வியாழன், 9 ஜனவரி, 2014

அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!


சென்னை: மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர்கள் 5 பேர் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் பி.எம்.மன்னன் ( மதுரை முன்னாள் துணை மேயர் ) , எழில் மன்னன், முபாரக் மந்திரி, அன்பரசு இளங்கோ, பாலாஜி ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 5 பேரும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றனர். இவர்கள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்ட 5 பேருமே திமுக தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள். இவர்களில் முபாரக் மந்திரி, அண்மையில் திமுக தலைமைக்கு எதிராக "டோன்ட் ஒர்ரி" என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டியவர். மு.க. அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் திமுகவில் இருந்து சஸ்பென்ட் முன்னதாக மு.க. அழகிரி ஆதரவாளர்கள், மதுரையில் ஒட்டிய போஸ்டர்களில் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததும் கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்தது. இதனையடுத்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க அமைப்புகள் அனைத்தையும் கலைப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இந்நிலையில் தி.மு.க. அமைப்புகள் கலைக்கப்பட்டது தனக்கு தெரியாது என்றும், தே.மு.தி.கவுடான கூட்டணி தேவையற்றது என்றும் அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து கூட்டணி குறித்து அழகிரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி, கழகத்தின் கட்டுப்பாட்டைக் குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் கழகத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் மு.க. அழகிரி நேற்று திடீரென கட்சித் தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்றார். அவர் கருணாநிதியை சந்தித்துப் பேசியதாக முதலில் செய்தி வெளியான நிலையில், தாயார் தயாளு அம்மாளை மட்டுமே அவர் சந்தித்ததாக கூறப்பட்டது. இன்று அழகிரி ஆதரவாளர்கள் 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அழகிரி தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக