புதன், 19 பிப்ரவரி, 2014

தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!!


தமீம் அன்சாரிஅச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான்.சென்னை மாநகர போலீசு எல்லைக்குட்பட்ட நீலாங்கரை (ஜெ-8) போலீசு நிலையத்தின் குற்றப்பிரிவு ஆய்வாளரான புஷ்பராஜ், வெட்டுவாங்கேணி மகாத்மா காந்தி நகரில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதற்காக, சந்தேகத்தின் பேரில் தமீம் அன்சாரி என்ற 14வயது சிறுவனை சனவரி 7-ஆம் தேதியன்று இரவில் பிடித்துவந்து நீலாங்கரை போலீசு நிலையத்தில் மிருகத்தனமாக வதைத்துள்ளான். தந்தையை இழந்து படிக்க வசதியற்ற நிலையில் விதவைத்தாயுடன் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த அந்த ஏழைச் சிறுவன், தனக்கும் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கெஞ்சியும்கூட அவனைச் சட்டவிரோதமாக கொட்டடியில் அடைத்து வைத்துள்ளான். பின்னர் 8-ஆம் தேதியன்று பிற்பகலில் அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான். இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அச்சிறுவன், பின்னர் போலீசாரால் பெரும்பாக்கத்திலுள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமீம் அன்சாரி.
போலீசு நிலையத்திலேயே தண்டனை வழங்கப்படுவது நியாயம் என்றால், வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களும் எதற்காக? தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் எதற்காக? போலீசு பயங்கரத்தைப் பறைசாற்றும் இச்சட்டவிரோதக் கொடூரத்தைக் கண்ட பின்னரும், தானே முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய நீதித்துறையானது இதனை அலட்சியப்படுத்தியுள்ளது. அச்சிறுவனின் தாயாரான சபீனா பானு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னர்தான், அச்சிறுவனுக்கு அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், வருவாய் கோட்டாட்சியரை விசாரணை நடத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும், அச்சிறுவனின் குடும்பத்துக்குப் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்ச ரூபாய் வழங்கப்படுமென்றும் ஜெயலலிதாவின் அறிவிப்பைப் பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள், அதற்குமேல் இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனமோ, முக்கியத்துவமோ தராமல் அலட்சியப்படுத்துகின்றன. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் உள்ளிட்டு சமூக அமைப்புகள் அனைத்தும் செயலற்றுக் கிடக்கின்றன. இக்கொடுஞ்செயலுக்கு எதிரான போராட்டங்கள் எதுவுமின்றி சமூகம் உணர்ச்சியற்று மரத்துப்போக் கிடக்கிறது.
கொலைவெறிபிடித்த போலீசு ஆய்வாளர் புஷ்பராஜ் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செயப்பட்டுள்ளானே தவிர, அவன் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செயப்படாமல் பிணையில் வெளிவரும் வகையில் – கவனக்குறைவால் துப்பாக்கியின் குண்டு வெடித்துவிட்டதாக வழக்கு போடப்பட்டுள்ளது. போலீசு வெறியன் புஷ்பராஜ், கடந்த 2011-ஆம் ஆண்டில் மெரினா போலீசு நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்தபோது, திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் இழுத்துவரப்பட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தியபோதும், இதேபோல் தொடையில் சுட்டுள்ளான். பின்னர் இந்த விவகாரம் போலீசு அதிகாரிகளின் துணையுடன் மூடிமறைக்கப்பட்டுள்ளது.
சாமானியனுக்குப் பொருந்தக் கூடிய சட்டத்திற்கு, தான் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற திமிரோடு போலீசு நடந்து கொள்வதையும், சட்டத்துக்கு மேலான தனிவகை சாதியாக இருந்து கொண்டு சமூகத்தையே அச்சுறுத்தி வருவதையும் இத்தகைய கொடுஞ்செயல்கள் நிரூபித்துக் காட்டவில்லையா? போலீசின் கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை உழைக்கும் மக்கள் வாய் பொத்தி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?
ஒருக்காலும் கூடாது. போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகப் பொதுக்கருத்தையும் போராட்டங்களையும் கட்டியமைப்பது உழைக்கும் மக்களின் உடனடி அவசியமாகும். இலஞ்ச ஊழல், அத்துமீறல், அடாவடி, அட்டூழியங்களில் ஈடுபடும் போலீசு வெறியர்களின் படங்களைப் பொது இடங்களில் பகிரங்கமாக வெளியிட்டு அக்கும்பலை அவமானப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்களிடம் அத்துமீறினால் உடனடியாகத் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை உருவாக்கி அக்கும்பலின் அதிகாரக் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.
- குமார்.vinavu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக