திங்கள், 10 மார்ச், 2014

தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி ! 5 தொகுதிகள் OK !

ஒருவேளை இந்த டீல் கிளிக் ஆகி, காங்கிரஸூக்கு 5 தொகுதி கொடுக்கப்பட்டால்… 50 கோஷ்டிகள் உள்ள தமிழக காங்கிரஸில், எந்த 5 பேருக்கு சீட் கொடுப்பது?
மவனே.. அப்போதுதான் சத்யமூர்த்தி பவனில் ஓடும் ரத்த ஆறு!
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்” என்ற நிலைப்பாட்டில் உள்ள ஸ்டாலினிடம் பேசி அவரது முடிவை மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சியின் தூதர்களும், சில தி.மு.க. வி.ஐ.பி.களும் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் உறவுக்கு, ‘நிபந்தனை ஆதரவு’ தர தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தயாராக உள்ளதாக தகவல் உள்ளது.
இதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்திக்க மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் சென்னை வரவிருப்பதாக தி.மு.க. வட்டாரங்களில் பேச்சு உண்டு. குலாம் நபி ஆசாத்தின் வருகையை டி.ஆர்.பாலுவும் உறுதி செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர் ஒருவரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். “காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவு வாக்கு இருந்தாலும், மும்முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அதுவே சில நேரங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும்” என அந்தத் தலைவர் கருணாநிதியிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, “ஸ்டாலினுடன் பேசிப் பார்க்கிறேன்” என்று கூறியதோடு, “காங்கிரஸ் கட்சிக்கு கடந்த காலங்களைப் போல தொகுதிகள் ஒதுக்க முடியாது. நாம் கொடுப்பதை அவர்கள் வாங்கிக் கொள்ள தயாரா என்று கேளுங்கள்” என்று கூறினாராம்.
“நீங்கள் கொடுப்பது என்றால், அந்த எண்ணிக்கை எந்தளவில் இருக்கும்?” என முஸ்லிம் தலைவர் கேட்டிருக்கிறார்.
“கம்யூனிஸ்ட் கட்சிகள் நம்ம பக்கம் வரலாம் என்ற சாத்தியத்துக்காக, அவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வீதம், 4 தொகுதிகள் வைத்திருந்தோம். கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக வைத்திருந்த 4 தொகுதிகளை காங்கிரஸூக்கு ஒதுக்கலாம்.
வேண்டுமானால், அதிகபட்சம் புதுவையையும் சேர்த்து 5 தொகுதிகள் ஒதுக்கலாம். அதுவும் ஸ்டாலினுடன் பேசித்தான் முடிவு சொல்ல முடியும்” என்றாராம் கருணாநிதி.
கருணாநிதியின் இந்தத் தகவலை அந்த முஸ்லிம் லீக் தலைவர், டில்லி காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் பாஸ் செய்து விட்டார்.
மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வாசன், ஞானதேசிகன், ப.சிதம்பரம் ஆகியோரிடம் இது குறித்து நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தவரை கூட்டணி விஷயத்தில் அவர்களுக்கு எதுமே தெரியாத நிலைதான் உள்ளது. கூட்டணி பற்றி “டில்லி தலைமை பார்த்துக்கொள்ளும்” என ஒற்றை வரி பதிலையே தருகின்றனர். டில்லி என்ன சொல்கிறதோ அதுதான் வேத வாக்கு.
டில்லி காங்கிரஸ்காரர்களிடம் பேசிப் பார்த்ததில், “தமிழகத்தில் காங்கிரஸூக்கு உள்ள ஒரே சாய்ஸ் தி.மு.க.தான்” என்கிறார்கள். இதனால், எப்படியும் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துவிடுவது என்ற தீர்மானத்தில் டில்லி தலைமை உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் விரும்புகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கூட்டணியை ஸ்டாலின் விரும்பாததால் அவர்களால் மேற்கொண்டு எதையும் செய்ய முடியாத நிலை உள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க கனிமொழி மறைமுகமாக சில காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் உள்ளன.
தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படுத்த மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் தலைமை அசைன்மென்ட் கொடுத்துள்ளது. டி.ஆர்.பாலுவுடன் இவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பாலுவோ, இதுவரை எதையும் கமிட் செய்யாமல் நழுவிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஏன் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் சில தொகுதிகளில் வெற்றிபெற முடியும். ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமையும் நிலை ஏற்பட்டால் (அதீத கற்பனைதான்.. இருந்தாலும் இது அவர்களது நினைப்புதானே), தி.மு.க. தயவும் தேவைப்படும் எனக் கருதுகிறது.
இவற்றையெல்லாம் விட தி.மு.க.வுடன் கூட்டணி சேராமல் போனால், தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு டெபாஸிட்டே பறிபோய்விடும் என்பதைப் பற்றியும் காங்கிரஸ் டில்லி பிரதிநிதிகள் கவலைப்படுகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
இப்படியான நேரத்தில்தான் கருணாநிதியின், “5 தொகுதி ஓகேவா… கேட்டுச் சொல்லுங்கள்” காமென்ட், டில்லிக்கு போயிருக்கிறது.
டில்லியில் இருந்து சென்னைக்கு போன் அடித்தால், தமிழகத் தலைவர்கள் அவசர அவசரமாக, “பரவாயில்லை.. 5 தொகுதிகள் என்றாலும் ஓ.கே. சொல்லுங்கள்” என்கிறார்களாம், மிக்க ஆர்வத்துடன்!
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது சரிதான். ஒருவேளை இந்த டீல் கிளிக் ஆகி, காங்கிரஸூக்கு 5 தொகுதி கொடுக்கப்பட்டால்… 50 கோஷ்டிகள் உள்ள தமிழக காங்கிரஸில், எந்த 5 பேருக்கு சீட் கொடுப்பது?
மவனே.. அப்போதுதான் சத்யமூர்த்தி பவனில் ஓடும் ரத்த ஆறு!
viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக