புதன், 22 ஜனவரி, 2014

37 தடங்களில் பிரிமியம் ரயில்’- விமானத்துக்கு இணையான கட்டணம் ! டிக்கெட் இல்லை என்ற கவலையே இல்லை !

டிக்கெட் இல்லை என்ற கவலையே இல்லை 37 தடங்களில் ஓடப்போகிறது குளுகுளு ‘பிரிமியம் ரயில்’- விமானத்துக்கு இணையான கட்டணம் வசூலிக்க திட்டம் புதுடெல்லி: பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகை தினங்களில் ஊருக்கு போக ரயில் டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது.  என்னதான் முதல்நாள் இரவில் இருந்து ரயில் நிலையத்திலலேயே பாய் விரித்து காத்துக்கிடந்தாலும், முன்பதிவு தொடங்கிய சில  நிமிடங்களில் அத்தனை டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும். பிறகு சிறப்பு ரயில்கள் விட்டாலும், அதிலும் அதே டிமாண்ட்தான். தட்கல்  டிக்கெட் எடுக்கலாம் என்றால், டிக்கெட் கைக்கு கிடைக்கும் வரை படபடப்புதான் மிஞ்சும். இதற்கெல்லாம் புதுவழி கண்டுபிடித்திருக்கிறது  ரயில்வே. எப்போதுமே டிக்கெட் கிடைக்கும் வகையில், முழுவதும் குளு குளு வசதி கொண்ட பிரிமியம் ரயில் இயக்க உள்ளது. இதில் ஆன்-லைன்  மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசனில் டெல்லி-மும்பை இடையே இந்த பிரிமியம் ரயில்  இயக்கப்பட்டது.

 இதில் 3 அடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ12 ஆயிரம் வரையும், இரண்டடுக்கு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ17 ஆயிரம் வரையும்  வசூலிக்கப்பட்டது. பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்ட இந்த ரயில் சேவை மூலம் ரயில்வேக்கு தட்கல் டிக்கெட்டை விட சராசரியாக 43  சதவீதம் வரை கூடுதல் வருவாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. சாதாரண ராஜதானி ரயில் கட்டணத்தை விட இது ஏறக்குறைய ஏழு மடங்கு  அதிகம். ஆண்டு இறுதியிலும், கோடை விடுமுறை நாட்களிலும் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகம் இருக்கும். இதுபோன்ற  அதிக கட்டணம்தான் இந்த ரயிலில் வசூலிக்கப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் கோடை விடுமுறை வர உள்ளதால், சுற்றுலா  தலங்களான கோவா, பிகானிர் ஆகிய இடங்களுக்கு பிரிமியம் ரயில் இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 இதுகுறித்து ரயில்வே வாரியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எப்போதுமே காத்திருப்பு பட்டியல் உள்ள 37 தடங்களை  நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த தடங்களில் பிரிமியம் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படை கட்டணம் மற்ற  ரயில்களில் தட்கல் டிக்கெட்டுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கும். டிக்கெட்டின் முழு கட்டணத்தை கணக்கிட் டால், விமான கட்டணத்துக்கு இணையாக அல்லது சற்று குறைவாக இருக்கும்‘ என்றார்.
காத்திருப்போர் பட்டியல் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சென்றால், அந்த தடத்தில் இந்த பிரிமியம் ரயிலை இயக்கலாம் என்று அதிகாரிகளுக்கு  தானாகவே தகவல் அனுப்பும் வகையில் ஒரு தொழில் நுட்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும், ரயில் கட்டணம் விமான கட்டணத்தை  விட சற்று குறைவாக இருக்கும்படி அதிகாரிகள் கண்காணிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர். பிரிமியம் ரயிலில் டிக்கெட் எடுத்துவிட்டால்  அதை ரத்து செய்ய முடியாது. பணமும் திரும்ப பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது..dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக