சனி, 14 டிசம்பர், 2013

Jeyamohan: ஒருதலைராகம்! தமிழ் சினிமாவின் புதிய அலையை திறந்த ராபர்ட் ராஜசேகர் !அதை மூழ்கடித்த ராஜேந்தர்


1980-இல் நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருதலைராகம் படம் வெளிவந்தது. மிகச்சில திரைப்படங்களே அதற்கிணையான பெரும் அலையை கிளப்புகின்றன. தமிழ்த்திரையுலகில் ஒருதலைராகத்தின் எழுச்சி என்பது தொடங்கிய அக்கணத்திலேயே முடிந்துபோன ஒன்று. யோசித்துப்பார்த்தால் மிகமிக வருத்தமூட்டும் ஒரு தோல்வி அது. அதை ஓர் வரலாற்றுப்புலத்தில் வைத்துத்தான் பார்க்கவேண்டும்.
1955 இல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி இந்தியாவில் கலைப்பட இயக்கத்தை ஆரம்பித்துவைத்தது. [கலைப்படம் என்ற சொல்லாட்சியை பின்னாளில் மாற்றுத்திரைப்படம் என்று மாற்றிக்கொண்டார்கள். ஆனால் எனக்கு முதல் சொல்லில்தான் அவ்வியக்கத்தின் நோக்கம் தெளிவாக உள்ளது என்று படுகிறது] அதன்பின் இந்தியாவில் வங்கம், இந்தி,மராத்தி, கன்னடம், மலையாள மொழிகளில் அவ்வியக்கம் இருபத்தைந்தாண்டுக்காலம் நீடித்து இந்தியா பெருமைகொள்ளும் படைப்புகளை அளித்தது.
இந்திய திரைவரலாற்றில் சத்யஜித் ரே முதல் ரிதுபர்ணோ கோஷ் வரையிலான வங்காள திரைமேதைகளின் இடம் மிகமுக்கியமானது. நாம் இந்திய சினிமா என உலகை நோக்கி முன்வைக்கவேண்டிய படைப்புகளை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.

மலையாளத்தின் முதல் கலைப்படம் என அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1972இல் வெளிவந்த சுயம்வரம் குறிப்பிடப்படுகிறது. 1975இல் பி.வி.காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமனதுடி கன்னடத்தின் முதல் கலைப்படம். கன்னட கலைப்பட இயக்கம் கிரீஷ் காசரவள்ளியுடன் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது. மலையாளக்கலைப்பட இயக்கம் எழுபதுகளின் வேகத்துடன் இல்லை என்றாலும் இன்றும் ஆக்கபூர்வமாகவே உள்ளது.
ஒப்புநோக்க தமிழில் கலைப்பட இயக்கம் முன்னதாகவே ஆரம்பித்தது என்றாலும் தொடங்கிய புள்ளியிலேயே நின்றுவிட்டது என்பதே வரலாறு. இங்குள்ள அரசும் , ஊடகங்களும், பிற கலாச்சார அமைப்புகளும் குறைந்தபட்ச ஊக்கத்தைக்கூட அவ்வியக்கத்துக்கு அளிக்கவில்லை. வணிகசினிமாவின் சக்திகள் அதை வேரோடு அழிக்க எல்லா ஆற்றலையும் செலவிடவும் செய்தன.
http://www.youtube.com/watch?v=xeTbf7tU3B0&feature=player_detailpage
[ஸ்வயம்வரம்]
எழுபதுகளின் இறுதியில் அனைத்து இந்தியத்திரைப்படங்களிலும் ஒருவகை இந்திய ‘புதிய அலை’ நிகழ ஆரம்பித்தது. மலையாளத்தில் பரதன், மோகன்,ஐ.வி.சசி, போன்ற புதிய இயக்குநர்கள் ; பத்மராஜன், ஜான் பால் போன்ற புதிய எழுத்தாளர்கள் உருவாகி வந்தனர். கன்னடத்தில் அனந்த் நாக், சங்கர்நாக் ,பி.வி.காரந்த், கிரீஷ் கர்னாட், பி லங்கேஷ் போன்றவர்கள் உருவானார்கள்.
புதிய அலை இயக்கம் கலைப்பட இயக்கத்தில் இருந்து வேறுபட்ட ஒன்று. கலைப்படம் என்பது தேர்ந்த ரசிகர்களுக்காக மட்டும் உருவாக்கப்படுவது. பொழுதுபோக்கு அம்சங்கள் அறவே இல்லாதது. அரசியல் பண்பாட்டு விமர்சனங்களும் தத்துவத்தேடல்களும் கொண்டது. புதியஅலை இயக்கம் வணிகசினிமாவுக்குள் நிகழ்ந்த ஒன்று. கலைப்பட இயக்கத்தின் எதிரொலி வணிக சினிமாவில் எழுந்ததே புதியஅலை என்று சொல்லலாம்.
புதிய அலையின் இயல்புகள் என்னென்ன? அது அன்றைய இளையதலைமுறையின் உணர்ச்சிகளை நேரடியாகப் பிரதிபலித்தது. அன்றைய சினிமாவில் அதிகம் பேசப்படாத ஒழுக்கம் சார்ந்த அறம்சார்ந்த கருக்களை கையாண்டது. அவை அன்று அதிர்ச்சியையும் பரபரப்பையும் உருவாக்கின.மிக யதார்த்தமான நடிப்பையும் கதையோட்டத்தையும் முன்வைத்தது.அதற்காக புதிய நடிகர்களின் ஒரு வரிசையை அது உருவாக்கியது. மலையாளத்தில் கோபி,நெடுமுடி,திலகன் ; கன்னடத்தில் சங்கர் நாக் ,அனந்தநாக் போன்றவர்கள் அவ்வலையின் சிருஷ்டிகள்.
தமிழில் எழுபதுகளில் அந்த புதியஅலை நிகழவேயில்லை. அந்த அலையை சாத்தியமாக்கியிருக்கக்கூடிய ஒரு சினிமா அன்று வந்தது, பாபு நந்தங்கோடின் ‘தாகம்’. அது திரையரங்கில் வெளியாகவேயில்லை. திரைப்படக்கல்லூரிக்கு வெளியே அதை எவரும் பார்த்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி இன்று ஆய்வாளர்கள்கூட எழுதுவதில்லை.
இந்தப்பின்புலத்தில்தான் ஒருதலைராகம் முக்கியத்துவம் பெறுகிறது. அது தமிழின் முதல் புதியஅலை படம். அது இளைஞர்களின் தனிமையையும் ஏக்கத்தையும் காதலையும் அதையொட்டிய பண்பாட்டுச்சிக்கல்களையும் பேசியது. புதுமுக நடிகர்களின் மிகமிக யுதார்த்தமான நடிப்பும், வழக்கத்துக்கு மாறான காட்சிக்கோணங்களும் கொண்டிருந்தது. அக்காரணத்தால் அன்று இளைஞர் நடுவே ஒரு பெரிய அலையை அது உருவாக்கியது.
ஒருவருடத்துக்கும் மேலாக திரையரங்குகளில் இருந்த ஒருதலைராகத்தை திரும்பத்திரும்ப இளைஞர்கள் பார்த்தனர். நானே இருபது தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறேன். அதில் நினைவில் நின்றவற்றை இன்று யோசித்துப்பார்த்தால் ஆச்சரியம் ஏற்படுகிறது. ‘எச்சில் துப்பினியா, எச்சம் விழுந்ததை பாத்தியா?’ ‘எல்லார் பேரையும் சொன்னீங்க, என் பேரை விட்டுட்டீங்க’ போன்ற சாதாரண வசனங்கள்.
அன்றைய சிவாஜி எம்.ஜிஆர் சினிமாக்களில் வசனங்களும் நடிப்பும் காட்சியமைப்பும் எல்லாம் ஒரேபாணியில் நாடகத்தனமாக இருக்கும். ஒருதலைராகம் சட்டென்று ஒரு வாசலைத் திறந்துவிட்டது. இந்தியாவின் நவசினிமாவை நோக்கித்திறக்கும் வாசல்
ஆனால் அந்த அலை நீடிக்கவில்லை. ஒருதலைராகம் ஒரு கூட்டுமுயற்சி. அதன் உருவாக்கத்தில் முதன்மைப்பங்கு வகித்தவர்கள் ராபர்ட்-ராஜசேகர் இருவரும்தான். ஒளிப்பதிவாளர்களான அவர்களே அதன் காட்சியமைப்பை தீர்மானித்தார்கள். ஆனால் போஸ்டர்களில் இயக்கம் இ.எம்.இப்ராகீம் என்றிருந்தது. அவர் அப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே.
ராபர்ட் ராஜசேகர் இருவரும் சென்னை அடையாறு திரைப்படக்கல்லூரி மாணவர்கள். அன்றைய திரைப்படக்கல்லூரிகள் வளர்ந்துவந்த கலைப்பட இயக்கத்தின் நாற்றங்கால்களாக இருந்தன. ராபர்ட் ராஜசேகர் இருவரும் புதிய சினிமாவின் திரைமொழியை இந்திய கலைப்பட இயக்கத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். அதை ஒருதலைராகம் வழியாக தமிழுக்கு அளித்தனர்
ஒருதலைராகத்தின் கதை டி.ராஜேந்தருடையது. பாடல்களின் சில மெட்டுக்களும் அவருடையவை. அதன் அன்றைய போஸ்டர்களில் இசை ராஜேந்தர்-ஏ.ஏ.ராஜ் என்றுதான் இருந்தது. ஆனால் திரைப்படம் வெளிவந்து பெருவெற்றி அடைந்ததும் டி.ராஜேந்தர் அவருக்கே உரிய அலட்டலான பேச்சுகள் மூலம் அந்தப்படம் மொத்தமாகவே தன்னுடையது என்று சொல்ல ஆரம்பித்தார்.அந்தக்கூட்டணி அப்படத்துடன் முடிவுக்கு வந்தது
ராபர்ட் ராஜசேகர் இருவரும் தனியாக ஏழு படங்கள் செய்திருக்கிறார்கள். அவற்றில் பாலைவனச்சோலை மட்டுமே முக்கியமானது. ஒருதலைராகத்தின் திரைமொழியைக் கொண்ட ஒரேபடம் அதுதான். ராபர்ட் ராஜசேகர் இருவரும் அதன்பின் தமிழ்சினிமாவின் வணிகவெற்றிக்காக சமரசங்கள் செய்துகொண்டு எடுத்தபடங்களெல்லாமே தோல்வியடைந்தன.ஏனென்றால் அவர்கள் அந்த சமரசத் திரை மொழிக்குள் மானசீகமாகச் செல்லமுடியவில்லை. மெல்ல அவர்கள் பின்னடைந்தனர். ராஜசேகர் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து இன்று தொலைக்காட்சி நடிகராக இருக்கிறார்.
டி.ராஜேந்தர் தனியாக வந்து தொடர்ந்து பல படங்கள் எடுத்தார்.அவையனைத்துமே ஒருதலைராகத்துக்கும் அவருக்கும் பெரிய சம்பந்தமேதும் இல்லை என்பதற்கான சான்றுகளாகவே உள்ளன. ஒருதலைராகத்தின் திரைமொழியோ யதார்த்தமான நடிப்போ இயல்பான கதைக்கருவோ டி.ராஜேந்தரால் கற்பனைகூட செய்யமுடியாதவை என்பதைக் காணலாம்.
ஒருதலைராகத்தில் இருந்த வணிகரீதியான அம்சங்களை மட்டுமே முன்னெடுத்தார் டி.ராஜேந்தர். அவற்றை தமிழ் வணிகசினிமாவின் எல்லா தேவைகளுக்குள்ளும் கொண்டுவந்து இணைத்து ஒரு தனித்த போக்கை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றார். அது தமிழில் ‘காதல்பாடகனை’நாயகனாகக் கொண்ட படங்களுக்கு வழியமைத்தது. இருபதாண்டுக்காலம் சலிக்கச்சலிக்க தமிழை ஆக்ரமித்திருந்தது. தொடரும் !jeyamohan.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக