செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

Chennai City உமா மகேஸ்வரி கொலை ! 9 நாட்கள் கிடந்த உடல் ! பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?

உமா மகேஸ்வரி கொலையைக் கண்டித்து சிறுசேரி சிப்காட் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஐ.டி.ஊழியர்கள் | சிப்காட் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார். | படம். எம்.கருணாகரன்.
  • உமா உடல் கிடந்த இடம். | படம்- எம்.கருணாகரன்.
    பெங்களூர் பிரதிபா, டெல்லி நிர்பயா வரிசையில் சென்னை உமா: எல்லாத் தரப்பிலும் அலட்சியங்கள், குளறுபடிகள். நடுத்தர வர்க்க இளைஞர்களின் கனவுலகமான ஐ.டி.பார்க்கில் நடந்த உமா மகேஸ்வரியின் கொலை, சமூகத்தின் எல்லா தரப்புகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மா மகேஸ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சிறுசேரி பகுதி புறத்தோற்றத்தில் சென்னைக்கு சம்பந்தமில்லாத பகுதி யாக இருக்கிறது. நவீனத் தோற்றத்தோடு உயரமாக காட்சியளிக்கும் கட்டிடங்களுக்கு நடுவில் இருக்கும் புதரில்தான் உமா மகேஸ்வரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை புதர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்கிறார் சிறுசேரி பகுதியில் பணிபுரியும் மென்பொருள் ஊழியர் ஒருவர்.
    புதர் மண்டிக்கிடக்கும் அந்த பகுதியில் உமாவின் உடல் அழுகி நாற்றமெடுக்கும் வரை கேட்பாரின்றி கிடந்தது என்பது அந்த இடத்தைப் பார்க்கும்போது எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை.
    அந்த பகுதி கிட்டத்தட்ட ஒரு காடு போல நீளும். வழக்கமாக யாரும் அந்த வழியாக நடந்துசெல்ல மாட்டார்கள் என்கிறார் அந்த ஊழியர்.
    ஆனால் உமா மகேஸ்வரி அந்த சாலை கடைசி வரை நடந்து சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிக்கப் வசதியில் குளறுபடி
    நிறுவனங்களின் பிக்கப்-ட்ராப் வசதிகளில் பல நேரங்களில் குளறுபடிகள் இருப்பதாக பெரும்பாலான ஊழியர்கள் சொல்கிறார்கள். பல நிறுவனங்களில் நிறுவனம் சார்ந்த பேருந்து வசதி அனேகமாக இரவு 8 மணியோடு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு இரவுப் பணிக்கான கார் வசதி 10 மணிக்கு மேல்தான் தொடங்கும். இடையில் கிளம்ப வேண்டும் என்று நினைத்தால் நடந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.
    ஆட்டோ நிற்கக்கூடாது
    பல நிறுவனங்கள் தங்களது அலுவலகங்கள் முன்பு ஆட்டோக்கள் நிற்பதை அனுமதிப்பதில்லை என்கிறார் சிறுசேரி பகுதி ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். ‘‘இந்த பகுதிக்கு வெளியிலிருந்து ஆட்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஒருவேளை இந்த கொலையைக்கூட இந்த பகுதியை சேர்ந்த யாரோதான் செய்திருக்கக் கூடும்’’ என்கிறார் அவர்.
    குறுக்குவழி ஓட்டுநர்கள்
    பெரும்பாலான நேரங்களில் கார் ஓட்டுநர்கள் சிப்காட்டை விட்டு வெளியேற குறுக்குவழியை பயன்படுத்துகின்றனர். அது பாதுகாப்பற்றது. அதில் கார் ஓட்டுநரை மட்டும் குறை சொல்லி பலனில்லை. ஊழியர்களும் விரைவாக வீடு திரும்பும் எண்ணத்தில் அவரை எதுவும் கேட்பதில்லை. அவர் மீது நிர்வாகத்தில் புகார் அளிப்பதில்லை’’ என்கிறார் மென்பொருள் ஊழியர் ஒருவர்.
    இரவுப் பணியை விரும்பவில்லை
    2005-ல் பெங்களூரில் பிரதிபா என்கிற மென்பொருள் ஊழியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
    2012-ல் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு தொழில் வர்த்தக அமைப்பான ‘அசோசேம்’ ஒரு ஆய்வு நடத்தியது.
    சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பெண்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு நீண்ட நேரம் பணிபுரிவதை விரும்புவதில்லை என்று அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது. பொதுப் போக்குவரத்து அதிக பாதுகாப்பானதாக இல்லை என்று பெரும்பாலானவர்கள் சொல்வதாக அந்த ஆய்வு முடிவு சொல்கிறது.
    9 நாட்கள் கிடந்த உடல்
    சிறுசேரி போன்ற ஒரு பகுதியில் பொதுப் போக்குவரத்தை நாடவேண்டும் என்றால்கூட குறைந்தபட்சம் அரை கி.மீ. தூரமாவது நடந்துசெல்ல வேண்டும். ஆள் அரவமற்ற ஒரு பகுதியில் அது பாதுகாப்பு குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. உமா மகேஸ்வரியின் உடல் கிட்டத்தட்ட 9 நாட்கள் கழித்தே கண்டெடுக்கப்படுகிறது என்பதே பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்துகிறது.
    குடித்துவிட்டு கலாட்டா
    இதுபற்றி சேவ் தமிழ் அமைப்பைச் சேர்ந்த பரிமளா கூறும்போது, ‘‘மெப்ஸ், பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை, நாவலூர், சிப்காட் போன்ற பகுதிகள் புறநகரில் உள்ளடங்கிய, மனித நடமாட்டம் குறைந்த பகுதிகள். இன்று உமாவின் கொலையை கண்டித்து நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு ஆண் ஊழியர் சமீபத்தில் தன்னை சிலர் தாக்கியதாக சொன்னார்.
    ஆண் ஊழியர்களுக்கே இதுதான் நிலை எனும்போது பெண்கள் பாதுகாப்பு பற்றி கேட்கவே வேண்டாம். வேலை முடித்து திரும்பும் வழியில் குடித்துவிட்டு பலர் கலாட்டா செய்வதாக பெண்கள் புகார் சொல்கிறார்கள்” என்றார்.
    பாதுகாப்பு அவசியம், அவசரம்
    பெங்களூர் பிரதிபா கொலைக்கு பிறகே ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருப்பது பற்றி பேசியது நாஸ்காம் அமைப்பு.
    சென்னையில் பெண்களுக்கு, வேலைக்கு போகும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக இரவுப் பணிக்கு செல்லும் ஐ.டி. துறைப் பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை, அவசரத்தை உமா மகேஸ்வரியின் கொலை உணர்த்தியிருக்கிறது.tamil.thehindu.com/
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக