திங்கள், 13 ஜனவரி, 2014

வழி தவறி சென்றால் கண்டுபிடிக்க ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜிபிஎஸ் கருவி

திருச்சி : தமிழகத்தில் முதன்முறையாக திருச்சியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது.தமிழர்களின் வீரமிகு விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு மிக முக்கியமானது. வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கிறதோ, அதே அளவிற்கு கவுரவமும் இதில் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவி விட்டால் விழுப்புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.


அதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப்பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும்.எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்ன தாக காளைகள், காளையர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகள் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டு பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.

இத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. இவ்வாறு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாங்கப்படும் அல்லது வளர்க்கப்படும் காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச் சியில் கலந்து கொள்ளும்போது பாதை மாறி ஊர் மாறி சென்று விடுவதும், சில நேரங்கள் தெரியாத பகுதிக்கு சென்று விடுவதும் உண்டு. சம்மந்தப்பட்ட காளை மாட்டின் உரிமையாளர்கள் பல நாட்கள் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கப்பார்கள்.இத்தகைய சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக ஜல்லிக்கட்டுகாளைகளுக்கு ஜிபிஎஸ் கருவிகள் (இந்த கருவி பொருத்தப்படும் பொருளோ, உயிரினமோ இருக்கும் இடத்தை செல்போன்கள் உதவியுடன் கண்டுபிடிக்க முடியும்) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மலையகப்பகுதி அமைச்சரான செந்தில் தொண்டமானுக்கு சொந்தமான 9 ஜல்லிக்கட்டு களைகள் திருச்சியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த காளைகளில் அதிக தூரம் ஓடக்கூடிய 3 காளைகளுக்கு இந்த ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படுகின்றன.இதுதொடர்பாக வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் மாநிலத் இணைச்செயலாளர் ராஜேஷ் கூறியதாவது:-ரூ.5 ஆயிரம் செலவில் ஜிபிஎஸ் கருவிகள் கிடைக்கிறது. இவை அனைத்தும் மாடுகளின் கொம்பு மற்றும் கழுத்தில் துண்டு கட்டும்போது கட்டப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி பிறகு மாடுகள் ஓடும் பகுதியை தெரிந்து கொண்டு பின்தொடர்ந்து செல்ல முடியும். அவ்வாறு செல்லும் போது மாடுகளை தவறவிட்டு விட்டாலும் சந்தேகப்படும்படியான பகுதிக்கு 150 மீட்டர் தூரத்திற்குள் மாடு இருந்தால் செல்போன் காட்டிக்கொடுத்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நீண்ட தூரம் பயணிக்கும் காளைகளுக்கு ஏசி வேன்


ஜிபிஎஸ் கருவி பொருத்துவது ஒரு புறம் இருக்க, ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மற்றொரு சிறப்பு ஏற்பாடாக அவைகளை கொண்டு செல்ல ஏசி அறைகளை கொண்ட தனி வேன் ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது.திருச்சியில் தயாராகியுள்ள இந்த வேன் குறித்து தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச்செயலாளர் ஒண்டிராஜ் கூறுகையில், கடந்த காலங்களில் நடத்திய படியும், வேன்களில் ஏற்றியும் காளைகளை கொண்டு செல்வார்கள். இதனால் அவை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது மிகவும் அசதியாக காணப்படும். இதனை தவிர்க்கத்தான் இந்த புதிய ஏசி வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 15 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு செல்லும் காளைகள் சொகுசாக வேனில் பயணம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 5 காளைகளை அழைத்து செல்ல முடியும் என்றார்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக