திங்கள், 10 மார்ச், 2014

புதுவை:14 ஆண்டுகளில் 9 மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மரணம்


வினோதினி உட்பட 9 மாணவிகளின் உயிரைப் பறித்த மணக்குள வினாயகர் பொறியியல் கல்லூரி கல்விக்கூடமா? கொலைக்கூடமா?
வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே கூறுகின்றனர்.புதுவை மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள மணக்குள வினாயகர் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்&எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் படித்து வந்தார்  வினோதினி என்ற மாணவி.
பிப்ரவரி மாதம் 24-ம் தேதி திங்கள் கிழமை வினோதினி கல்லூரிக்கு சென்ற ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே கல்லூரியிலிருந்து பெற்றோர்களுக்கு போன் வருகிறது. போனில், “உங்கள் பெண் மயக்கம் அடைந்து விட்டார். உடனே வாருங்கள்” என்று அழைப்பு. ஆனால் அங்கு போனால்,”ஆசிரியர் என்ற முறையில் கண்டித்ததற்காக அது 5-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது. பெண் இறந்து விட்டது” என்று நிர்வாகம் கூறியிருக்கிறது.
வினோதினியின் பெற்றோருடன் தொடர்புடைய சி.பி.ஐ. (எம்.எல்) கட்சியினரும், வினோதினியின் தந்தைக்கு ஆதரவான அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகம் என்கிற தலித் அமைப்பும் சென்று பார்த்த போது வினோதினி அவசர பிரிவில் காலையில் கல்லூரிக்கு கிளம்பி போகும்போது எப்படி சென்றாரோ அதே போல் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உயிர் வினோதினியைவிட்டு பிரிந்திருந்தது. தலையில் சுவற்றில் மோதியதைப்போல சிறு ரத்த கசிவு, ஒரு பக்க தோள் பட்டையில் சிறு கீறல் மட்டுமே இருந்தது.

இதை கண்ட உறவினர்களும் ஜனநாயக சக்திகளும் “5-வது மாடியில் இருந்து விழுந்தது என்றால் உடல் சேதம் அதிகமாக இருந்திருக்கும், விழுந்த இடத்தில் எந்த தடயமும் இல்லை, வினோதினி விழுந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் மாணவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம், மேலும் அந்த இடம் செக்யூரிட்டி பாயிண்ட். இவர்களை யாரை கேட்டாலும் நாங்கள் பார்க்கவில்லை, எங்களுக்கு தெரியாது. இதைத்தான் சொல்லுகிறார்கள். எனவே  இது தற்கொலையில்லை, எனவே போலீசுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்தது யார்? அவர்களை விசாரிக்க வேண்டும்” என்று கேட்டதற்கு நிர்வாகம் “தெரியாது” என்றார்கள்.
வினோதினி மரணத்திற்கு கல்லூரி நிர்வாகம் சொல்லும் காரணம்: ‘அந்த பெண் சரியாக படிப்பதில்லை, ரெக்கார்டு நோட்டில் அதுவே திருத்தி கையெழுத்து போட்டுக் கொண்டது. இதை கண்டித்ததற்காக அது 5-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் எப்படி பொறுப்பேற்க முடியும்?’ என்பதுதான்.
ஆனால் வினோதினி ரெக்கார்டு நோட்டில் கையெழுத்து போட்டுக் கொண்டதாக கூறப்பட்ட அன்று (வெள்ளிக் கிழமை) வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே (பெயர் சொல்ல அஞ்சுகின்றனர்) கூறுகின்றனர். மேலும் ஆசிரியர்கள் வினோதினியிடம், “உனது பெற்றோரை அழைத்துவா” என்று சொல்லி இருக்கிறார்கள். வீட்டில் வினோதினி நடந்தது பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால், “பிறகு வருகிறோம். நீ கல்லூரிக்கு போ” என்று சொல்லவே விருப்பமில்லாமல் அவர் கல்லூரிக்கு போனதாக பெற்றோர்களே சொல்லுகிறார்கள்.
கல்லூரி நிர்வாகம் பிரச்சினை பெரிதாகி விடாமல் பஞ்சாயத்து செய்து தீர்க்கப் பார்த்தது. லிபரேஷன்  கட்சி பஞ்சாயத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்பேத்கர் மறுமலர்ச்சி கழகம் ஒத்துக்கொண்டது. இதில் முரண்பட்டு லிபரேஷன் அங்கிருந்து வெளியேறி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணிக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாகபுஜதொமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டு இருந்தோம். ஆனால் போலீஸ் புஜதொமுவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றனர். மற்ற அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கேட்டதற்கு, “அவர்கள் யார் என்றும், நீங்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியும். எனவே உங்களுக்கு தரமுடியாது” என்று எஸ்.பி.  நேரில் மறுத்து விட்டார்.
மற்ற அமைப்பினருடன், மாணவர்களின் போராட்டத்தில் பங்கு பெற்று பு.ஜ.தொ.மு வின் சார்பாக தனியார்மய கல்வியை அம்பலப்படுத்தி பேசப்பட்டது. மற்றும் வினோதியின் இறுதி சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களை,  தனியார்மய கல்வி கொள்கையும், அது விளைவிக்கும் கோரவிளைவுகளையும் அம்பலப்படுத்தி முழக்கமிட செய்யலாம் என்று முயன்ற செய்தபோது,  எஸ்.எஃப்.ஐ(சிபிஎம்மின் மாணவர் இயக்கம்) “இப்படி வேண்டாம், மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என்றுதான் செய்வார்கள். அதை கட்டுப்படுத்தக்கூடாது” என்று மறுத்தனர். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதனோ, “அப்படி விட முடியாது. முழக்கமிடுவதுதான் சரி, தோழர்கள் சொல்வதுதான் சரி” என்று கூற மாணவர்கள் முழக்கமிட்டார்கள்.
ஊர்வலம் நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முன்னணியாக பு.ஜ.தொ.மு செஞ்சட்டை தோழர்கள் எழுச்சிமிக்க முழக்கமிட்டது மக்களையும், மாணவர்களையும் முழக்கமிட வைத்தது. எமது முழக்க பிரசுரத்தை கேட்டு வாங்கி படித்து வைத்துக் கொண்டார்கள். “வினோதினியின் உயிர் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாணவர்களின் உயிர் பறிப்புக்கும் காரணம், கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களின் ரத்தத்தை உறிவதும் தனியார்மய கல்வி கொள்கைதான், இதை ஒழிக்காமல் விடிவில்லை” என்ற முழக்கம் கூடி இருந்த மாற்று கட்சிகளையும், பொது மக்களையும் ஈர்த்தது.
ஊர்வலமாக சென்று கொண்டு இருக்கும்போதே பு.ஜ.தொ.மு மாநில தலைவர் தோழர் பழனிச்சாமிக்கு லேன்ட் லைனில் இருந்து போன் செய்து, “உங்களது அமைப்பு எதற்கு இதில் தலையிடுகிறது? நீங்கள் முன்னாடி கோஷம் போட்டுக் கொண்டு போறீங்க. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு நிர்வாகம் என்ன செய்யும்? உண்மையை ஆராயாமல் நீங்கள் முடிவு எடுத்து இருக்கீங்க” என்று நிர்வாகத்தின் கையாள் ஒருவன் பேசினான். அதற்கு தோழர், “நாங்கள் ஆய்வு செய்துவிட்டுதான் முடிவு செய்து இருக்கிறோம், நீ யார்” என்று கேட்டதற்கு போனை துண்டித்து விட்டான்.
மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து எர்னஸ்ட் பால், பவானி, கீதா, பிரியதர்ஷினி ஆகிய நான்கு பேராசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக 306 பிரிவின்படி வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு பேரில் இரு பெண் பேராசிரியர்கள் தமக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
தொடர்ச்சியான மாணவர்களின் போராட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) –ன் சுவரொட்டி பிரச்சாரம் ஆகியவற்றை கண்டு ஆத்திரம் அடைந்த கல்லூரி முதலாளி சுகுமார், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களை அழைத்து “போராட்டத்திற்கு செல்லக்கூடாது” என்றும், “அந்த மாணவி செய்த தவறுக்கு பொய்க் குற்றம் சாட்டி ஆசிரியர்களை கைது செய்தது தவறு. அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றும் “நாம் கல்லூரியின் சார்பாக பேரணியாக சென்று கவர்னர் இடம் மனுக்கொடுக்க போகிறோம். அதற்கு அனைவரும் வரவேண்டும். இதுக்கு வரவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்வேன்”  என்று மாணவர்களையும், ஊழியர்கள், டாக்டர்கள், செக்யூரிட்டி என அனைவரையும் மிரட்டி 3,000 பேரை திரட்டி பேரணி நடத்தினார். இதை அக்கல்லூரி மாணவர்களே காரி உமிழ்ந்தார்கள்.
மேலும், சுகுமார், கல்லூரியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளை கண்டித்து சுவரொட்டியும் மற்றும் பத்திரிக்கையில் அறிக்கையும் கொடுத்துள்ளார். அதில் பு.ஜ.தொ.மு உட்பட போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைத்து அமைப்புகளையும் அமைப்பு பெயர்களை அறிவிக்காமல் தீய சக்திகள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் அமைப்புகள் என பொதுவாக பேசி இவர்கள் பணத்துக்காக இப்படி போராட்டம் செய்து மிரட்டுகிறார்கள். உடனடியாக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார். ஏதோ தான் யோக்கியனைப்போலவும், இவர்கள் மீது வீண் பழியை போடுவதை போலவும் பதறும் நிர்வாகத்தின் யோக்கியதை என்ன?
கல்லூரி முதலாளி கேசவன் துவக்கத்தில் சாராய வியாபாரியாக இருந்தவர். கல்வி தனியார் மயம் ஆரம்பமான பிறகு சாராய வியாபாரத்தை விட்டுவிட்டு கல்வி வியாபாரத்தில் இறங்குகிறார். இந்த மருத்துவக்கல்லூரி தவிர மயிலம் என்கிற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்தி வருகிறார். ஜானகிராமன் புதுவை முதல்வராக இருந்தபோது இந்த கல்வி வியாபாரி அரசு கொறடாவாக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான் நிறைய பணத்தை சுருட்டினார். கல்லூரி தவிர ரவுடிகளை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற பண்ணையார் வேலைகளையும் செய்து வந்தார். ஆனால் அனைத்து கட்சியையும் தனது பண பலத்தால் வளைத்து போடுவது, தனது பணபலம், அரசியல் பலம், போலிஸ் பலம், ரவுடிகளின் பலத்தால் தனது ஆளுமையை பெருக்கிக் கொள்வது. கோடி கோடியாய் சுருட்டுவது என்பதுதான் கேசவனின் அடித்தளம். கேசவன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போய்விட்டதால்  இன்றைக்கு கேசவனின் மச்சான் சுகுமார்தான் கல்லூரியின் சேர்மன்.
கல்லூரி கட்டப்பட்டதிலிருந்தே கல்லூரியில் சுகுமாரின் ஆதிக்கம் இருந்து வருகிறது. கல்லூரியில் நடக்கும் கொலைகளுக்கு சுகுமாரின் பங்களிப்பு அதிகம்.  மேலும் மதகடிப்பட்டு பகுதியிலே இயங்கும் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் சங்க தலைவராகவும் இருப்பவர் இந்த அயோக்கியர். இந்த பள்ளியில் மாணவர்கள் ஏதாவது தமது உரிமைகளுக்காக போராடினால் அதை தமது கூலிப் படையை வைத்து மிரட்டுவதும் உண்டு.
இங்கு கல்லூரி ஆரம்பித்த 14 ஆண்டுகளில் வினோதினி உட்பட 9 மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதில் வினோதினி தவிர மற்ற மாணவிகள் விடுதியில் தங்கி படித்தவர்கள் என்பதும் இதில் பலர் வெளி மாநில மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி நிவேதிதாவும், மே 17-ம் தேதி திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாமாண்டு மாணவி பிரியதர்ஷினியும் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாக நிர்வாகம் அறிவித்து அவர்களது மரணத்தை மூடி மறைத்தது.
வினோதினி மட்டும் கல்லூரியில் இருந்த பக்கத்து நகரப்பகுதியில் இருப்பதால் வீட்டில் இருந்தே செல்பவர். வினோதினிக்கு முன்பு இறந்துபோன பல மாணவிகளின் மரணத்திற்கு பேராசிரியர்களின் பாலியல் கொடுமைகளும் காரணம் என்பது உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இறந்த மாணவிகளைப் பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக, வினோதினிக்கு முன்பு இறந்துபோன பிரியதர்ஷினியின் பெற்றோர்கள்தான் முதன்முதலில் பிரச்சனையை வெளியில் கொண்டு வந்தார்கள். அதுவும் சில வாரங்களிலேயே சரிக்கட்டப்பட்டது.
பொதுவாகவே கல்லூரி நிர்வாகம் இந்த விசயத்தில் பேரம் பேசியோ அல்லது மிரட்டியோ பிரச்சனையை ’கப்சிப்’ ஆக்குவது வழக்கம். வினோதினி மரணத்திற்கு முன்பு இத்தனை கொலைகளுக்கும் காரணமான கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, பிரச்சனையும் பெரிய அளவில் வெளியில் வரவில்லை. ஆனால் வினோதினி மரணத்தில் பிரச்சனை வெளியில் வந்தது, வழக்கு போட்டு 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்கள் அடிபணியவில்லை என்பதுதான் உண்மை. மேலும் ஜனநாயக சக்திகள் மற்றும் மாணவர்களின் மறியல் போராட்டங்களும் காரணம்.
இந்த சமூகத்தில் யாருக்கு அநீதி நடந்தாலும் உழைக்கும் வர்க்கம் அணிதிரண்டு போராடினால் மட்டுமே குற்றவாளிகளை தண்டிக்க முடியும். தனியார்மயம், தராளமயம்,உலகமயம் ஆகிய கொள்கையின் விளைவாக நாடு முழுவதும் இப்படி எண்ணற்ற சமூக விரோதிகளையும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளையும் உருவாக்கி இருப்பதுதான் மிச்சம். இதனால் சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரையில் பயந்து ஒடுங்கி வாழ வேண்டிய அவல நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் விரோதிகள் துணிச்சலாக களமிறங்குகிற போது மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள களம் காண வேண்டியுள்ளது.
மனித சமுதாயத்திற்கு அறிவை வளப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட கல்வி முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு தள்ளப்பட்டு அறிவை வளப்படுத்துவதற்கு பதிலாக அதிக மார்க், நல்ல ரிசல்ட் இதை காட்டி கல்லுரியை விரிவாக்குவது, பணத்தை குவிப்பது, பெற்றோர்களின் ஈரலை அறுப்பது, மாணவர்களின் எதார்த்த பூர்வமான உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தடுத்து சமூகறிவற்ற முண்டங்களாகவும், அடிமைகளாகவும் மாற்றி வருகிறது. இதற்கு தனியார்மய கல்வி முறையே பொறுப்பாக நம்முன் நிற்கிறது. இக்கேடுகெட்ட கல்விமுறைக்கு எதிராக போராடுவதும், அனைவருக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக பெறவும் போராட வேண்டிய கட்டாயம் இந்திய சமுதாயத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளது. இதை நாம் உணராவிட்டால் இன்னும் பல வினோதினிகள் மடிந்து கொண்டுதான் இருப்பார்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக