செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

அதிமுக அரசு ஒடுக்கிய பால் விவசாயிகள் போராட்டம் ! ஆவின் பால் மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால்

ஆவின் பால்பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம். பிப்ரவரி 4-ம் தேதி துவங்கிய தமிழக பால் உற்பத்தியாளர்களின் போராட்டம், ஆளுங்கட்சியாலும், அதிகாரிகளின் மிரட்டலாலும் பிப்ரவரி 7-ம் தேதி வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்திருந்தது. இது தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லாவிட்டால் 4-ம் தேதி போராட்டம் துவங்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளை துளியும் சட்டை செய்யவில்லை,
எனவே, அரசின் செவிட்டு காதுகளுக்கு உரைப்பதற்காக பிப்ரவரி 4-ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்தி போராட்டத்தை துவக்கினர்.
பால் உற்பத்தியாளர்களின் முதல் கோரிக்கை ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலையாக 30 ரூபாய் வழங்க வேண்டும், இரண்டாவது, கிராம கூட்டுறவு பால் சங்கங்களில் பணிபுரியும் 24,000 பணியாளர்களுக்கும் பணிப்பாதுகாப்பு தரப்பட வேண்டும், பணி வரன்முறைப்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும். மூன்றாவது, கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும். இவை தான் அவர்களுடைய முக்கியமான மூன்று கோரிக்கைகள்.
2011 நவம்பர் வரை ஒரு லிட்டர் பாலுக்கு அரசு கொடுத்து வந்த கொள்முதல் விலை ரூ 17.50, பிறகு பிப்ரவரியில் ரூ 2.50 உயர்த்தப்பட்டு 20 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து டிசம்பர் 2013-ல் யாருடனும் கலந்தாலோசிக்காமல் தானே முடிவு செய்து கொண்டு 3 ரூபாய் அதிகப்படுத்தி ரூ. 23 அளிக்க முடிவு செய்தது அரசு. ஆனால் விலை உயர்த்தப்பட்டதை உற்பத்தியாளர்களுக்கோ, சங்கத்திற்கோ முறையாக தெரிவிக்கவில்லை.
டாஸ்மாக்
டாஸ்மாக்கில் மக்கள் குடியை கெடுத்து பல்லாயிரம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டும் அரசு பாலுக்கு சில இலட்சங்களையோ இல்லை கோடிகளையோ ஒதுக்குவதில் என்ன பிரச்சினை?
பால் விவசாயிகள் கோரும் ரூ. 30 அளித்தால் நுகர்வோர் கொடுக்க வேண்டிய விலையும் அதிகம் வருமே என்று சிலர் நினைக்கலாம். இந்த நான்கைந்து ரூபாய் கூடுதல் செலவை பால் விலையை ஏற்றாமலேயே அரசு ஏற்கலாம். மேலும் பாலில் பல வகைகள் வைத்து விற்பதாலும், மொத்தத்தில் ஆவினது சந்தையையும், விற்பனையையும் அதிகப்படுத்தினால் இது பெரிய சுமை இல்லை. டாஸ்மாக்கில் மக்கள் குடியை கெடுத்து பல்லாயிரம் கோடிக் கணக்கில் பணத்தை சுருட்டும் அரசு பாலுக்கு சில இலட்சங்களையோ இல்லை கோடிகளையோ ஒதுக்குவதில் என்ன பிரச்சினை?
மேலும் பால் விவசாயிகள் இந்த விலை உயர்வை தமது இலாப நோக்கிலிருந்து கேட்கவில்லை. தமது பாலுக்குரிய அடக்க விலையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் கால்நடைகளுக்கு போட வேண்டிய தீவனங்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது.
தவிடு, பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு போன்றவையும், பிற தானியங்களும் இரண்டே ஆண்டுகளில் 53% விலை உயர்ந்துள்ளன. அதாவது கிலோ 15 ரூபாய்க்கு விற்ற பருத்திக்கொட்டை தற்போது 25 ரூபாய், கிலோ 30 ரூபாய்க்கு விற்ற பிண்ணாக்கு 40 ரூபாய். இதில் கலப்புத்தீவனம் தான் மிகவும் முக்கியமானது, கிலோ 12 ரூபாய்க்கு விற்ற கலப்புத்தீவனம் இன்று 18 ரூபாய். மூட்டை 200 ரூபாய்க்கு விற்ற உலர் தீவனங்களான வைக்கோலும், தட்டும், புல்லும் வறட்சி காரணமாக 400 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து விட்டன, அதுவும் எளிதில் கிடைப்பதில்லை. அத்துடன் இந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்கூலி, 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பாலின் கொள்முதல் விலையை ஏற்ற கூடாது என்றால் பால் விவசாயிகளுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனங்கள் அளிப்பதற்கு அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். அதையும் செய்யாமல், விலையையும் கூட்டாமல் இருந்தால் மக்கள் என்ன செய்வார்கள்?
கே.ஏ. செங்கோட்டுவேல்
பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல்
இந்த பிரச்சினைகளோடு, கோமாரி நோய் தாக்கி கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட கறவை மாடுகள் இறந்துள்ளன. நோயிலிருந்து தப்பிப் பிழைத்த மாடுகளும் முன்னர் கறந்த அளவிற்கு பால் தருவதில்லை. கோமாரி என்பது காற்றில் பரவக்கூடிய நோய். மாடுகளுக்கு உடனடியாகவும், ஒரே நேரத்திலும் தடுப்பூசிகளை போட வேண்டியது தேவை. 2008-ம் ஆண்டிலேயே ஒரே நேரத்தில் பரவலாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை விவசாயிகள் வலியுறுத்தினர், ஆனால் அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இன்று ஒரு கிராமம், நாளை ஒரு கிராமம் என்று நோயின் தீவிரத்தை பற்றி கவலைப்படாமல் ஆமையை போல செயல்பட்டது அரசு. எனவே நோய் வேகமாக பரவியது, மாடுகளும் அதிகமாக மடிந்து போயின. இதனால் விவசாயிகள் பெரும் கடனாளியாகியுள்ளனர்.
“இந்த பிரச்சினைகளோடு எல்லோருக்கும் உள்ள பிரச்சினையான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த காரணங்களால் தான் கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம், இது தவறா” என்று நம்மிடம் பேசும் போது நியாயம் கேட்கிறார் தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல்.
பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றுவதற்கு பதிலாக போராட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்காக அதிகாரிகளும், அம்மாவின் அடிமைகளும் களத்தில் குதித்து தீயாய் வேலை செய்தனர். ஆவின் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளோடு, அ.தி.மு.க அடிமைகளும், கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களை தனியாக தனியாக அழைத்தும், வீட்டிற்கு சென்றும், ‘பால் வழங்குவதை நிறுத்தக்கூடாது, நிறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும், மட்டுமில்லாமல் அம்மா அறிவித்துள்ள எந்த இலவச பொருட்களும், சலுகைகளும் கிடைக்க முடியாதபடி செய்து விடுவோம்’ என்று மிரட்டியிருக்கின்றனர்.
எனவே வேறு வழியின்றி பிப்ரவரி 7-ம் தேதி தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நடந்துகொண்டிருந்த போது தனியார் நிறுவனங்கள் ஆவினை ஒழித்துக் கட்டும் நோக்கில் வழக்கமாக வழங்கிய விலையை விட உயர்த்திக் கொடுத்து மொத்த பாலையும் வாங்க முயற்சித்தன.

“பால்னாலே ஆவின் மட்டும் தாங்க பால், அது மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால்”
தமிழகத்தில் 40 ஆண்டுகளாக இயங்கிவரும் 12,000 கூட்டுறவு பால் சங்கங்களில் தற்போது 8,000 சங்கங்கள் மட்டும் தான் தொடர்ந்து இயங்கும் நிலையில் உள்ளன. இவற்றில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்குபவர்கள் 5 இலட்சம் பேர் தான். தமிழகத்தில் தினமும் ஒன்றரை கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் ஆவின் 20 முதல் 25 இலட்சம் லிட்டரும், ஆரோக்கியா, திருமலா போன்ற தனியார் நிறுவனங்கள் 30 இலட்சம் லிட்டரும் கொள்முதல் செய்கின்றன, சைக்கிளில் எடுத்துச் சென்று விற்பவர்கள் போக இனிப்பு, தயிர், நெய் போன்ற பால் பொருட்கள் தயாரிக்கும் பெரும் பண்ணைகள், நிறுவனங்கள் சுமார் 50 இலட்சம் லிட்டரை எடுத்துக் கொள்கின்றன. 50 இலட்சம் லிட்டர் பால் சந்தைக்கே வருவதில்லை, உற்பத்தியாளர்கள் சொந்த உள்ளூர் விற்பனைக்கு வைத்துக் கொள்கின்றனர்.
“பால்னாலே ஆவின் மட்டும் தாங்க பால், அது மட்டும் தான் நூறு சதவிகிதம் கலப்படமற்ற பால். தனியார் பால் அனைத்தையுமே சுத்தமான பால் இல்லை என்றும் சொல்லலாம். இரண்டு வகை பாலையும் பார்த்தீங்கன்னா நிறத்திலேயே வித்தியாசம் தெரியும். தனியார் நிறுவனங்கள் புளித்துப் போகாமல் இருப்பதற்கும், இன்னும் எது எதற்கெல்லாமோ ரசாயனத்தை கலக்கிறார்கள். விவசாயிடமிருந்து பாலை வாங்கிய பிறகு அது மக்களின் கைகளுக்கு வந்து சேர்கிற வரைக்கும் என்னென்ன தவறுகளை செய்கிறார்கள் என்றே தெரியவில்லை, தனியார் பாலில் அவ்வளவு வேலைகள் நடக்கிறது. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டு பளபளப்பான பாக்கெட்ல அடைச்சி கொடுத்திட்டா மக்களும் அதை தரமானதுன்னு நம்பி ஏமாந்துடுறாங்க” என்கிறார் செங்கோட்டுவேல். ஆவின் பாலில் இத்தகைய தரக்குறைவு ஒன்றுமில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.
ஈரோடு போராட்டம்
2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நடத்திய போராட்டம்.
“ஆவினுடைய அழிவை தடுப்பதற்காகத்தான் எங்களுடைய போராட்டமே அறிவிக்கப்பட்டது. ஆவினை விட, தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ 5 முதல் ரூ 6 வரை கூடுதல் விலை கொடுக்கிறார்கள். இதனால், ஆவினுக்கு வரவேண்டிய பால் எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு சென்றன. மற்றபடி யாருடைய மிரட்டலுக்கும் பயந்துகொண்டு நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. ஆவினை காப்பதற்குத் தான் இந்த போராட்டம் துவங்கப்பட்டது, அதே காரணத்திற்காகத்தான் தற்போது தற்காலிக வாபசும் பெறப்பட்டிருக்கிறது.”
“எந்த தொழிலிலும் போட்டி வேணுங்க, ஆனால் ஆவின் தனியார் நிறுவனங்களோட போட்டி போடுறதே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவினுக்கு தினமும் 27 லட்சம் லிட்டர் பால் வந்து கொண்டிருந்தது. அது இப்போது 22 லட்சமாக குறைந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் அதிகாரிகளே உதவி செய்கிறார்களோ என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது” என்கிறார் செங்கோட்டுவேல்.
பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் தொடங்கி கக்கூஸ் வரை அனைத்தையும் தனியார் முதலாளிகளின் கைகளில் ஒப்படைப்பது தான் தனியார்மயம், தாராளமயம் என்கிற மறுகாலனியாக்க கொள்கை. இக்கொள்கையின்படி ஆவினை ஒழித்துக்கட்டி விட்டு ஹட்சன், ஹெரிட்டேஜ் போன்ற ஏகபோக தனியார் முதலாளிகளை பால் விற்பனையில் அனுமதிப்பது தான் அரசின் திட்டம்.
மேலும் சிறு பால் உற்பத்தியாளர்களை ஒழித்து விட்டு பெரும் பண்ணைகளை கொண்டுவரும் முகமாகவும் இந்த சதி நடைபெறுகிறது. அதற்காகத்தான் இந்த குறைந்த கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு ஆவின் ஒழிக்கப்பட்டால் பிறகு பாலும் மெல்லக் கொல்லும் தனியார்மயத்தின் விசமாக மாறும். பால் உற்பத்தியாளர்களின் இந்தப் போராட்டம் பாலில் தனியார் எனும் விசத்தை கலக்கவிடாமல் தடுக்கும் போராட்டம், ஆவினைக் காப்பாற்றும் போராட்டம், இது நம் அனைவருக்குமான போராட்டம். எனவே இப்போராட்டத்தை ஆதரிப்பது நம் அனைவரின் கடமை.
-      வினவு செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக