செவ்வாய், 3 டிசம்பர், 2013

ஜெயமோகன் : வினவுவின் அடித்தளம்? ஏன் அத்தனைபேரையுமே அயோக்கியர்கள் மோசடிக்காரர்கள் என்று சொல்கிறார்கள்

அன்புள்ள ஜெமோ
வினவு தளத்தை நான் அடிக்கடி வாசிப்பதுண்டு. அவர்களின் கோபம் எனக்குப்புரிகிறது. ஆனால் அவர்கள் ஏன் அத்தனைபேரையுமே அயோக்கியர்கள் மோசடிக்காரர்கள் என்று சொல்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. அவர்கள் சமூக அநீதிக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் ஏன் இப்படி அத்தனைபேரையுமே எதிரிகளாக ஆக்கிக்கொள்கிறார்கள். என் புரிதலில் ஏதாவது தவறு உண்டா?
செல்வன்
அன்புள்ள செல்வன்,
வினவு தளம் இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான ‘தீவிர’இடதுசாரிக்குழுக்களில் ஒன்றால் நடத்தப்படுவது. இவர்களின் பொதுக்கூறு என்பது ஜனநாயக மறுப்புதான். அதாவது தேர்தல்களில் நின்று வென்று ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதில் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. சமூக அதிகாரம் என்பது வன்முறை மூலம் நிலைநிறுத்தப்படுவது என்றும் ஆகவே வன்முறை மூலமே அதை அகற்றமுடியுமென்றும் நினைக்கிறார்கள்.
மற்றபடி எல்லாமே வழக்கமான மார்க்ஸிய அரசியல்நம்பிக்கைகள்தான். அதாவது மனிதவரலாறு என்பதே மூலதனங்கள் மீதான கட்டுப்பாட்டுக்கான போராட்டத்தால் ஆனது. மூலதனத்தை கைப்பற்றியிருப்பவர்கள் பூர்ஷுவாக்கள். சுரண்டப்படுபவர்கள் பாட்டாளிகள். பாட்டாளிகள் பூர்ஷுவாக்களை வென்று தங்களுக்கான சர்வாதிகார அரசை உருவாக்கி மூலதனத்தை தங்கள் நலனுக்குகந்த முறையில் பயன்படுத்தி தங்களுக்கான பொன்னுலகைப் படைக்கவேண்டும்.
இவர்களின் நடைமுறை என்பது நிராகரிப்புதான்.
இவர்கள் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கும் செயல் என்றால் நிராகரிப்பதற்கான தர்க்கங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பது மட்டுமே.
அந்த நிராகரிப்பின் வரைபடம் இது. முதலில் பூர்ஷுவாக்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். அதாவது இதுவரை ஏதேனும் வகையில் சமூக அதிகாரத்தைக் கையாண்ட அனைவருமே ஒட்டுமொத்தமாக மானுட எதிரிகள். அவர்களின் சிந்தனைகள், கலைகள், அமைப்புகள், ஆசாரங்கள் அனைத்தும் ஒழிக்கப்படவேண்டியவை. எஞ்சியிருப்பவர்கள் பாட்டாளிகள்
பாட்டாளிகளின் தரப்பில் மார்க்ஸிய நோக்குள்ள இடதுசாரிகள் அல்லாதவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள். முதலாளித்துவத்தின் மூளைச்சலவைக்கு ஆளானவர்கள். அவர்களிடையே சிந்தனைகள் செயல்பாடுகள் எல்லாமே நிராகரிக்கப்படுகின்றன.
எஞ்சியவர்கள் இடதுசாரிகள். அவர்களில் தங்களுக்கு உவப்பில்லாத நடைமுறைகளையோ நோக்குகளையோ கொண்டவர்கள் திரிபுவாதிகள், சமரசம் செய்துகொண்டவர்கள், சுயநலமிகள் என நினைக்கிறார்கள். அவர்களை நிராகரிக்கிறார்கள்.
எஞ்சுவது தங்கள் சொந்தக்கட்சி மட்டுமே. அதற்குள் தொடர்ந்து உள்விவாதங்கள் நிகழும். அந்த விவாதங்களில் ஒரு கருத்துநிலைப்பாட்டை எடுப்பவர்கள் பிறரை எதிரிகளாக நினைப்பார்கள், நிராகரிப்பார்கள். ஆகவே காலப்போக்கில் அவர்கள் ஒரு தனிக்கட்சியாக ஆகிவிடுவார்கள். ஆகவே எல்லா நக்சலைட் குழுக்களும் மிகச்சிலர் மட்டுமே உள்ள குறுங்குழுக்களாக மட்டுமே இருக்கும்
இந்தக்குறுங்குழுக்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வேவுபார்ப்பார்கள் . கொள்கைசார்ந்தும் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்தும் சிலரை நிராகரிப்பார்கள். அவர்கள் வெளியேறுவார்கள். வெளியேறியவர்கள் எதிரிகளாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள்.
எஞ்சிய மிகச்சிலரே குறுங்குழுவில் இருப்பார்கள். வெளியேற்றப்பட்டவர்கள் வெளியேற்றப்படும் காலம் வரை சொன்னதையும் செய்ததையும் எல்லாம் இவர்கள் துரோகம், திரிபுவாதம் என்று சொல்லி நிராகரிப்பதனால் தங்கள் கடந்தகாலத்தைத் தொடர்ச்சியாக நிராகரிப்பார்கள்
ஆக எஞ்சுவது சிலர் அங்கே அப்போது நம்பிச் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் மட்டுமே. பிற அனைத்துமே மோசடியானவை, தீங்கானவை, எதிர்த்து ஒழிக்கப்படவேண்டியவை. அவர்களின் ஒட்டுமொத்தச் செயல்பாடே இதைச் சொல்லிக்கொண்டிருப்பதுதான்.
இவ்வளவு சின்ன அளவில் சொல்லப்படும் கருத்துக்களுக்கு எந்தச் சமூக மதிப்பும் இல்லை. தங்கள் தரப்பை இவர்களால் தர்க்கபூர்வமாக முன்வைக்கவும் முடியாது. தங்களை நியாயப்படுத்தவும் முடியாது. ஆகவே அதி உச்ச வெறுப்பு மூலம் அதைச் செய்கிறார்கள். வெறுப்பும் வசையுமே அவர்களின் குரல்களைக் கவனிக்கச்செய்கின்றன. அப்படி ஒருசிலர் கவனித்ததுமே அவர்கள் நிறைவடைந்தும் விடுகிறார்கள்.அவர்களின் ஒட்டுமொத்த அரசியல்நடவடிக்கையே இந்தவசைமழை மட்டுமே
இதன் சிக்கல் என்னவென்றால் இப்படி அயோக்கியர்கள் என்றும் மடையர்கள் என்றும் பிறரை வசைபாடும் இவர்களை பிறர் கவனிப்பதுதான். இவர்கள் சொல்வனவற்றுக்கு இவர்கள் பொறுப்பேற்கிறார்களா, சொந்தவாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தால் இவர்கள் தரப்பின் மதிப்பு இவர்களைக் கவனிக்கும் ஒருசில முதிரா இளைஞர்கள் நடுவே இல்லாமலாகிவிடும்
ஆகவே தங்களை பெரும்பாலும் மறைத்துக்கொள்வார்கள். இவர்கள் யாரென பிறர் அறியமுடியாது. வசைமட்டும் வெளியே வரும். வசைகளில் இன்பக்கிளுகிளுப்படைவது ஒரு மனச்சிக்கல். அவர்கள் இவர்களின் ‘வாடிக்கையாளர்கள்’ இது ஒருவகை உளவியல் சேவைதான்
இவர்களில் இருந்து சிலர் வெளியேற்றப்படும்போதே நமக்குத்தெரியும் இந்த ’தலைமறைவு ஆயுதப்போராளி’களில் கணிசமானவர்கள் அரசூழியர்கள் என. மாநில அளவில் செய்தித் தொடர்புத்துறை உயரதிகாரியாக இருந்துகொண்டு இத்தகைய குறுங்குழுவின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்கள் இருக்கிறார்கள். வேளாண்மை அதிகாரிகள் வங்கி அதிகாரிகள் இவர்களின் தலைமைப்பொறுப்பில் இருந்திருக்கிறார்கள்
இந்தக்குழுக்களை வெறும் வேடிக்கைகள் என நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல. பெரும் நிதியாதாரம் இவர்களுக்குண்டு. இடதுசாரித் தொழிற்சங்கங்களை அவதூறு செய்வதற்காக முதலாளிகளிடம் நிதிபெறுபவர்கள் உண்டு. பல்வேறு காரணங்களுக்காக அன்னிய நிதிபெறுபவர்கள் உண்டு
இவர்களில் பலகாலங்களில் வெளியே செல்பவர்கள் பெரும்பாலும் ‘தன்னார்வக்குழு’க்களை அமைத்து பெரும்பணம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் தொழிலதிபர்கள்கூட ஆகியிருக்கிறார்கள்
ஜெ jeyamohan.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக