திங்கள், 3 பிப்ரவரி, 2014

தமுமுக தாலிபான்களை தமிழகத்தில் முறியடித்த தோழர் பாத்திமா

இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் ‘வீரம்’, ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.
மலாலாவேறு கிராமத்து பையனை காதலித்த ‘குற்றத்திற்காக’ 23 வயதான பழங்குடியினப் பெண்ணை கிராமத்தினர் யார் வேண்டுமானாலும் வன்புணர்ச்சி செய்யலாம் என்று உத்தரவு போட்டு 13 பேரை விட்டு குதற வைத்தது மேற்கு வங்க “காப் பஞ்சாயத்து”. இது பழங்குடிச் சமூக காட்டுமிராண்டிகளின் பொறுக்கித் தனம் என்பதை நாடே ஒத்துக் கொள்கிறது. ஆனால், பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் தமிழகத்தில் இவ்வாறெல்லாம் நடக்கவே முடியாது, இங்கு ஜனநாயகம் தழைத்தோங்கியுள்ளது, என்று யாராவது நம்பியிருந்தால் இந்த கட்டுரையைப் படித்த பின் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி வடக்கு அம்மாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பெண் கோவை அரசு சட்டக்கல்லுரியில் இரண்டாம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். கோவை பகுதியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பிலும் செயல்பட்டு வருகிறார். இவரது அண்ணன் அலாவுதீனும் பு.மா.இ.மு தோழர்தான். சென்ற ஆண்டு வரை அதே கோவை அரசு சட்டக் கல்லூரியில் படித்து விட்டு தற்போது புதுக்கோட்டையில் வழக்கறிஞராகப் பணி புரிகிறார்.

பொங்கல் மற்றும் தேர்வு விடுமுறைக்கு தமது சொந்த ஊருக்கு வந்த தோழர் பாத்திமா, 27-1-2014 அன்று தமது சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வழக்கம் போல் தனியார் பேருந்தில் செல்வதற்காக அருகில் உள்ள மீமிசல் செல்லத் தயாரானார். மணமேல்குடியில் இருந்து கோவைக்கு நேரிடையாக பேருந்து இல்லை என்பதால் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீமிசல் வந்து தனியார் பேருந்தில் கோவைக்கு செல்வது வழக்கம். லக்கேஜ்-ம் இருந்ததால் பஸ் ஏற்றி விடுவதற்காக, அவருடன் தோழர் முத்துகிருஷ்ணன் என்பவரை அவர்கள் குடும்பத்தார் ஏற்பாடு செய்து மீமிசலுக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு சுமார் 7.30 மணிக்கு இருவரும் மீமிசலில் உள்ள தனியார் பேருந்து அலுவலகம் வந்தனர். இதனை தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சில இசுலாமிய இளைஞர்கள் நோட்டமிட்டனர். ஒரு இசுலாமியப் பெண் ‘இந்து’ பையனுடன் இருப்பதை கண்டு பிடித்த மதவெறியர்களின் கோணல் புத்தி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது. அந்த தனியார் பேருந்து இரவு 8.00 மணிக்குதான் புறப்படும். நோட்டமிட்ட கோணல் புத்தி இந்த இடைவெளி நேரத்தைப் பயன்படுத்தி மேலும் சிலரை சேர்த்துக் கொண்டது.
இந்தக் கும்பல் அந்த தனியார் பேருந்தின் அலுவலகத்திற்கு ஒருவரை அனுப்பி கோவைக்கு டிக்கெட் இருக்கிறதா? யார், யார் செல்கிறார்கள் என பயணிகள் போல் நோட்டமிட்டு விசாரித்தது. இவர்கள் விசாரித்து முடித்த சில நிமிடங்களிலேயே கோவை செல்லும் பேருந்து அங்கு வந்தது. பேருந்துக்காக நின்ற பயணிகளுடன் தோழர் பாத்திமாவும் பேருந்தில் ஏறி தனது லக்கேஜ்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தார். தோழர் முத்துகிருஷ்ணனும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.
அப்போது பேருந்தில் ஐந்து நபர் கொண்ட தமுமுக கும்பல் திமுதிமுவென ஏறியது. அதில் ஒருவன் தோழர் பாத்திமாவை நோக்கி “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினான். அறிமுகம் இல்லாத நபர்கள் என்பதால் பதில் எதுவும் பேசாமல் லக்கேஜை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்தார் பாத்திமா.
உடனே அவர்கள், “உன் பெயர் என்ன? இவன் பெயர் என்ன?” என்று கேட்டு மிரட்டினர்.
“நீங்கள் யார்? உங்ககிட்டே என் பெயரை ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் தோழர் பாத்திமா.
உடனே ஆத்திரம் அடைந்த அக்கும்பல், “என்னடி தேவடியா, நீ இந்தப் பயலோட ஓடிப் போறது எங்களுக்குத் தெரியாதுன்னு நெனைச்சிட்டியா? உன்னுடைய பிளான் எல்லாம் தெரியும். மரியாதையா உன் வீட்டு அட்ரசக் கொடு” என்று இசுலாமிய தாலிபான் போலிசாகி மிரட்டினர்.
தோழர் பாத்திமா, “மரியாதையாக பேசு” என்று எதிர்த்துக் கேட்கவே அந்த கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறி கத்த ஆரம்பித்தது. இதற்கிடையில் நேரமும் ஆகி விடவே பஸ் டிரைவர் பஸ்ஸை எடுக்க முயன்றார். ஆனால் அக்கும்பல் பஸ்ஸை எடுக்க விடாமல் டிரைவரை தடுத்தது.
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட தோழர் முத்துகிருஷ்ணன் அக்கும்பலிடம், “இவங்க என் பிரண்டோட தங்கச்சி. கோவை சட்டக் கல்லுரியில் படிக்கிறாங்க. பேருந்து ஏற்றிவிட அவர்கள் குடும்பத்தினர்தான் என்னை அனுப்பி வைத்தனர்” என்று கூறியுள்ளார். மேலும் அவர் அண்ணன் வழக்கறிஞராக வெளியூரில் இருப்பதாலும், இவருடைய தாய் தந்தையர் வயதானவராகளாக இருப்பதாலும் தான் வந்துள்ளதாக விளக்கியுள்ளார்.
“நீ சொல்ற பொய்யை நாங்க நம்பணுமாடா” என்று கூறி தோழரின் நியாயமான தன்னிலை விளக்கத்தையும் நிராகரித்து விட்டது மதவெறி போதை கும்பல். பிரச்சனை செய்து பேருந்தையும் எடுக்க விடாத நிலையில் புதுக்கோட்டையில் இருக்கும் பாத்திமாவின் அண்ணன் அலாவுதீனின் போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னார்கள்.
அப்போது, பேருந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்களும், “இப்பெண் ஒரு வருடத்திற்கு மேலாக இப்பேருந்தில்தான் வருகிறார், நீங்கள் அந்த பெண்ணின் அண்ணனுக்கு போன் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்” என்று கூறி தகராறு செய்த கும்பலை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர். தோழர் முத்துகிருஷ்ணனும் கீழே இறங்கிவிட்டார்.
அக்கும்பல் அவர் அண்ணனுக்கு போன் செய்து, “உன் தங்கை பெயர் என்ன? ஒரு காஃபிர் பயலோடு ஓட முயற்சி பண்ணுது” என்று கூறியுள்ளனர்.
ஏற்கனவே முத்துகிருஷ்ணனுடன் சென்றதை அறிந்திருந்த அலாவுதீன், “அவர் எங்களுக்கு தெரிந்தவர்தான், நாங்கள்தான் அனுப்பிவைத்தோம், இதில் தலையிட உங்களுக்கு உரிமையில்லை” என்று கூறியுள்ளார்.
உடனே அந்த நபர், “போடா கூட்டிக் கொடுக்கிற பயலே” என்றும் இன்னும் பலவாறும் திட்டி போனை தூண்டித்து விட்டார்.
இந்த இடைவெளியில் பேருந்து புறப்பட்டு விட்டது. பேருந்து புறப்பட்டதை பார்த்த முத்துகிருஷ்ணன் இனி பிரச்சனை வர வாய்ப்பில்லை என்று கருதி மணமேல்குடிக்கு பஸ் ஏறிவிட்டார். ஆனால் வெறிகொண்ட இக்கும்பல் மேலும் சில இளைஞர்களை திரட்டிக்கொண்டு பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சென்று தோழர் பாத்திமா சென்ற பேருந்தை காட்டுக் கூச்சலுடன் துரத்தினர். கொஞ்ச தூரம் சென்றிருந்த பேருந்தை வழிமறித்து தடுத்து பேருந்தின் முன்புறம் குறுக்கும் மறுக்குமாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி பேருந்தை செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.
உடனே வாகனங்களில் இருந்து இறங்கிய 25-க்கும் மேற்பட்ட காட்டுமிராண்டி கும்பல்,“அந்த தேவடியாள தப்பிக்க விட மாட்டோம்” என்று கத்திக் கொண்டு பேருந்துக்குள் ஏறி, “உன் காலேஜ் ஐடியை காண்பி, நீ உத்தமியான்னு பாக்குறோம்” என்று கூறினர். “இந்த தேவடியா இஸ்லாத்தை கெடுக்க வந்தவள் இவளையெல்லாம் கொல்லணும், படிக்கிற திமிருல விபச்சாரம் பண்ணுரா” என்று பலவாறாக வெறிக் கூச்சலிட்டனர்.
ஆனால், தோழர் பாத்திமாவோ தைரியமாக, “உன்னிடம் ஐடி (அடையாள அட்டை) காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, போலீசை வரச்சொல் அவர்களிடம் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.
ஒரு பெண் தைரியமாக எதிர்ப்பதை சகிக்க முடியாத அக்கும்பலில் ஒருவன், “என்னடி பொட்ட தேவடியா ஆம்பளைய எதித்து பேசுற, அவள கன்னம் பழுக்குற மாதிரி அடிடா” என்று கத்தினான்.
தாக்குதலுக்கு அக்கும்பல் முயற்சிக்கும் போதும், “ அடித்துப் பாருடா ” என்று தைரியமாக பாத்திமா எதிர்த்தவுடன் சற்று பின்வாங்கிய கும்பல், “அவளை கீழே இறக்குடா” என்று கத்தியதுடன் நிர்ப்பந்தித்து பேருந்தை விட்டு இறக்கியது. தோழரின் லக்கேஜ்கள் அக்கும்பலால் பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டன. இப்படி தூக்கி வீசியவன் அக்கும்பலால் பாத்திமாவை வேவுபார்க்க முன்கூட்டியே பேருந்தில் ஏற்றி விடப்பட்டவன். அக்கும்பலில் பலர் மதபோதை மட்டுமின்றி குடிபோதையிலும் இருந்தனர்.
தோழர் பஸ்ஸைவிட்டு இறங்கியவுடன் அக்கும்பல் பஸ்ஸை புறப்படச் சொல்லி டிரைவரை மிரட்டியதால் பஸ் புறப்பட்டது. அப்பேருந்து புறப்படும் வரை அனைத்து இதர வாகனங்களும் தேங்கி நின்றன. பேருந்தை நிறுத்திய கும்பல் இட்ட கூச்சல் காரணமாக பொதுமக்கள் 150-க்கு மேற்பட்டோர் கூடி விட்டனர்.
“நைட்டுல தனியா போறியே நீயெல்லாம் நல்ல பொம்பளையா” என்று இறக்கி விட்ட திமிருடன்கேட்ட அந்த இசுலாமியம மதவெறிக் கும்பலிடம், “பொம்பளை என்பதால் தடுத்து நிறுத்துறீங்களே, ஆம்பளைங்க நீங்க இரவிலோ அல்லது யாராவது ஒரு பெண்ணுடனோ வரும் போது உங்களை நான் கேட்டால் பதில் சொல்லுவீங்களா? ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயமா?” என்று பதிலுக்கு பதில் பேசவே, “நீ படிக்கிற திமிர்லதான இப்படி பேசுற, இனி நீ எப்படி படிக்கிறன்னு நாங்க பாக்குறோம்” என்று மிரட்டினர்.
அதற்கும் “கொஞ்சம் நேரம் இரு; போலீசு வரும் நீங்கல்லாம் அங்க போய் படிப்பிங்க” என்று பதிலடி கொடுக்க அக்கும்பல், “சட்டம் படிக்கிற தைரியத்துல பேசுறீயா, எல்லா சட்ட மயிரும் எங்களுக்கும் தெரியும்.”  என்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
குடித்துவிட்டு மதவெறியுடன் குதறும் மிருகங்களுடன் ஒரு இளம் பெண் சாலையில் நின்ற படி, தைரியமாக விவாதிப்பதைப் பார்த்த பொதுமக்கள் வியந்தனர். சிக்கலை சமாளிக்க அக்கும்பலிலேயே இருந்த சிலர் சமதானப் புறாவாக மாறி, “ஒரு பொண்ணு அதுவும் முஸ்லீம் பொண்ணு இப்படியெல்லாம் ஆம்பளைக்கு சமமாக பேசக் கூடாது” என்று கூறி, “நீ ரோட்டில் நிற்காதே, அருகில் உள்ள வீட்டுக்கு வா, அங்கே வைத்து பேசிக் கொள்ளலாம்” என்று கூறினர். இஸ்லாமிய பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர்.
“பஸ்ஸை மறித்து நடு ரோட்டில் என்னை இறக்கும் போது உங்களுக்கு பெண் என்று தெரியலையா” என்று தோழர் கேட்டவுடன் “அது இல்லம்மா… ஒரு பொண்ணு… காலேஜ் போறதுக்கு… எதுக்கு இரவு நேரத்துல… தனியா…” என்று இழுத்துள்ளனர்.
“ஏன் பொம்பளைனா இரவு நேரத்துல பயணம் செய்யக் கூடாதா? அப்படி போனா விபச்சாரியாகவோ, ஓடிப் போறவளாகவோதான் இருக்கணுமா? முஸ்லீம் பொண்ணுன்னா ஆண்களுக்கு அடிமையாத்தான் இருக்கணுமா?” என்று தோழர் பாத்திமா கேட்டார்.
இதனை சகித்துக்கொள்ள முடியாத அக்கும்பல், “நீ ஓடிப்போனா இஸ்லாத்துக்கு அவமானம். நீ எப்படி ஒரு காஃபீர் பையனோட வரலாம்” என்று கேட்டு கூச்சல் போட்டனர்.
மேலும், “உன் அண்ணன், என் தங்கச்சிய யார் கூடவும் அனுப்புவோம். அதக் கேட்க நீ யாருடா என்று கேட்கிறான். இதை இஸ்லாம் ஆண்கள் கேட்டுகிட்டு இருக்கணுமாடி? நீ யாரு கூட வேண்டுமானாலும் பேசுவ, அதப்பாத்துக்கிட்டு சும்மா இருக்கணுமாடி” என்று கேட்டு அடிக்கப் பாய்ந்தனர்.
அதற்கும் தோழர், “என் தனி உரிமையில் தலையிட நீங்கள் யார்?” என்று கேட்க
“இருடி, நீ சட்டம் படிக்கிற திமிர்ல பேசுறியா! உன் ஊர்ல இருந்து நாலு பேர வரச்சொல்லி உன் லட்சணத்த சொல்லுறோம்” என்று பலவாறாக நாக்கூசும் வார்த்தைகளைப் பேசி அவமானப்படுத்த முயன்றனர்.
பஸ்ஸை விட்டு இறக்கியதில் இருந்து பாத்திமாவை முப்பது நிமிடத்திற்கு மேலாக மதவெறியுடன் துன்புறுத்தினர். ஜனநாயக உணர்வு – அதுவும் பெண்ணுக்கு – இருக்கவே கூடாது என்ற கீழ்த்தரமான மதவெறி கோபத்துடன் ஆடிய அந்த கும்பலை எதிர்த்து தன்னந்தனியாக, “பொம்பளையால என்ன செய்ய முடியும்னுதானே அராஜகம் பண்ணுறீங்க? பொம்பளைனா யாருன்னு காட்டுறேன்” என்று பாத்திமா சொன்னதும், “ஏ போடி தேவடியா, எல்லா போலிசும் எங்களுக்கு தெரியும், எல்லா சட்ட மசுறும் எங்களுக்கு தெரியும். சும்மா உதார் விடாதே” என்று திமிராகப் பேசினர்.
இந்நிலையில் தோழர் அலாவுதீன் மற்றும் அவரது மூத்த வழக்கறிஞர் தோழர் ராமலிங்கம் (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர்) ஆகியோரின் நெருக்குதல் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டார்கள். போலீசு மதவெறி கும்பலிடம் இருந்து தோழர் பாத்திமாவை மீட்டு விவரத்தை கேட்டுக் கொண்டு இருக்கும் போதே மதபோதையேறிய ‘வீரம் செறிந்த’ கும்பல் செத்த மாட்டிலிருந்து உண்ணி இறங்குவதைப் போல நழுவிக் கொண்டு இருந்தனர். போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க முயலுவதை அறிந்தவுடன் இசுலாமைக் காக்க வந்த கும்பல் ஓடி ஒளிந்த விதம், வடிவேலு பாணி நகைச்சுவையை மிஞ்சுவதாக இருந்தது. எல்லா சாதி மதவெறியர்களும் இப்படித்தான் சவுண்டு விட்டு விட்டு யாராவது தட்டிக்கேட்டால் தலை புரண்டு ஓடிவிடுவார்கள்.
“நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போலிசிடம் தோழர்கள் உறுதி காட்டியதை அறிந்த த.மு.மு.க. மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அனிஷ் பாத்திமாவை அணுகி, “நடந்த சம்பவம் துயரமானது, இஸ்லாத்தை காப்பதற்காக அவ்வாறு செய்து விட்டனர். ஒரு பெண், போலீஸ் ஸ்டேசனில் இருந்தால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள். உன் வாழ்க்கை பாதிக்கும். நீ வீட்டுக்குப்போ காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று சமாதானம் பேசினர். இதுதான் பணிந்தால் அடிப்பது, எதிர்த்தால் கெஞ்சுவது எனும் ஆதிக்கப் பண்பு.
“நான் தவறு செய்யவில்லை; உங்களுடைய ஆட்கள்தான் தவறு செய்துள்ளார்கள்; நான் ஏன் பயப்பட வேண்டும். எனக்கு இதில் அவமானம் என்ன?” என்று கேட்டு வஞ்சகப்பேச்சுக்கு உடன் பட மறுத்து புகார் கொடுக்க தயாரானார்.
இரண்டுக்கும் மேற்பட்ட ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் உள்ளிட்டு சுமார் 50 – க்கும் மேற்பட்டவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் தோழருடன் சமாதானம் பேசினார்கள். “பல இந்து ஆண்கள் இசுலாமிய பெண்களை ஏமாற்றி லவ் பண்ணி திருமணம் செய்து கொள்ளுகிறார்கள். இதற்கெதிராகத்தான் ‘லவ் ஜிகாத்’ அவசியப்படுகிறது. அதனால்தான் இஸ்லாமிய அமைப்பில் உள்ளவர்கள் உன்னைப் போன்ற இளம் பெண்களை விசாரிக்க வேண்டி வருகிறது. எனவே இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்டு சமுதாயத்திற்காக விட்டுக் கொடு” என்றும் “வழக்கு கொடுத்தால் உனக்குதான் அசிங்கமாக முடியும்” என்றும் பலவாறாக பேசினர்.
ஆனால், தோழர் பாத்திமா எல்லாவற்றையும் நிராகரித்து விட்டு, போலீஸ் ஸ்டேசன் அருகில் இருந்த மெடிக்கலில் உட்கார்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுத ஆரம்பித்த போது சமாதானம் பேச வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து, மெடிக்கல்காரரிடம் போய் “அந்தப் பெண்ணை வெளியே அனுப்பு. உனது கடையில் அவளுக்கு இடம் அளிக்க கூடாது, வெளியே அனுப்பு, மெடிக்கலை பூட்டு” என்று கூச்சல் போட்டனர்.
மெடிக்கல்காரரோ, “நீங்கள் யார் என் மெடிக்கலை பூட்டச் சொல்லுவதற்கு? அந்தப் பெண் என் நண்பரின் தங்கை. இங்கு இருந்துதான் புகார் மனு எழுதுவார். உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள்” என்று மதவெறி கும்பலை எதிர்த்து நின்றார்.
ஆனாலும், நண்பரின் கடைக்கு பிரச்சினை வேண்டாம் என்று கருதிய தோழர் பாத்திமா போலீசு ஸ்டேசனுக்கு சென்று போலீசாரிடமே பேப்பர் வாங்கி புகார் எழுதிக் கொடுத்தார். போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டதை அறிந்தவுடன் சண்டமாருதம் செய்தவர்களும் சமரசம் பேச வந்தவர்களும் தங்களையும் போலீசு விசாரிக்கலாம் என்று கருதி இடத்தை காலி செய்து ஓடினர். போலிஸ் ஸ்டேசனுக்கு வந்த டி.எஸ்.பி இரவு 10.00 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் தனது வண்டியிலேயே மணமேல்குடிக்கு அழைத்துச் சென்று பாத்திமாவை பாதுகாப்பாக வீட்டில் விட்டுச் சென்றார்.
அடுத்த நாள் 28-1-2014 காலையில் தோழர்களுடன் மீமிசல் சென்று நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தப்பட்டது. அப்போது தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தோழர்களிடம் சமரசம் பேசினார்கள்.
அதாவது, ‘பெண்ணை விசாரித்தது சரி, விசாரித்த முறை சரியல்ல. விசாரித்தவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அதனால் மன்னியுங்கள்’ என்று கூறினார்கள்.
“ஒருவரைப் பற்றி விசாரிக்க உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?” என்று தோழர்கள் கேட்டதற்கு
“சமுதாய நன்மைக்குதான் விசாரிக்குறோம். இந்த விசாரணையை எதிர்ப்பவர்கள் சமுதாயத் துரோகிகள்” என்று கூறினர்.
இதைக் கேட்டவுடன், “ஜெயலலிதா பாபர் மசுதியை இடிக்க கரசேவைக்கு ஆள் அனுப்பியவர், கருணாநிதியோ பிஜேபியை தமிழ்நாட்டுக்குள் அறிமுகம் செய்தவர். அவர்களிடம் மாறி மாறி கூட்டணி வைக்கிறீர்களே, நீங்கள்தான் சமுதாயத் துரோகிகள்” என்று தோழர்கள் பதிலிறுத்தனர்.
அதன்பின், “காஃபீருடன் ஒரு பெண்ணை அனுப்புவது தவறு” என்று பேசினர். அதற்கும் தோழர்கள், “குஜராத் பிரச்சனையை வெளியை கொண்டு வந்தவர்கள் காஃபீர்கள்தான், தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் ஜனநாயகத்துடன் பேசுவதற்கு காரணமே பெரியார் என்ற காஃபீர்தான்” என்று பதில் கூறி இவர்களின் கட்டப் பஞ்சாயத்தை ஏற்க மறுத்தனர். அத்துடன் பெண்களுக்கெதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதியவும் நிர்ப்பந்தித்தனர்.
இதற்கிடையே கோயமுத்தூர் அரசு சட்டக்கல்லுரி மாணவர்கள் மேற்படி மதவெறி சம்பவத்தை அறிந்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். மாணவர்களின் நிர்ப்பந்தத்தால் கல்லூரி முதல்வர் காவல் துறையைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை விவரங்களை விசாரித்தார். எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு போலீசும் தயாராகிக் கொண்டு இருந்தது.
எனவே, ‘எந்தப் பெண்ணையும் விசாரிக்கவும் தண்டிக்கவும் தமக்கு மத ரீதியில் உரிமை உண்டெ’ன முழங்கியவர்கள், தற்போது மேலும் இறங்கி வந்தனர். “நடந்தது மொத்தமும் தவறுதான். இனி எந்த பெண்ணின் தனி உரிமையிலும் தலையிட மாட்டோம்” எனப் பேசினர். தவறு செய்த இளைஞர்களின் எதிர்காலம் கருதி எப்படியாவது வழக்கு இல்லாமல் சமரசமாக முடித்துக் கொள்ள மன்றாடினர்.
தனி நபர்கள் மட்டுமே நமது இலக்கல்ல என்பதாலும் மதவெறியர்களை, அத்தகைய சிந்தனைப் போக்கை தவறென உணரச் செய்யும் வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என்பதாலும் தோழர்கள் பரிசீலித்து பிரச்சனைக்கு தலைமை தாங்கிய ஐந்து பேரும் (மற்றவர்கள் அடையாளம் தெரியததால் தப்பித்து விட்டனர்.)
  1. மதத்தின் பெயரால் தாங்கள் இழைத்த கொடுமைக்காக பொதுமக்கள் முன்னிலையில் தோழர் அனிஷ்பாத்திமாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
  2. மத உரிமை என்ற பெயரில் இனி யாருடைய தனி உரிமையிலும் தலையிடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.இவற்றையே கடிதமாகவும் கொடுக்க வேண்டும்.
என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகளை தமுமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சம்பவம் தொடங்கிய அதே கடைவீதியில், பேருந்து அலுவலகத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 200 பேர் கூடினர். ஆனால், இந்த நேரத்தில் இந்துத்துவ மதவெறி ஓநாய்கள் இந்த சமரசத்தை தடுத்து கலவரமாக்க முயன்றனர்.
“முசுலிம் கடைகளில் இந்துப் பெண்கள் வேலை செய்கின்றனர். அவர்களின் வண்டிகளில் ஏற்றிச் செல்கின்றனர். இசுலாமிய பெண் மட்டும் இந்துப் பையனுடன் போகக் கூடாதா? இனி இந்துப் பெண்களும் இசுலாமிய கடைகளுக்கு வேலைக்கு போகக் கூடாது” என்பதாக அலப்பரை செய்தனர். மதவெறி நஞ்சைக் கக்கினர்.
இசுலாமிய மதவெறியை எதிர்க்கும் போராட்டத்தில் நைசாக நுழைந்து குளிர் காய நினைத்த இந்துமதவெறிஅமைப்புகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதால் அந்த இடத்தை தவிர்த்து மாற்றிடத்தில் மன்னிப்பு கேட்க வைத்தோம்.
அரை மனதாக சமாதானத்திற்கு ஒத்துக்கொண்ட தோழர் பாத்திமாவிடம் அப்போது, த.மு.மு.க நிர்வாகி ஒருவர், “உன் ஆசை தீர இவனுங்கள செருப்பால கூட அடிம்மா” என்று கூறினார். இவர்களை மன்னிக்கும் மனநிலை முழுமையாக இல்லாத போதும், நாகரீகம் கருதி அவர் அதைச் செய்யவில்லை.
மன்னிப்புக் கடிதம்
மன்னிப்புக் கடிதம்
[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]
இந்த நாகரீகத்தை – பெருந்தன்மையை பாத்திமாக்கள் பராமரிப்பதா வேண்டாமா என்பது இசுலாமிய இளைஞர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்களின் வெறிக்கூச்சலைக் கண்டும் கலங்காத பாத்திமாவை மிகவும் பாதித்தது சம்பவ இடத்திற்கு வந்த இசுலாமிய பெண்களின் பேச்சுதான். அங்கு குடிசையிலிருந்த இந்துப் பெண்கள் இந்தக் கொடுமை கண்டு கொதித்துப் போய், “பொம்பளைங்க படிக்கிறது தப்பாம்மா? நீ உறுதியா இரு!” என்று தைரியமூட்டிய நிலையில் அங்கு வந்த இசுலாமிய பெண்களோ, “இவளெல்லாம் பொம்பளையா? திமிராப் பேசுறா” என்று பேசியுள்ளனர். என்ன செய்வது, பெண்களேயானாலும் அவர்களிடம் இருப்பது மதக்கருத்து என்பதும் அது ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்பதும்தானே கொடுமை!
இசுலாமிய மதவெறியர்களின் நடவடிக்கை இந்து மதவெறியை வளர்க்கவே உதவுகிறது என்பது இச்சம்பவத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்து மதவெறியை எதிர்க்க விரும்பும் எந்த ஒரு இசுலாமிய ஆணும், பெண்ணும் தன் சொந்த மதத்தில் உள்ள தாலிபான்களின் காட்டுமிராண்டித் தனத்தை எதிர்த்து நிற்க வேண்டும் என்பதே கற்க வேண்டிய பாடமாகும்.
இச் சம்பவம் கடற்கரை பகுதி முழுவதும் மிகவும் பரப்பரப்பாக பேசப்படுகிறது. இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் ‘வீரம்’, ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது. இப் போராட்டம் இசுலாமிய பெண்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.
ஒரு இசுலாமிய பெண் யாருடன் பைக்கில் போக வேண்டும் என்பதில் தொடங்கி யாரைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது வரை அவளுடைய சகல செயல்பாடுகளும் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்று இசுலாமிய மதவாதிகள் நம்புவதோடு அதை வெறியுடன் வன்முறையின் துணை கொண்டு அமல்படுத்தவும் செய்கிறார்கள். இப்படித்தான் இசுலாமிய மக்களை பொது நீரோட்டத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது இந்துமதவெறியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு உதவி செய்கிறார்கள். எனவே இசுலாமிய மக்களுக்கு இசுலாமிய மதவாதிகள் ஒருபோதும் பிரதிநிதிகளாகவோ, காப்பாளர்களாகவோ இருக்க முடியாது என்பதுடன் அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியும் விடுகிறார்கள்.
எனவே தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத் முதலான இசுலாமிய மதவாத அமைப்புகள் இத்தகைய தாலிபான் காட்டுமிராண்டித்தனங்களை நிறுத்த வேண்டும். இல்லையேல் அதே இசுலாமிய மக்களை வைத்து உங்களது நாட்டாமைத்தனத்தை முறியடிப்போம். அதற்கு தோழர் பாத்திமாவின் போராட்டம் ஒரு தொடக்கம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே சாதி, மத மறுப்பு திருமணங்கள் எமது புரட்சிகர அமைப்புகளில் பகிரங்கமாக நடக்கின்றன. வருங்காலத்திலும் நடத்துவோம்.
இந்துமதவெறியர்களால் தாக்குதலுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் எதிராக சமரசமற்ற முறையில் போராடும் புரட்சிகர அமைப்புகள் என்ற வகையிலும், இசுலாமிய மக்களை வேறு மத உழைக்கும் மக்களுடன் இணைத்து எல்லா மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் போராடுகிறோம் என்ற வகையிலும் இசுலாமிய மக்களின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள்தான், உங்களைப் போன்ற மதவெறியர்கள் அல்ல. vinavu.com/
  • ஜனநாயக உணர்வு கொண்ட இசுலாமிய ஆண்களே, பெண்களே மதவாத அமைப்புகளிலிருந்து வெளியேறுங்கள்!
  • புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி போன்ற நக்சல்பாரி அமைப்புகளில் அணிதிரளுங்கள்!!
கம்யூனிசமே வெல்லும்!
தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக