வியாழன், 23 ஜனவரி, 2014

திமுகவில் ஒரிஜினல் தி.மு.க.,வினர் ஓரங்கட்டப்படுகின்றனர் !அழகிரி

தி.மு.க.,வில், ஸ்டாலினுடன் ஏற்பட்டுள்ள மோதல் சூடுபிடித்துள்ள நிலையில், வரும், 30ம் தேதி, பிறந்த நாளை மதுரையில் கொண்டாடுகிறார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. அப்போது, தன் ஆதரவு பலத்தை காட்ட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக, தி.மு.க.,வின் முன்னணி பிரமுகர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன், தொலைபேசி மூலம் பேசி, காய் நகர்த்தி வருகிறார். அழகிரி பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: கட்சியில் நான் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால், ஸ்டாலின், கனிமொழிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் எனக்கு கிடைப்பதில்லை. யாராவது என்னை நம்பி இருந்தால், அவர்களை வெளியேற்றுகின்றனர். இது என்ன நியாயம்?என்னுடன் இருந்த பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதியை பிரித்தனர். இப்போது மூர்த்தி, மூக்கையாவையும் பிரித்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம், சாத்தூர் ராமச்சந்திரனும், ஐ.பெரியசாமியும் தான்.
தளபதியை நான் தான் வளர்த்து விட்டேன். ம.தி.மு.க.,வில் இருந்து வந்த பொன்.முத்துராமலிங்கத்துக்கு, 1999ல் 'சீட்' வாங்கி கொடுத்தேன். மூர்த்தி, மூக்கையாவையும் நான் தான் பாதுகாத்தேன்.சாத்தூர் ராமச்சந்திரனை நான் தான் கட்சியில் சேர்த்தேன். ஐ.பெரியசாமிக்கு, லோக்கல் பிரச்னை வந்தபோது, நான் தீர்த்து வைத்தேன். இருவரும் அந்த நன்றியை மறந்து விட்டனர். நான் வளர்த்து விட்டவர்கள் எல்லாம், எனக்கு எதிராக, ஸ்டாலினை தூண்டி விடுகின்றனர்.அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கும், ம.தி.மு.க.,வுக்கு போய் வந்தவர்களுக்கும் தான், மரியாதை கிடைக்கிறது. ஒரிஜினல் தி.மு.க.,வினர் ஓரங்கட்டப்படுகின்றனர்.
இதையெல்லாம் யோசித்து பாருங்கள்; நான் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.இப்போது கூட, கம்பம், மேலூர் பகுதிகளுக்கு சென்று வந்தேன். எப்போதும் போல் என் ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். ஒரு சிலர் போய் விட்டதால், நான் ஓய்ந்து விட மாட்டேன்.இவ்வாறு, அழகிரி பேசி, அவரது பிறந்த நாளுக்கு வரும்படி ஆதரவு திரட்டி வருவதாக, ஆதரவாளர்கள் தெரிவித்தனர். dinamalar.com

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக