ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சந்திரா: இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா வசீகரிக்கிறார்

பிரபல கன்னடப் பெண் இயக்குனரான ரூபா ஐயர் இயக்கியிருக்கும் சந்திரா இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு பெண் மனத்தின் வெளிப்பாடாக உருவாக்கி உள்ளது
அரசாங்கம் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருக்கும் அரண்மனையில் வசிக்கிறது மைசூர் இளவரசியான சந்திரவதியின் (ஸ்ரேயா) குடும்பம் (படத்தில் காட்டப்படும் அரண்மனையை வைத்து, ஒரு வசதிக்காக மைசூர் ராஜவம்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்). அரண்மனை குருவின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (அறிமுகம் பிரேம்குமார்) இளவரசி சந்திரவதி இருவருக்கும் கண்டதும் காதல். பாரம்பரியக் கலைகள், ஆயுர்வேத மருத்துவம், மரபுக்கவிதை என்று கலாச்சாரத்தில் ஊறியவனாக இருப்பதால் சந்திரஹாசனைச் சந்திராவுக்குப் பிடிக்கிறது.
ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியவனாக இருக்கும் மற்றொரு அரச குடும்பத்து வாரிசான ஆர்யாவுக்கு(கணேஷ் வெங்கட் ராம்) சந்திராவை நிச்சயம் செய்கிறார்கள். சந்திரா - சந்திரஹாசன் காதல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது.
அவர்கள் காதலைக் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காதலர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை.
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, நடனம், அரங்க அமைப்பு, படத்தொகுப்பு கதை, திரைக்கதை, இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் ரூபா, ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போலத் தீட்டியிருக்கிறார். அழகான ஒளிப்பதிவும் இசையும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வும் படத்தின் அசைக்க முடியாத பலம். ஆனால் இவை மட்டுமே ஒரு படத்துக்குப் போதாதே. ‘தூய்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்’ என்ற பழம்பெரும் கொள்கையைக் கருவாகக் கொண்டதில் பிரச்சினை இல்லை. அதைச் சொல்லும் முறையில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் அல்லவா? அதுதான் சந்திராவில் இல்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லாமல் திரைக்கதை ஆங்கங்கே தேங்கி நிற்கிறது. காதலுக்கு ஏற்படும் பிரச்சினை, இன்னொரு ஆணின் ஒருதலைக் காதலால் ஏற்படும் சிக்கல் ஆகியவறைச் சிறிதாவது புதுமையான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கலாம்.
விளைவு, படத்தின் சிக்கல்களோடும் திருப்பங்களோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. படத்தின் முடிவில் திருமண மஹால் காட்சியில், “நீ வந்து என்னைத் தாரை வார்த்துக் கொடு” என்று காதலனை இளவரசி அழைக்குப்போது, திரையரங்கில் ஆச்சரியத்துக்குப் பதிலாக ஏளனச் சிரிப்பலை.
ஆனால் ஒரு பெண் இயக்குநராக சந்திராவதி கதாபாத்திரத்தின் வழியாக, பெண்மனத்தின் தனித்த ஏக்கங்களை சின்னச்சின்ன அடையாளங்கள் வழியாக வெளிபடுத்தியது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் க்ளிஷேக்கள் குறைந்த படத்தை இந்த இயக்குனரால் தர முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுகிறது.
இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா சரண் வசீகரிக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பதில் இவருக்கும் அறிமுக நாயகன் பிரேம்குமாருக்கும் சரியான போட்டி. இருவருக்கும் இடையிலான வாள் சண்டைக் காட்சியில், ஆண்மை, பெண்மை, காதல் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் காட்சிப்படுத்திய விதம் அபாரம். பெண் தோழிகள் அதிகம் கொண்ட கதாபாத்திரத்துக்கு ஆர்யா என்று பெயர் வைத்தது இயக்குநரின் குறும்பு.
முதல் பாதியில் சரியான இடங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் இரண்டாவது பாதியில் எக்குத்தப்பாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் பி.ஹெச்.கே. தாஸ், இசையமைப்பாளர் கௌதம் ஸ்ரீவஸ்தா இருவரும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
காட்சிப்படுத்தும் விதம், சிறந்த நடிப்பை வாங்குதல், அழகுணர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படும் இயக்குநர் திரைக்கதையிலும் கதையை நகர்த்திச் செல்லும் சம்பவங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் மிக நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாகியிருக்கும் சந்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக