சனி, 15 பிப்ரவரி, 2014

அர்விந்த் கெஜ்ரிவாலை வீட்டுக்கு அனுப்பிய (ரிலையன்ஸ்) அம்பானி சகோதரர்கள்


டெல்லி முதல்வராக 49 நாட்கள் பதவி வகித்த அர்விந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் முழுமுதற்கான அம்பானி சகோதர்கள் செயல்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜன்லோக்பால் மசோதாவை டெல்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வெற்றி பெறச் செய்ய முடியவில்லை, எனவே முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்று கெஜ்ரிவால் கூறினாலும், அம்பானி சகோதரர்கள் அரசுக்கு கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஊழலுக்கு எதிராக 2012ம் ஆண்டு போராட்டம் நடத்திய கெஜ்ரிவால் தொழிலதிபர்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அதோடு, அம்பானி சகோதரர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்களை பகிரங்கப்படுத்தினார் அர்விந்த் கெஜ்ரிவால். அப்போதிருந்தே அம்பானி சகோதரர்களுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையேயான போர் தொடங்கிவிட்டது.
கடந்த 2013ம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் 27 இடங்களில் வெற்றி பெற்ற அர்விந்த் கெஜ்ரிவால், மின்சாரக்கட்டணத்தை உடனடியாக குறைத்தார். இதில் அனில் அம்பானிக்கு சொந்தமான பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனத்திற்கும், அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசுக்கு இடையே கடும் மோதல் வெடித்தது.
மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின் விநியோக நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. இதையடுத்து, மின் விநியோக நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டார்.
மின் விநியோகத்திற்கான கட்டண பாக்கித் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால், மின் விநியோகத்தை நிறுத்தப் போவதாகவும் அனில் அம்பானி நிறுவனம் மிரட்டல் விடுத்தது. மேலும் மின் கட்டணத்தையும் மின் விநியோக நிறுவனங்கள் உயர்த்தப் போவதாக அறிவிக்கவே, முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்
இதனைத் தொடர்ந்து டெல்லியில் குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி ஆகியோர் மீது வழக்கு தொடர சில தினங்களுக்கு முன்னர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
கோதாவரி படுகை பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதில் ரிலையன்ஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறியுள்ளதாக அமைச்சரவை முன்னாள் செயலாளர் சுப்ரமணியன் மற்றும் அட்மிரல் தஹிலினை ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கையால் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து எரிவாயு விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டிய அவர், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார்.
அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அம்பானி சகோதரர்கள் கரம் கோர்த்துக் கொண்டு செயல்பட்டனர். சமையல் எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததும், ஆம் ஆத்மி அரசு தனது பக்கத்தில் கிடக்கும் முள் செடி என்று அம்பானி கூறினார்.
இதனிடையே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுமே பாரதீய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துக்கொண்டதாக குற்றம் சாட்டினார்.
அர்விந்த் கெஜ்ரிவாலின் கூற்றை உண்மையாக்கும் விதமாக தற்போது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை அடுத்து, அம்பானி மீதான எப்.ஐ.ஆர்.,ன் கீழ் விசாரணையை தொடங்கும் உத்தரவின் மீது இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக