வியாழன், 20 பிப்ரவரி, 2014

சோவியத் யூனியன் போன்று எல்லா தொழில்களையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தும்? தா பா மகிழ்ச்சி ?

நேற்று வெளியான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், அரசே நடத்தும், 'அம்மா' திரையரங்குகள் துவங்கப்படும் என்ற, அறிவிப்பு, கம்யூனிஸ்ட் நாடாக இருந்த, சோவியத் யூனியனைப் போல் தமிழகம் மாறி வருகிறதோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமில்லாமல், 'அம்மா' பயணியர் தங்கும் விடுதிகள், 'அம்மா' 20 லிட்டர் கேன் குடிநீர் என்ற, திட்டங்களையும் அறிவித்து, சென்னை மாநகராட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள தாக்கமோ, என்னவோ, இந்த ஆட்சியில், 'அம்மா' உணவகம், 'அம்மா' மருந்தகம், 'அம்மா' குடிநீர், 'அம்மா' காய்கறி கடை என, புதிய தொழில்களை துவங்குவதில் ஜெயலலிதா முனைப்பு காட்டி வருகிறார். கம்யூனிஸ்ட் நாடாக இருந்த சோவியத் யூனியனில், இதே போல், பெரும்பாலான தொழில்களை அரசே நடத்தி வந்தது. அந்த நாட்டு மக்களுக்கு உணவு முதல், மது வரை, அனைத்து பொருட்களும் கட்டுப்பாட்டு விலையில், அரசு வழங்கி வந்தது. இறுதியில் பொருளாதார கொள்கை தோல்வியால், கடந்த 1991ல், அந்த நாடே சின்னாபின்னமானது. அம்மா இலவச செய்திப் பத்திரிக்கையும் வரப் போகுதாம் ...அப்படியே வரலாற்றுல பின் நோக்கி போய் சோவியத் யுனியன்ல்ல இருந்து ஹிட்லர் காலத்துக்கு போயிரப்போகுது தமிழ்நாடு இல்ல ஏற்க்கனவே போயிருச்சா ?
சோவியத் தாக்கத்தோடு, இந்தியாவில், கடந்த 1977ல் இருந்து 2011 வரை, மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோது கூட, தற்போதைய தமிழக அரசு போல தொழில்களில் இறங்க, அந்த மாநில அரசு முனையவில்லை. உலகமே, திறந்த சந்தைகளையும், தொழில் சுதந்திரத்தையும் சார்ந்த கொள்கைக்கு மாறிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில்; ஒவ்வொரு நாடும், ஏன், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் கூட, தொழில்களை ஊக்குவிப்பதற்காக கட்டமைப்புகளை மேம்படுத்தி, மனித வளத்திற்கு திறமை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றன. இந்த வேளையில்; இலவசங்கள், மானியங்கள், அரசே தொழிலில் இறங்குவது என்ற, பாதையில் தமிழகம் சென்று கொண்டு இருப்பது சரிதானா என்ற, ஐயம் ஏற்படுகிறது. டாஸ்மாக்கில் துவக்கம்:கடந்த 2001ல், டாஸ்மாக் மூலம் மது விற்பனையை அரசு கையில் எடுத்ததில் இருந்து; சட்டம் - ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என, அரசு என்னவெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டுமோ, அத்தகைய விஷயங்களில் இருந்து அரசின் கவனம் திரும்பிவிட்டது. படிப்படியாக, நலத்திட்டங்கள், விலை கட்டுப்பாடு திட்டங்கள் என்ற, போர்வையில், தற்போது, குடிநீர், உணவகம், மருந்தகம், திரையரங்கு, 'ஹோட்டல்' என, அனைத்து தொழில்களிலும் அரசு இறங்கிவிட்டது. சென்னையில் துவங்கப்படும் இந்த திட்டங்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கை முடிந்த பின், தமிழக அரசு, மிகப்பெரிய தொழில் குழுமமாக மாறும், அரசு என்ற, அதனுடைய தன்மையை இழந்து நிற்கும். அத்தகைய சூழலில் அரசு ஊழியர்கள் தொழில் நிர்வாகிகளாகவும், விற்பனையாளர்களாகவும் மாறுவர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற, மனப்பான்மையும் மாறும். அது மட்டுமில்லாமல், அடுத்து வேறு கட்சியின் ஆட்சி வந்து, இந்த திட்டங்கள் மூடப்பட்டால், இவற்றுக்காக எடுக்கப்பட்ட ஊழியர்களின் நிலை என்ன ஆகும். உற்பத்தி என்னாச்சு? இந்த அளவிற்கு, அரசு, தொழில்களை துவங்கிவிட்ட நிலையில், அடுத்தடுத்து, முடி திருத்தும் கடை, பழச்சாறு கடை, காலணி கடை, ஆயத்த ஆடைகள் கடை உள்ளிட்ட மற்ற தொழில்களிலும் இறங்காது என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருபுறம், பொருளாதார மந்த நிலையால், நுகர்வு குறையும் வலி மக்களுக்கு தெரியக்கூடாது; தெரிந்தால் தேர்தலில் அது பிரதிபலிக்கும் என்ற, நோக்கோடு நுகர்வு சார்ந்த தொழில்களில் அரசு இறங்குகிறது. ஆனால், உற்பத்தி தான் பொருளாதாரத்தின் அடித்தளம் என்பதை, மறந்துவிட்டது. தொழில்களை கவனிப்பதில் அரசு நேரம் செலுத்தி வருகையில், தமிழகத்தில், உற்பத்தி துறை கடும் அடி வாங்கி, மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயரும் படலம் துவங்கிவிட்டது. விவசாயம் அபாய கட்டத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது.

இதனால், ரேஷன் அரிசி கூட, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து வர வேண்டிய நிலை உள்ளது. மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் அறிவித்த மாணவர் கடன் சலுகை, தமிழகத்தை குறிவைத்து தான்; 2009ல் கடன் வாங்கி வேலையில்லாமல் திண்டாடும், ஒன்பது லட்சம் மாணவர்களில், 25 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது, வேலைவாய்ப்பும், வருமானமும் குறைந்து கொண்டு இருக்கும் சூழலில், நுகர்வை மலிவாக்கிக் கொள்ள தமிழக அரசு வழி செய்து வருகிறது. வேலை இழந்தவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டு, பீடி பிடிக்கத் துவங்குவது போலானது. இதனால், இன்றைய நுகர்வு சுகமாக இருந்தாலும், நாளை, வருமானத்திற்கு வழி செய்யாது.

தமிழக அரசின் ஆண்டு வருமானம், 1.27
லட்சம் கோடி ரூபாய். இதில், இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் 48 ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடுகிறது. அதாவது வருவாயில் 37 சதவீதம் அளவு, வெறும், இன்றைய நுகர்வை சுகமாக்க செலவிடப்படுகிறது. இதுவே, சாலைகள், ரயில் தடங்கள், தரமான பள்ளிகள், தொழில் பூங்காக்கள், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறந்த மருத்துவமனைகள், பாசன வசதிகள் என, உள்கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருந்தால், தமிழகத்தின் உற்பத்தி பல மடங்கு பெருகி இருக்கும். இன்றோ, பள்ளிகளும், மருத்துவமனைகளும், நெடுஞ்சாலைகளும் தனியார் வசம் உள்ளன; மது விற்பனையும், உணவு விடுதிகளும் அரசின் வசம் உள்ளன. இந்த முரண்பாடான நிலை மாற, தமிழக வாக்காளர்களும், நிகர லாபத்தை மட்டும் நோக்கில் கொள்ளாமல் சிந்திக்க வேண்டும்.

இலவச கல்வி, இலவச மருத்துவமனைகள், சிறப்பான சட்டம் - ஒழுங்கு, சிறப்பான கட்டமைப்பு என, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நிலையிலும், உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கும் நிலையிலும், மனித வளத்தையும், தொழில் வளத்தையும் பெருக்கும் பொறுப்போடு மட்டும் தமிழக அரசு செயல்பட வேண்டும். உற்பத்தியை பெருக்கும் நோக்கில், 'விஷன் - 2023' என்ற, தொலைநோக்கு ஆவணத்தை முதல்வர் வெளியிட்ட போது, சாதாரண மக்கள் முதல், தொழில்அதிபர்கள் வரை, பாராட்டினர். ஆனால், அதற்கு வேட்டு வைப்பது போல், முதல்வர், சிலரின் தவறான வழிகாட்டுதலால், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் படலத்தில் இறங்கி உள்ளார் என்ற, கருத்து எழுந்து உள்ளது.


- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக