வெள்ளி, 10 ஜனவரி, 2014

அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற இந்தியா உத்தரவு


 தேவயானி விவகாரத்தில் பதிலடி தரும் விதமாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்தில் பணிபுரியும் தூதர அதிகாரிக்கு இணையான பொறுப்பில் இருந்த ஒருவரை நாட்டு விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.
விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட தேவயானி கோபர்கடேவை தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், தேவயானிக்கு இணையாக டெல்லியில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
தேவயானி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இந்தியா வந்து சேர்வதற்குள், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றும் பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரியை, இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் தம்மிடம் இருந்தாலும், அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
அதேவேளையில், தேவயானி வழக்கு தொடர்பான நடைமுறைகளில் இந்த அதிகாரி ஈடுபட்டிருந்ததன் காரணமாகவே, தேவயானி அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு ஆளானார் என இந்தியா நம்புவதாக வெளியுறவு வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதை அடுத்து, தேவையானி இன்று அங்கிருந்து இந்தியா புறப்பட்டார்.
இந்தியா புறப்படுவதற்கு முன்பு தேவயானி அளித்த பேட்டியில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும், இது பொய் குற்றச்சாட்டு என்பதை சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு நிரூபிப்பேன் என்றும் கூறினார்.
முன்னதாக, தேவயானி கோப்ரகடே தனது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸுக்கு குறைவான ஊதியம் அளித்தார்; விசா மோசடி செய்துள்ளார் என்ற புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் போதை கடத்தல் குற்றவாளிகளுடன் அடைத்து வைத்தனர். தேவயானியின் ஆடையை அகற்றி சோதனையிட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பெண் தூதரை மிகவும் மோசமாக நடத்திய அமெரிக்க அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துடன் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக