திங்கள், 13 ஜனவரி, 2014

அழகிரி ஆதரவாளர் தற்கொலை...! திமுகவினர் அதிர்ச்சி


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் திமுகவைச் சேர்ந்த நகர செயலாளர் ஆர்.பி.ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இவர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அழகிரிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாக இவர் சில நாட்களாகவே வருத்தப்பட்டு வந்தாராம். இவரது திடீர் தற்கொலையால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஆர்.பி.ஈஸ்வரன் (50). இவர் கம்பம் நகர தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய மூத்த மருமகன் அறிவழகன் நேற்று காலையில் வழக்கம் போல் ஈஸ்வரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டு வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் ஈஸ்வரன் துக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அறிவழகன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகிக்கும் பாலக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈஸ்வரனின் மருமகன் அறிவழகன் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், எனது மாமனார் ஈஸ்வரன் தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளர். கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைமைக்கழகம் மு.க.அழகிரிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறி மன உளைச்சலில் இருந்தார். இந்த மன உளைச்சலால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். ஈஸ்வரன் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. அதில் என்ன எழுதியுள்ளது என்று தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக