சனி, 22 பிப்ரவரி, 2014

ஜாதி தின்ற சரித்திரம் ! முதல் மலையாள திரைப்படத்தை உருவாகிய தமிழர் J.C,Daniel


சமா.இளவரசன் காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.
வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.

தனது 22-ஆம் வயதிலேயே சிலம்பாட்டம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட அவர், அந்த சிலம்பாட்டத்தின் சிறப்பை அசையும் படமாக உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார். அப்படி திருவிதாங்கூரின் முதல் அசையும் படத்தை உருவாக்க கனவு கண்டு, அதற்காக முயன்று ஒரு திரைப்படத்தையே உருவாக்கி வெற்றி பெற்ற அவர்தான் ஜெ.சி.டேனியல். (இன்று தமிழ்நாட்டில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர்.) அவரின் வரலாற்றைத் தான் செல்லுலாய்டு என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் மலையாள இயக்குநர் கமல். செல்லுலாய்டு படத்தை கோவா திரைப்பட விழாவில் காணும் வாய்ப்புப் பெற்றேன். அது முதல் மலையாளத் திரைப்படத்தின் மறைக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல; ஜாதி என்னும் கொடூரத்தின் தாக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான சாட்சி; ஒடுக்கப்பட்ட மக்களின் எத்தனையோ சாதனைகள் எப்படி ஜாதி ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டன _- அழிக்கப்பட்டன என்பதற்கான ஒரு சோறு பதம்; ஜாதி தின்று செரித்த சரித்திரம்.

அதன் தமிழ் வடிவம் ஜெ.சி.டேனியல் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் படித்துத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், பம்பாய் சென்று பால்கேவின் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் சுற்றி, அவர்களின் உதவியால் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவையும் பெறுகிறார் டேனியல். திருவிதாங்கூரின் முதல் படத்தை உருவாக்கும் பணியில் மனைவி ஜானட், நண்பர்களின் உதவியோடு ஈடுபடுகிறார். தன் குடும்பச் சொத்து, வளங்கள் அனைத்தையும் விற்று ட்ரவாங்கூர் நேசனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். புராணப்படங்களில் மூழ்கியிருந்த அன்றைய இந்திய சினிமாவில் மாறுபட்டுச் சிந்திக்கிறார் டேனியல். பைபிளின் கதைகளிலிருந்து ஒன்றைப் படமாக எடுக்கலாம் என்ற நண்பர்களின் எண்ணத்தையும் ஏற்காமல் சமூகக் கதையொன்றைப் படமாக்க விரும்புகிறார். தொலைந்த குழந்தை என்று பொருள்படும் விகதகுமாரன் என்ற தலைப்பில் ஒரு சமூகக் கதையைத் திரைப்படமாக எடுக்கத் தொடங்குகின்றனர். எழுத்துப் பணிகளை நிறைவு செய்து முக்கியக் கதாபாத்திரங்களையும் முடிவு செய்தபின்னர், கதாநாயகியைத் தேர்வு செய்வதற்காக முயலும் போது அதற்கு யாரும் முன்வரவில்லை. பால்கேவைப் போல ஆணைப் பெண் வேடமிட்டு நடிக்க வைக்கவும் டேனியலுக்கு விருப்பமில்லை. எனவே, பம்பாயில் இருக்கும் நடிகைகளில் யாரையாவது அழைத்து வரலாம் என்ற திட்டத்தில் பம்பாய் சென்று ஆங்கிலோ இந்திய நடிகை ஒருவரை அழைத்து வருகிறார்கள். சம்பளம், ரயில் பயணம், கார், அரண்மனை என அவர்கள் கேட்ட அத்தனை வசதிகளையும் தன் சக்திக்கு மீறி செய்யத் தொடங்கினாலும், சாதாரணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அந்த நடிகை மறுக்கிறார். கடவுளாகவோ, அரசியாகவோதான் நடிப்பேன் என அடம்பிடிக்க, அவரை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த கட்டம் குறித்து யோசிக்கும்போதுதான் கூத்து, நாடகங்களில் நடிப்போர் குறித்து நண்பர்கள் சொல்கிறார்கள். கூத்தில் ரோசம்மாவின் நடிப்பு டேனியலை வெகுவாகக் கவர, ரோசம்மாவையே தன் படத்திலும் நடிகையாக்கிட விரும்புகிறார் டேனியல்.

தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ரோசம்மா, (முன்பே குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த ரோசம்மாவின் பெயர் டேனியல் மற்றும் அவர் மனைவியால் ரோசி என வைக்கப்படுகிறது) விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைக்கப்படுகிறாள். சிறப்பான அவள் நடிப்புடன் சில நாட்களில் அவளது பகுதி படமாக்கப்பட்டுவிட, அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும், படத் தொகுப்பையும் முடித்து திரையிடலுக்குத் தயாராகிறது படம். இதற்கிடையில் இன்னும் சில சொத்துகளும் டேனியலால் விற்கப்படுகின்றன. 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 1930-ஆம் ஆண்டு நிறைவடைந்து, விகதகுமாரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. படத்தின் முதல் காட்சிக்கு அழைக்கப்படுகிறாள் ரோசி. படத்தை வெளியிட வந்த நம்பூதிரிகளும், வழக்குரைஞர் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் படத்தைப் பார்க்க கொட்டகைக்குள் நுழையும் ரோசியைக் கண்டு அருவெறுப்படைகிறார்கள். தீண்டத்தகாதோருடன் அமர்ந்து தாங்கள் எப்படித் திரைப்படம் பார்ப்பது என மறுக்க, என்ன செய்வது என டேனியல் மருகி நிற்க, வேறு வழியின்றி படத்தின் கதாநாயகி ரோசி கொட்டகைக்கு வெளியிலேயே கண்ணீருடன் அடுத்த காட்சிக்குக் காத்திருக்க, டேனியலைப் பாராட்டி வந்தோர் பேச, படம் திரையிடப்படத் தொடங்குகிறது. சிறிது நேரத்திலேயே திரைப்படக் கொட்டகைக்குள் கூச்சல். ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்ஜாதிப் பெண்ணாக நடிக்கவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜாதி வெறியர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அரங்கின் வாயிலில் காத்திருந்த ரோசி துரத்தப்படுகிறாள். ரோசியின் வீடு எரிக்கப்படுகிறது. ஜாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்து, உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி.

சொத்துகளை சினிமாவுக்காக விற்று, அதுவும் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் ஜாதிவெறியர்களின் எதிர்ப்பைப் பெற, அகஸ்தீஸ்வரத்திற்கே திரும்பி, பல் மருத்துவம் கற்று மருத்துவராகிறார் டேனியல். புதுக்கோட்டையில் குழந்தைகள், குடும்பம் என்று இருப்பவரை மீண்டும் திரைப்படத் துறை நோக்கி இழுக்கிறார் தமிழ்த் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா. சென்னைக்கு திரைப்படக் கனவுகளை மீண்டும் சுமந்து கொண்டு வண்டியேறி, திரைப்பட ஏமாற்றிகளால் சொத்துகளை இழந்து, ஏழ்மை நிலைக்குச் சென்று அடையாளங்களற்று வாழ்க்கையைத் தொடர்கிறார். பின்னாளில் செம்மீன் படம் 1966-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்று மலையாள சினிமா பெருமையடைய, முதல் மலையாள சினிமாவை எடுத்த டேனியல் தமிழ்நாட்டின் அகஸ்தீஸ்வரத்தில் முதுமைப்பருவத்தைக் கழிக்கிறார். இதை அறியும் மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளரான சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தொடர் முயற்சியில் டேனியலைச் சந்தித்து பழைய வரலாற்றை நிறுவ முயல்கிறார். டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியல் சிறுவயதில் விளையாட்டுப் போக்கில் விகத குமாரன் படச்சுருளை எரித்துவிட, எஞ்சியிருப்பதோ அப்படத்தின் ஒரு புகைப்படமும், விளம்பரத் துண்டறிக்கையும் தான். டேனியலுக்குப் பிறகு அவரது நண்பர் சுந்தரராஜன் எடுத்த மார்த்தாண்ட வர்மா திரைப்படமும் கடனுக்கு அடமானமாகப் போய் ஒரு கொட்டடியில் நாசமாகிக் கிடக்கிறது. அதை மீட்கிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன்.
மலையாள சினிமாவின் முதல் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள அரசின் பண்பாட்டுத் துறையை அணுகும் கோபாலகிருஷ்ணனுக்கு மறுப்புகளும், அலட்சியமும் பதிலாகக் கிடைக்கின்றன. பேசும் படமாக வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பாலன் படம் தான் முதல் மலையாளப் படம் என அடம்பிடிக்கிறார் அய்.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் அய்யர். இந்த (டேனியல்) நாடார் விசயத்தில் உனக்கென்ன இவ்வளவு அக்கறை? என்று ராமகிருஷ்ண அய்யர் கேட்கும் போது இந்த மறுப்புக்குப் பின்னால் இருப்பதும் ஜாதியே என்று உணர்ந்துவிடுகிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். பிராமணரான டி.ஆர்.சுந்தரத்தின் படம்தானே பாலன். நீங்கள்லாம் இந்த மாதிரி சிந்திக்கிறீங்கன்னு புரிஞ்சு போச்சு சார்! என்று போட்டு உடைத்துவிட்டுக் கிளம்புகிறார் பத்திரிகையாளர். எனினும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன.

எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் டேனியல் தன் இறுதி மூச்சை விட, அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. திரைப்படத்துறை மீது இன்று மக்களுக்கு இருக்கும் அளவற்ற மோகம் ஒரு நடிகரின் படத்துக்குச் செய்யப்படும் மரியாதை மூலம் உணர்த்தப்படுகிறது. அதைப் பார்த்தபடி பேருந்தில் பயணிக்கிறார் ஹாரிஸ் டேனியல் (ஜெ.சி.டேனியலின் இளைய மகன்). மேலே நீங்கள் படித்தது கதையல்ல; வரலாறு. அது ஜெ.சி.டேனியலின் வரலாறு மட்டுமல்ல; சமூகத்தில் ஜாதியின் இறுக்கம் எப்படி என்பதற்கான சான்று! ஜெ.சி.டேனியலையாவது இன்று நாம் அடையாளம் காண்கிறோம். ஆனால், மலையாளத்தின் முதல் கதாநாயகியான ரோசியின் நிலை? ஒளிவெள்ளத்தில் வாழும் இன்றைய திரைக்கலைஞர்கள் மத்தியில் அடையாளமே இல்லாமல் தென் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்வை முடித்திருப்பார் அந்தத் திறமைவாய்ந்த கலைஞர். படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமல், தனது கருத்தில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதைப் பதிவு செய்கிறார். ஜாதியின் தீவிரம் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அழுந்தச் சொல்லிப் புரியவைக்கிறது படம். அக்காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்தால் நிச்சயம் புத்தகமாக நீளும். பால்கே படம் எடுக்கும் போது அதைப் பார்த்து டேனியல் கற்றுக் கொள்வதாக ஒரு காட்சி. கர்ணனின் தொடையில் பரசுராமன் படுத்திருக்கும் போது கர்ணனின் தொடையை வண்டு துளைத்து ரத்தம் வழியும் மகாபாரதக் காட்சி. வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாட்டை அங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் இயக்குநர். இயக்குநர் கமலின் பதிவுகளில் எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். கதாநாயகியாக நாயர் பெண் வேடமணிந்து, அனைவருடனும் அமர்ந்து மதிய உணவு உண்ணாமல், தான் தூக்கி வந்த சட்டியிலிருந்து கஞ்சியைத் தரையில் அமர்ந்து அருந்தும் மனநிலையை, தங்களுக்கு அதுதான் இயல்பென்றும், விதிக்கப்பட்டதென்றும் ஒரு சமூகத்தையே கருதவைத்த கொடுமையை அக்காட்சி உணர்த்துகிறது. தான் நடித்த படத்தின் ஒரு காட்சியைக்கூடப் பார்க்க முடியாமல் துரத்தி அடிக்கப்படுகிற வலி எத்தகையது? அதுமட்டுமா, வர்ணாசிரமத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களிடையே ஜாதிப் பற்றும், தீண்டாமை உணர்வும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள் படம் முழுக்க கதையோடு பின்னிப் பிணைந்து நம் மூளையில் அவற்றை விதைத்துச் செல்கின்றன.
படத்தில் ஜெ.சி.டேனியலாக இளம் வயதிலும், முதுமையிலும், பின்னர் ஹாரிஸ் டேனியலாகவும் நடித்துள்ள ப்ருத்விராஜ், ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாஸ், ரோசியாக நடித்த சாந்தினி, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனாக நடித்த சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்குக் காரணம். ஒரு திரைப்படத்திற்கான அத்தனை சிறப்பம்சங்களையும் பெற்று, மலையாளத்தில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படம் தமிழில் அதிகம் கவனம் பெறாமல் போனது வருந்தத்தக்கதே! ஆனால், அவசியம் தேடித் தேடி பார்க்கவேண்டிய, திரையிடப்பட வேண்டிய, தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட வேண்டிய படம் இது.
ஒரு டேனியலின் வாழ்க்கையும், சாதனையும் வரலாற்றில் நிறுவப்பட வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு கோபாலகிருஷ்ணனும், கமலும் 70 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனை டேனியல்களின் சாதனை, ஜாதிக் கொடுமையால் மறைக்கப்பட்டிருக்கிறது _- மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்டெடுக்க உறுதி பூணுதலே ஜெ.சி.டேனியலுக்கு நாம் செய்யும் மரியாதை.
unmaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக