டேன். செக் பண்ணிப் பார்த்திட்டு ஹைடயாப்டிஸ் (சர்க்கரை நோய்) உண்டாயிருக்கு என்று சொன்னார். எதுக்காக இப்படி ஒரு நரக வாழ்க்கை? வேண்டாம். ஒவ்வொரு சமயம் நினைக்கிறேன்.... பேசாம... இந்த உலகத்தை விட்டே... என்று சொல்வதற்குள் நான் சட்டென்று என் அன்பிற்கினிய அண்ணி சாவித்திரியின் வாயை என் கையால் மூடி அவர் பேசாதபடி செய்தேன். மேற்கொண்டு பேசமுடியாமல் அவர் என் கையை இறுகப் பற்றிக்கொண்டு – அடம் பிடித்து, அம்மாவிடம் அடி வாங்கிய ஓர் அறியாக்குழந்தைபோல தேம்பித்தேம்பி அழுதார். அதை என்னால் தாங்க முடியவில்லை.
அப்பொழுதெல்லாம் துடுக்குத்தனமாக வெடுக்வெடுக்கென்று பேசி கள்ளங்கபடமில்லாமல் கலகலவென்று சிரித்து தன் ஆசைக் கணவரையும், அன்புக் கொழுந்தனான என்னையும் கலாட்டா பண்ணிக் கேலி செய்து மகிழும் அந்த அன்பு அண்ணி இன்று துன்ப மிகுதியால் துடிப்பதைக்கண்டு நானும் துடித்துப்
போனேன்.
இந்த அவல நிலை அவராகத் தேடிக்கொண்டது என்றுதான் முதலில் நான் எண்ணியிருந்தேன். அப்படி இல்லை என்ற உண்மை பின்னால்தான் எனக்குத் தெரியவந்தது. அதுவும் அவர் வாயிலாகவே!
‘சும்மாக் கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி’ என்பதைப்போல அந்நாட்களில் சாவித்திரியைச் சுற்றியிருந்த நெருங்கிய தோழிகளாகிய சில பெரிய இடத்துப்பெண்கள் சேர்ந்து...
‘‘நீ சிறந்த நடிகை மட்டுமல்ல – நல்ல புத்திசாலியும்கூட. சினிமாவில் உனக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இல்லை. அத்துடன் கூட, வேண்டிய அளவுக்கு பண வசதியும் இருக்கிறது. அதனால் கண்ணாம்பா, பானுமதி, அஞ்சலிதேவி மாதிரி கம்பெனி ஆரம்பிச்சி சொந்தப்படம் எடுக்கலாம். பானுமதி மாதிரி நீயே டைரக்ட் பண்ணலாம். நிறைய புகழும், பணமும் கிடைக்கும்’’ என்று அடிக்கடி கூறி சாவித்திரி சொந்தப்படம் எடுத்து அதை அவரே டைரக்ட் செய்யவேண்டும் என்ற ஆசையைத் தூண்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் வசதி படைத்த குடும்பத்துப் பெண்கள். ஆதலால், எந்தக் கவலையும் இல்லாமல் பொழுது போக்குவதற்கென்றே சாவித்திரி போன்ற சினிமா நடிகைகளுடன் நட்பு வைத்துக்கொண்டு தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக்கொள்பவர்கள்.
பானுமதி அம்மா மாதிரி சொந்தப்படம் எடுத்து டைரக்ட் செய்யலாம் என்று சொன்னதற்குப் பதிலாக, பரணி ஸ்டூடியோ போல சொந்த ஸ்டூடியோ கட்டலாம் என்று சொல்லி ஆசை உண்டாக்கி, அது நிறைவேறி இருக்குமானால் சாவித்திரியின் தலை எழுத்தே மாறி இருந்திருக்கும் அல்லவா!
வரவு – செலவு கணக்கு சரியாகச் சமர்ப்பிக்கப்படாததால் நிறைய வருமானவரி விதிக்கப்பட்டதுடன்கூட அன்றைய பிரபல அரசியல் பிரமுகர் ஒருவர் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தை வைத்துக் காட்டிக்கொடுத்து அதனால் வருமான வரித்துறையினர் சாவித்திரியின் வீட்டைச் சோதனை போட்டு அவர் வைத்திருந்த மிச்சம் மீதிப்பணத்தை எல்லாம் சட்டப்படி எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.
ஒருவருடைய வாழ்க்கையில் அவருடைய காலநேரத்திற்கேற்ப ‘இன்பம்’ ராஜினாமா செய்துவிட்டு அவரிடமிருந்து விலகி வெளியேறியவுடன், தக்கத் தருணத்திற்காகக் காத்திருக்கும் ‘துன்பம்’ உள்ளே புகுந்து இன்பம் இருந்த அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விடும்!
அதேபோல கோடைக்காலம் விடைபெற்றதும், குளிர்காலம் வருவதைப்போல, துன்பத்தின் காலம் முடிவுற்றதும் இன்பத்தின் ஆட்சி தொடங்கும். இது இயற்கையின் நியதி!
ஜெமினி–சாவித்திரி பிரிவு
இயற்கையாகவே சாவித்திரியின் முகத்தில் மேக்–அப் இல்லாமலேயே ஒரு மென்மையும், மெருகேறிய மினுமினுப்பும் இருக்கும்.
சில நடிகைகள் நேரில் பார்ப்பதைவிட படத்தில் பார்க்கும்போது கூடுதல் அழகாக இருப்பார்கள். சில நடிகைகள் படத்தில் பார்ப்பதைக் காட்டிலும் ஒப்பனை இல்லாமல் நேரில் பார்க்கும் பொழுது இன்னும் அழகாகத் தோன்றுவார்கள்.
சாவித்திரி இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். அதனால்தான் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஏற்ற வகையில் அவருடைய மென்மையான முகம் எடுப்பாகவும், பொருத்தமாகவும் இருந்தது.
‘பிராப்தம்’ படத்தை இப்பொழுது பார்த்தாலும் தெரியும் – ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் தோன்றுவதைவிட, வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளில் சாவித்திரியின் முகம் அவருக்கே உரிய அந்த மென்மையையும், மினுமினுப்பையும் இழந்து சற்று வறண்டு, காய்ந்து போய் காணப்படும். அதற்குக்காரணம் டென்ஷன், எமோஷன், நிம்மதியின்மை, நித்திரையின்மை.
இவ்வளவிற்கும் ஜெமினி கணேசன் சாவித்திரியிடம் என்ன ஏது என்று எதுவுமே கேட்கவில்லை. அதற்குக்காரணம், ஆரம்பத்தில் அவர் சொன்னதை இவர் கேட்கவில்லை. நாளடைவில் சாவித்திரியின் இல்லத்திற்கு வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஜெமினி குறைத்துக்கொண்டார்.
1958 டிசம்பர் 2–ல் முதல் மகள் விஜய சாமுண்டீஸ்வரி பிறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சாவித்திரி இரண்டாவது முறையாக கருத்தரித்தார். ஆண் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வதற்காக ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை சென்ற அந்தக் காதல் தம்பதிகள் கடும் புயலில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலை உண்டாகி, பொதுமக்கள் உதவியுடன் படகில் ஏற்றப்பட்டுக் கரை சேர்ந்தனர்.
அந்தக் கண்ணியமான தாம்பத்ய அந்நியோன்யம் இப்பொழுது கறைபடத்தொடங்கியது.
ஜெமினி ஆசார அனுஷ்டான மிக்க பிராமண குலத்தில் பிறந்தவர் – அதோடு கூட ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்பவர் என்பது சாவித்திரிக்குத் தெரிந்திருந்தும் – சாவித்திரி ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்பதை ஜெமினி அறிந்திருந்தும், அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், ஜாதி, மதக் கொள்கை, கோட்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு – சாவித்திரியின் ஒன்றுவிட்ட பெரியப்பாவும், வளர்ப்புத்தந்தையுமான சவுத்திரியின் கண்டிப்பையும், கறாரையும் மீறிக் கடந்து, இருவரும் ஒருவரை ஒருவர் உளமாற விரும்பிக் காதலித்து, முறையாகத் திருமணம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தனர்.
என் அன்பிற்கினிய அண்ணனும், என் பாசமலரான அண்ணியும் ஒன்று சேர்வதற்கு எந்த ஒரு சினிமா படம் ‘மனம் போல் மாங்கல்யம்’ காரணமாக இருந்ததோ – அதேபோல, கருத்து ஒருமித்திருந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டானதற்கும் ஒரு சினிமா படமே காரணமாக அமைந்தது.
அதுதான் சாவித்திரியின் ‘பிராப்தம்!’ இந்த வடமொழிச் சொல்லுக்கு முன்வினைப் பயன் என்று பொருள்.
பெண் துணை இன்றி ஒரு ஆண் மகன் எப்படியாவது வாழ்ந்து விடலாம். வாழ்ந்து விடுவான். ஆனால் ஒரு பெண் – அவள் பிறந்தது முதல் தந்தை உடன் பிறந்த சகோதரர், வளர்ந்து பூப்பெய்தி திருமணமானதும் கைப்பிடித்த கணவன்! அவன் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகள்! பிறகு பேரப்பிள்ளைகள்! கொள்ளுப்பேரன்கள்!
இப்படி ஆண்களையே ஆதாரமாகக் கொண்டுள்ள அவள், தனக்கென்று ஓர் ஆண் துணையின்றி வாழலாம் என்பது வேறு – வாழ முடியாது – வாழக்கூடாது என்பது அனுபவபூர்வமாக அறியப்பட்ட உண்மை. ஒரு கொடி மரத்தை ஆதாரமாகக் கொண்டு படர்வதைப்போல, ஒரு பெண் ஆணை ஆதாரமாகக் கொள்வது தான் அவளுக்குப் பக்கபலமும் பாதுகாப்பும் ஆகும்!
ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில், அவளுடைய வாழ்க்கை ஒரு படகு! அதில் ஆண் ஒரு துடுப்பு! அந்தத் துடுப்பின் துணை கொண்டுதான் அவள் தன் வாழ்க்கைப் படகை குடும்பக் கடலில் செலுத்த முடியும்.
ஏமாற்றிய உறவினர்கள்
வருமானவரி பிரச்சினை, அத்துடன் படம் எடுத்தது சம்பந்தமாக ஏற்பட்ட கடனுக்கான வட்டி செலுத்தத் தவறியது போன்ற காரணத்துக்காக சாவித்திரி பிரச்சினையில் சிக் கினார்.
இதனால், சாவித்திரி பார்த்துப் பார்த்து, ஆசை ஆசையாகக்கட்டிய அபிபுல்லா சாலை பங்களா ‘ஜப்தி’ செய்யப்படப்போவதாக அவர் வீட்டிற்கு எதிரிலேயே தெருவில் தண்டோரா போடப்பட்டது.
அதைக்கண்டு சாவித்திரி துன்பத்தில் துடித்தார்.
உடனே தன்னிடமிருந்த விலை உயர்ந்த நகைகளை எல்லாம் நான்கைந்து பாகமாகப் பிரித்துத் தனித்தனியாகக் கட்டிப் பெட்டியில் வைத்து, தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் என்று நினைத்திருந்த நபர்களிடம் கொடுத்து வைத்தார்.
அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் – சென்னை அண்ணா நகரிலிருந்த அன்றைய பிரபல தெலுங்கு நடிகர், அவருடைய மனைவி. மற்றும் ஐதராபாத்திலிருந்த சாவித்திரியின் ரத்த உறவு கொண்ட பெண்ணும், அவருடைய கணவரும் ஆவார்கள். அவர்கள் மூலம் சாவித்திரி ஐதராபாத்தில் தன் சொந்தப்பணத்தில் இரண்டு வீடுகள் வாங்கி அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். அவற்றில் ஒரு வீட்டில் அவர்கள் வசித்துக்கொண்டு, இன்னொரு வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணத்தை சாவித்திரிக்குக் கொடுக்காமல் அவர்களே அனுபவித்து வந்தனர்.
கஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக அந்த வீடுகளைத் திருப்பித் தனக்குக் கொடுக்கும்படி சாவித்திரி கேட்டதற்கு அவர் மறுத்து ஒரு வீட்டை மட்டும் அவர் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை – ‘பினாமி’ என்ற முறையில் தனக்கே சொந்தமாக்கிக் கொண்டு சாவித்திரிக்கு ‘நம்பிக்கை துரோகம்’ செய்துவிட்டார்.
அந்த தெலுங்கு நடிகரும், அவரது மனைவியும், சாவித்திரி தியாகராயநகர் வீட்டை விட்டு அண்ணா நகருக்கு வந்துவிட்டால், அவரைத் தாங்களே கவனித்துக் கொள்வதாகக்கூற, சாவித்திரியும் அதற்குச் சம்மதித்தார். அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் வேறொரு வாடகை வீட்டைப் பார்த்து அதில் சாவித்திரியைக் குடிவைத்தனர்.
மகுடம் சூடாத மகாராணியாக தன் சொந்த மாளிகையில் வாழ்ந்து மகிழ்ந்த அந்த மாடப்புறா இப்பொழுது ஒரு சிறு வாடகை வீட்டில் அல்ல, கூட்டில் அடைப்பட்டது.
பின்னர் அவர்களும் சாவித்திரி கொடுத்து வைத்திருந்த நகைகளைக் ‘கையாடி’னார்கள்.
எவருடைய போதனையோ அல்லது விதியின் சோதனையோ – சாவித்திரி தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் 11 கிரவுண்டில் கட்டி வாழ்ந்து மகிழ்ந்த அந்த அழகிய பங்களாவை விற்றுக் கடன்களை அடைத்துவிட முடிவு செய்து கணவர் ஜெமினிகணேசனுக்குத் தெரிவித்தார். அவரும் வேறு எந்த ஒரு வழியும் இல்லாத நிலையில் அவருக்குத் தெரிந்த ஒரு மார்வாடி செல்வந்தரை அழைத்து வந்து விலை பேசி வீட்டை விற்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சாவித்திரியின் அந்தக் கனவு மாளிகை கடனுக்காகக் கைவிட்டுப் போனது. அத்துடன் அண்ணியைக் கவ்விக்கொண்டிருந்த கடனும் தீர்ந்தது.
‘தீமையிலும் நன்மை, துன்பத்திலும் இன்பம்’ என்பது போல, நல்லவேளையாக பிரதான – மெயின் பங்களாவின் மேலண்டைப் பகுதி மனை சாவித்திரியின் மகள் விஜயசாமுண்டீஸ்வரி என்கின்ற ‘விஜி’யின் பெயரில் பத்திரப்பதிவு ஆகி, அதில் அமைந்திருந்த கட்டிடம் சாவித்திரி கட்டியிருந்தாலும், மனை மகளின் பெயரில் இருந்ததால், அதில் யாரும் கைவைக்க முடியவில்லை.
பிற்காலத்தில் அந்தக் கட்டிடங்களை அகற்றியும், மாற்றியும் வேண்டிய நவீன வசதிகளுடன் கூடியதாகக் கட்டிக்கொண்டு அதில்தான் இன்றைக்கும் ‘விஜி’ குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக