செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பா.ம.க., - தே.மு.தி.க.,வுக்கு பா.ஜ., கெடு ! 5 நாளில் முடிவை சொல்லுங்க!': ஐயோ அழுதுருவேன் ?

தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் கூட்டணி முடிவை, வரும், 15ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., கெடு விதித்துள்ளது. அதற்குள் முடிவை தெரிவிக்காவிட்டால், இக்கட்சிகளின் வருகைக்காக, காத்திருக்கப் போவதில்லை என்றும், தற்போதுள்ள கட்சி களின் துணையோடு, தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியை, வரும், 15ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு, மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும், கூட்டணி பற்றிய பேச்சு நீடிக்கக் கூடாது என்றும், தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் எனவும், பா.ஜ., தலைமை கருதுகிறது.தற்போது, ம.தி.மு.க., - ஐ.ஜே.கே., மற்றும் கொங்கு மண்டல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை, பா.ஜ., முடித்துள்ளது. தே.மு.தி.க., - பா.ம.க.,வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
 இதுகுறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:பா.ஜ., கூட்டணியில், 20 தொகுதிகள் கேட்டு, தே.மு.தி.க., தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 12 தொகுதிகள் வரை தரலாம் என, பா.ஜ., தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தன் முடிவை வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறார்.   5 நாட்களுக்குள் முடிவை அறிவிக்காவிட்டால் ............என்ன செய்வீர்கள்? 6 நாட்களுக்குள் அறிவியுங்கள்...7 நாட்களுக்குள் அறிவியுங்கள்....

தற்போது, நேர்காணல் நடத்தி வரும் விஜய காந்த், யாருடன் கூட்டு சேரலாம் என, கருத்து கேட்டு வருகிறார். அதன்பின்னரே, முடிவை அறிவிப்பார் என, தே.மு.தி.க., தரப்பில் இருந்து, பதில் வந்துள்ளது. அதனால், ஐந்து நாட்கள் வரை காத்திருக்கலாம் என, நாங்கள் முடிவுசெய்துள்ளோம். பா.ம.க., தலைவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஜாதி அமைப்புகளுடன் இணைந்து, சமுதாயகூட்டணி அமைத்துள்ள, பா.ம.க., அதன் சார்பில், 15 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக, ராமதாஸ் கூறுகிறார். அந்த, 15 தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என, கேட்டு வருகிறார். ஆனால், அவ்வளவு தொகுதிகள் ஒதுக்க முடியாத நிலை உள்ளதை, பா.ஜ., தலைவர்கள், அவரிடம் விளக்கி உள்ளனர். கூட்டணிக்கு ஒருவேளை, தே.மு.தி.க., வராமல் போனால், பா.ம.க.,வுக்கு, 12 தொகுதிகள் ஒதுக்கப்படும் என, வாக்குறுதி அளித்துஉள்ளனர்.இதனால், தே.மு.தி.க., முடிவு தெரியும் வரை, பேச்சு வார்த்தையை இழுத்தடிக்க, பா.ம.க., விரும்புகிறது. அதனால், கூட்டணி முடிவை சொல்லாமல் இருக்கிறது. தே.மு.தி.க.,வுக்கு, வேறு கட்சிகளுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், பா.ம.க.,வுக்கு வேறு கூட்டணி வாய்ப்பு இல்லை. எனவே, அக்கட்சி, பா.ஜ., கூட்டணிக்கு தான் வந்து சேரும். ஆனால், தே.மு.தி.க., வராவிட்டால், கூடுதல் தொகுதிகள் கிடைக்குமேஎன்பதால், முடிவை சொல்ல தயக்கம் காட்டுகிறது. இதற்கிடையில், சென்னையில் நடந்த மோடி பொதுக் கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவு, இக்கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.? கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமலேயே, இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டு வந்துள்ளது. இது, அக்கட்சிகளின் எண்ணஓட்டத்தையே மாற்றியுள்ளதாக தெரிகிறது.எனவே, 15ம் தேதிக்குள் இக்கட்சிகள், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை நிச்சயம் எடுப்பர் என, நாங்கள் எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர். 'இனி விஜயகாந்த் தான் சொல்ல வேண்டும்': மதுரையில் பா.ஜ., மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்கூறியதாவது:தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து இனி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் நீங்கள் (நிருபர்கள்) தான் கேட்க வேண்டும். கூட்டணியில் இணையும் முடிவை, அவர் தான் சொல்ல வேண்டும். எத்தனை கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து விரிவாக கூற, இது நேரமில்லை. அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.,வுக்கு, எந்த மறைமுகஉறவும் கிடையாது. கூட்டணி குறித்து பா.ஜ.,வெளிப்படையாக பேசி வருகிறது.நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போதும், இதுவரை வாயை திறக்காத மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தன்னை தமிழர் என, சொல்லி கொள்வது, தலைகுனிவை ஏற்படுத்துகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., குறித்து, இந்த நேரத்தில் விமர்சிக்க தேவையில்லை. வரவுள்ளது லோக்சபா தேர்தல். காங்., செய்த தவறுகளை பட்டியலிடுகிறோம்.போட்டி என்றால், மூன்று பரிசுகள் உண்டு. வரும் தேர்தல் போட்டியில், பா.ஜ., வெற்றி பெற்று, முதல் பரிசு பெறும். இரண்டாவது பரிசு, யாருக்கு போகிறதோ தெரியவில்லை. மூன்றாவது பரிசு மூன்றாவது அணிக்கு உண்டு.இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். - நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக