திங்கள், 13 ஜனவரி, 2014

திருப்பதி வைகுண்டம் கதவை உடைத்து வெளியேறிய பக்தர்கள் ! தரிசன அனுமதி தாமதம்

திருமலை: திருப்பதி கோயிலில் நீண்ட நேரமாக காத்திருந்தும் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்காததால், வைகுண்டம் மையத்தின் கதவுகளை உடைத்து பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதி கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி என 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 1.30 மணிக்கு ஆகம முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய யிரக்கணக்கான பக்தர்கள் கடந்த 3 நாட்களாக திருப்பதி கோயிலில் திரண்டிருந்தனர். வைகுண்ட ஏகாதசி அன்று தரிசனம் முடித்து 61 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்தனர்.


நேற்று துவாதசியையொட்டி, தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருந்தது. இதில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் முதலே வைகுண்டம் மைய அறைகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு நேற்று காலை 10 மணி வரை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. மேலும் அறைகளில் காத்திருந்த பக்தர்களுக்கு போதுமான அளவு உணவு, பால் வழங்கவில்லை. இதனால் வைகுண்டம் மையத்தில் உள்ள 16, 17, 22, 23, 24 ஆகிய 5 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் அங்கிருந்த இரும்பு கதவுகளை உடைத்து கொண்டு தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் செல்ல முயன்றனர். இதனால் பக்தர்களிடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலர் காயம் அடைந்தனர்.

அவர்களுக்கு அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்க முயன்ற போது, சிகிச்சை வேண்டாம், தங்களை உடனே தரிசனத்துக்கு அனுமதித்தால் போதும் என கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் உதவி பாதுகாப்பு அலுவலர் மல்லிகார்ஜுனா மற்றும் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கூட்டம் அதிகமாக இருப்பதால் முதலில் வந்தவர்களுக்கு சுவாமி தரிசனத்துக்காக ஒவ்வொரு அறையாக திறக்கப்பட்டு அனுமதிக்கப்படும். உங்களது அறைகள் அரை மணி நேரத்தில் திறக்கப்பட இருந்தது. அதற்குள் கதவுகளை உடைத்து கொண்டு வந்தது சரியல்ல என்றனர். பின்னர் சிறிது நேரத்தில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக