ஞாயிறு, 5 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி 300 இடங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு..


டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து அடுத்து ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது ஆம் ஆத்மி கட்சி. அதேபோல வருகிற லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தவும் அது தீர்மானித்துள்ளது. ஹரியானா சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் கொள்கை வகுப்புப் பிரிவுத் தலைவருமான யோகேந்திர யாதவ் அறிவிக்கப்படவுள்ளார். 300 இடங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு.. ! ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. இதில் லோக்சபா தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவுள்ளோம். ஜனவரி 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை இது நடைபெறும். மெய்ன் பி ஆம் ஆத்மி என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். இதுவரை உறுப்பினர் கட்டணமா்க ரூ. 10 வசூலிக்கப்பட்டது. அதை ரத்து செய்து இலவசமாகவே உறுப்பினர்களைச் சேர்க்க தற்போது திட்டமிட்டுள்ளோம். ஹரியானா சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வரவுள்ளது. அதில் மொத்தம் உள்ள 90 இடங்களிலும் நாங்கள் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். லோக்சபா தேர்தலின்போது மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். மொத்தம் 300 இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிடலாம். லோக்சபா தேர்தலில் கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட மாட்டார். மாறாக தேசிய அளவில் பிரசாரம் செய்வார். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும். பிப்ரவரி 15ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியாகும். அதிக மாநிலங்களில் அதிக இடங்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். குறைந்தது 50 இடங்களில் வெற்றி வாய்ப்பை எதிர்பார்க்கிறோம். மக்களிடையே ஆம் ஆத்மி மீதான எதிர்பார்ப்பு இருமடங்காகி உள்ளது; எங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்து வருவதால் சரியான நேரத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இறங்கி உள்ளோம். விஐபி கலாச்சாரத்தை ஒழித்து மக்கள் மீது கவனத்தை செலுத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். இதற்காக 3 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். தேர்தல் பிரசாரத்திற்காகவும் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்த கடந்த ஒரு மாத காலமாக விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டு வருகிறது. ஜனவரி 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றார் அவர்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக