வியாழன், 13 பிப்ரவரி, 2014

ஏன் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயங்குகிறார்கள் ?


சென்னை,
சில துரதிருஷ்ட சம்பவங்களால், சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற பிற மாநில நீதிபதிகள் தயக்கம் காட்டுகிறார்கள் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் பிரிவு உபசார விழாவில் கூறினார்.
பிரிவு உபசார விழா
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அக்ரவால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இதில் ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு வக்கீல்கள் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவாலை வாழ்த்தி, தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி பேசினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் பேசியதாவது:–
ஒரு அங்கம்
கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி 7–ந் தேதி இந்த புகழ் பெற்ற ஐகோர்ட்டிற்கு நீதிபதியாக பதவி ஏற்றேன். அப்போது, என்னை பாராட்டி வரவேற்பு கொடுத்தீர்கள். நான் இந்த ஐகோர்ட்டில் ஒரு அங்கம் என்று முடிவு செய்து பணியை தொடங்கினேன்.
ஆனால், திடீரென ஒரு நாள் காலையில், வக்கீல்கள் ஒரு சிலர் என்னை வெளிநபராக நடத்துகின்றனர் என்று உணர்ந்தேன். இதனால், நான் கடுமையான மனவேதனை அடைந்தேன். எதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று ஆராய்ந்தும், காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், உங்களாலும் கண்டறிய முடியாது. எனவே எனக்கு அந்த காரணத்தை நீங்கள் (வக்கீல்கள்) தெரியப்படுத்துங்கள். அதன்மூலம், நான் என்னை திருத்திக்கொள்கிறேன்.
தீங்கு செய்யக்கூடாது
நீதிபதிகளும், வக்கீல்களும் வருவார்கள், போவார்கள். ஆனால் இந்த ஐகோர்ட்டு நிரந்தரமானது. இதற்கு நாம் தீங்கு செய்யக்கூடாது. நன்மதிப்பை உருவாக்க நீண்ட காலம் ஆகும். ஆனால் அந்த நன்மதிப்பை சீர்குலைக்க ஒரு நிமிடம் போதும்.
அண்மையில் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த 37 ஆண்டுகளாக நீதித்துறையில் வக்கீலாகவும், நீதிபதியாவும் பணியாற்றி வருகிறேன். ஒருமுறை கூட என் நண்பர்களோ அல்லது எதிரிகளோ என்னிடம் பேசும்போதும், என் கோர்ட்டில் வாதம் செய்யும்போதும் உரத்த குரலில் பேசியது கிடையாது.
களங்கம் ஏற்படுத்திய நீதிபதி
ஆனால், ஒரு நாள் என்னுடன் பணியாற்றும் சக நீதிபதி ஒருவர், என் மீது கடும் சொற்களை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், இந்த ஐகோர்ட்டின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தினார். எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், இந்த ஐகோர்ட்டின் செயல்பாடுகளை, பொதுமக்கள் மத்தியில் ஒரு கேலிக்கூத்தாக மாற்றியதை நினைக்கும்போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
இதனால், இந்த ஐகோர்ட்டில் பணியாற்றும் பல நீதிபதிகள் வேறு மாநில ஐகோர்ட்டுக்கு தங்களை பணிமாற்றம் செய்யும்படி என்னிடம் கேட்டனர். அதேபோல, வெளிமாநிலத்தில் பணியாற்றும் நீதிபதிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்ற தயக்கம் காட்டுகின்றனர்.
ராக்கி கட்டிய சகோதரிகள்
நீங்கள் அனைவரும் இந்த சமுதாயத்தில் மரியாதை, கவுரவம், நற்பெயர் எல்லாம் பெறுவதற்கு ஒரே காரணம் இந்த ஐகோர்ட்டு தான். பொதுமக்களின் நம்பிக்கையை இந்த ஐகோர்ட்டு இழந்து விட்டால், இந்த சமுதாயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களாக நீங்கள் இருப்பீர்கள்.
கடந்த ஆண்டு நடந்த ‘ரக்ஷாபந்தன்’ நாளில், என் கையில் பெண் வக்கீல்கள் சிலர் ‘ராக்கி’ கட்டினார்கள். அப்போது, இந்த சகோதரிகளுக்கு இந்த அமைப்பினால் ஏதாவது ஆபத்து வந்தால், அவர்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், துரதிருஷ்ட சம்பவத்தில், ராக்கி கட்டிய இந்த சகோதரிகள் முன் நின்றதை கண்டபோது, மிகவும் மனவேதனை அடைந்தேன்.
உறுதி எடுக்க வேண்டும்
ஐகோர்ட்டின் மாண்பையும், கவுரவத்தையும் நாம் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து, மீண்டும் நிலைநிறுத்த நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டுக்கு எந்த ஒரு தீங்கு ஏற்படும் செயல்களிலும் ஈடுபடாமல் விலகி இருக்க வேண்டும். நான், ஒட்டுமொத்த வக்கீல்களுக்காக இதை சொல்லவில்லை. இங்குள்ள வக்கீல்கள் சிலருக்கு, இதுபோன்ற வழிக்காட்டுதல் தேவைப்படுகிறது.
உங்களுக்கு நன்றியை மட்டும் சொல்லிவிட்டு நான் சென்று இருந்தால், நான் கடமையில் இருந்து தவறியவனாகி விடுவேன். ஐகோர்ட்டின் நலன் கருதிதான் இதனை நான் கூறினேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக