திங்கள், 6 ஜனவரி, 2014

BJP: ராமதாஸை விடுங்க, கேப்டனைப் பிடிங்க.. ! டென்ஷனில் ராமதாஸ் : குடிப்பதை ஆதரிப்பவர்.. அவருடன் எப்படி...



சென்னை: பாஜகவுடன் கூட்டணி சேரும் மூடில் பாமக இருந்து வந்த நிலையில் திடீரென அக்கட்சி பின்வாங்கியுள்ளதற்கு விஜயகாந்த்தை, பாஜக தலைவர்கள் போய்ச் சந்தித்து அளவளாவி விட்டு வந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விஜயகாந்த்தை அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும், பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோரும் சந்தித்துப் பேசியதை பாமக ரசிக்கவில்லையாம். விஜயகாந்த்தே வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோம். அப்படியும் மீறிப் போய் இவர்கள் சந்தித்தால் என்ன அர்த்தம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிருப்தியாகி விட்டாராம்.
டாக்டர் ராமதாஸ் உண்மையில் கடும் டென்ஷனில் இருப்பதாக சொல்கிறார்கள். அவரது போக்கைப் பார்த்தால் வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் அவர் கூட்டு சேர வாய்ப்பில்லை என்றே தெரிவதாக பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் கூட அத்தனைக் கட்சிகளையும் அவர் சரமாரியாக விமர்சித்துப் பேசினாராம். இதனால் அவர் யாருடனும் கூட்டணி சேர வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
அவர் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் டெல்லிக்குப் போய் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, அன்புமணி ராமதாஸும் சந்தித்துப் பேசினார். இதனால் வாய்ப்புகள் பிரகாசமாகின. ஆனால் விஜயகாந்த்தால் தற்போது பாஜகவுக்கு ஆதரவான நிலையை ராமதாஸ் கைவிட்டு விட்டதாக தெரிகிறது.
ஜயகாந்த் மீது ஆரம்பத்திலிருந்தே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை பாமகவுக்கு. காரணம், வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியை பதம் பார்த்த முக்கியக் கட்சிகளில் தேமுதிகவும் ஒன்று. மேலும் குடிப்பதை ஆதரிப்பது போல பேசுபவர் விஜயகாந்த் என்ற எண்ணமும் பாமகவுக்கு உண்டு. எனவே விஜயகாந்த்தை அவர்கள் ஒரு தலைவராகக் கூட கருதுவதில்லை
இந்த நிலையில்தான் பாஜக தலைவர்கள் போய் விஜயகாந்த்தைப் பார்த்து கூட்டணி குறித்துப் பேசியது ராமதாஸை கொந்தளிக்க வைத்து விட்டதாம். எனக்குப் பிடிக்காது, தேமுதிகவைச் சேர்க்கக் கூடாது என்று கூறியும் மீறி அவர்கள் போய்ப் பார்த்தால் என்ன அர்த்தம் என்று குமுறி விட்டாராம் ராமதாஸ்.
இந்தக் கோபத்தைத்தான் பொதுக்குழுவில் கொட்டித் தீர்த்து விட்டார் ராமதாஸ். குறிப்பாக தேமுதிகவை அவர் கடுமையாக விமர்சித்து் பேசியுள்ளார். விஜயகாந்த் குறித்து அவர் பேசுகையில், ஒரு நடிகர் இருக்கிறார். அவர் தனது கட்சியை பட்ட மரம் என்கிறார். குடிச்சால் என்ன தப்பு என்று கேட்கிறார் என்று சாடினார் ராமதாஸ்.
திமுக அதிமுக குறித்து அவர் கூறுகையில், திமுகவும் அதிமுக-வும் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தை குட்டிச்சுவராக்கிவிட்டது. காங்கிரஸ் 1989 தேர்தலில் 26 எம்.எல்.ஏ. தொகுதிகளில் வென்றது. அதுவும் ராஜீவ் காந்தி 15 தடவை தமிழகத்துக்கு வந்தார். அதன் பிறகு அந்தக் கட்சி யாருடனாவது கூட்டணியில்தான் இருந்தது.
பாஜகவையும் ராமதாஸ் விடவில்லை. அக்கட்சி குறித்து அவர் விமர்சிக்கையில், பாஜக தனியாக நின்று என்ன சாதித்தது. ஒரே ஒரு எம்.எல்.ஏவைத்தான் அவர்களால் ஜெயிக்க முடிந்தது என்று வாரினார்.
பாமக மட்டுமே கொள்கைப் பிடிப்புடன் உறுதியாக உள்ள ஒரே கட்சி என்றும் ராமதாஸ் கூறியுள்ளாராம்.
ஆனால் பாஜக வேறு மாதிரியாக கணக்குப் போடுகிறது. ஒரே நேரத்தில் வட மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல செல்வாக்குடன் இருப்பவர் விஜயகாந்த். தமிழகம் தழுவிய அளவிலும் ஒரு நிலையான வாக்கு வங்கியை வைத்திருப்பவர். எனவே ராமதாஸை விட விஜயகாந்த்தான் பெட்டர் சாய்ஸ் என்று இங்குள்ள பாஜக தலைவர்கள் மேலிடம் வரை போட்டுக் கொடுத்து வருகின்றனராம். இதுதான் பாமகவையும் கடுப்படைய வைத்துள்ளதாம்
ராமதாஸ் வந்தா வரட்டும், இல்லாட்டி போகட்டும். நமக்கு விஜயகாந்த் கிடைத்தால் சரித்தான் என்ற அளவுக்கு இப்போது பாஜகவினர் மன நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் பாமகவைப் பொறுத்தவரை சில மாவட்டங்களில் மட்டுமே அவர்களுக்கு வாக்கு வங்கி ஓரளவு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பூஜ்யம்தான் உள்ளது. அதிலும் அவர்களது சமுதாயத்தினர் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் கூட அவர்களுக்கு 4 சதவீத வாக்குகள்தான் உள்ளன. ஆனால் தேமுதிகவுக்கு மாநில அளவில் 8 சதவீத வாக்குகள் உள்ளன. இதுதான் முக்கியம் என்பதும் தமிழக பாஜகவினரின் கணக்கா
எனவே போகிற போக்கைப் பார்த்தால் பாமக தனித்துப் போட்டியிடக் கூடிய வாய்ப்புகளே பிரகாசமாக உள்ளன. அவர்களோடு சில சாதிக் கட்சிகள், அமைப்புகள் கூட்டணி சேரலாம். மற்றபடி பாஜக அணியில் பாமக இணையும் என்பதற்கா்ன வாய்ப்புள் மிக மிகக் குறைவாகவே உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக