வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? 2 நாளில் அறிவிப்பு

ஐதராபாத்:தெலங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, ஆந்திர நிலைமை குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் நரசிம்மன் நேற்று அறிக்கை அனுப்பினார். அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது குறித்து 2 நாளில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

ஆந்திராவை பிரித்து தெலங்கானா புதிய மாநிலம் உருவாக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா கடும் அமளிக்கிடையே நிறைவேறியுள்ளது. இன்று அல்லது நாளை இந்த மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், மத்திய அரசின் கெஜட்டில் இந்த மசோதா வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, புதிய தெலங்கானா மாநிலம் உதயமாகும்.


இதற்கிடையே, கடந்த புதன்கிழமையன்று மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து கிரண்குமார் ரெட்டி விலகினார். காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று கவர்னர் நரசிம்மனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். காபந்து முதல்வராக நீடிக்கவும் விருப்பம் இல்லை என கவர்னரிடம் தெரிவித்தார். அவரது ராஜினாமாவை கவர்னர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால், அது தொடர்பாக கவர்னர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. பொதுவாக முதல்வர் பதவி விலகினால் அவரின் கீழ் அமைச்சரவையும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டதாகவே கருதப்படும். முதல்வர் ராஜினாமா ஏற்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத காரணத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர்களின் உத்தரவை ஏற்பதா வேண்டாமா என்பதில் அரசு அதிகாரிகள் மத்தியில் குழப்பம் நிலவியது. இதற்கிடையில் முதல்வர் ராஜினாமாவுக்கு பிந்தைய ஆந்திர அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் நரசிம்மன் நேற்று அறிக்கை அனுப்பினார். கிரண்குமார் ரெட்டிக்கு பதிலாக புதிதாக யாரையும் முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதனால், அங்கு ஜனாதிபதி ஆட்சியே அமல்படுத்தப்படும். இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரண்டு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டசபை தேர்தலையும் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. தற்போது ஆந்திர சட்டசபை இரண்டாக பிரிக்கப்பட இருப்பதால், மக்களவை தேர்தலுடன் சேர்த்து இரண்டு மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் இதர விஷயங்களை முடிவு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால், இருமாநில தேர்தல்களும் தள்ளிவைக்கப்படும். தற்போது, தெலங்கானா சட்டசபைக்கு 119 தொகுதிகளும், பிரிக்கப்பட்ட ஆந்திர சட்டசபைக்கு 175 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதத்திற்கு பின்னர், இந்த இரண்டு மாநிலத்துக்கு தனியாக தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.
-tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக