ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தெலங்கானா மசோதா: எதிர்த்து வாக்களிக்க சீமாந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள் முடிவு?

புரந்தேஸ்வரி& நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க சீமாந்திரப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசுகையில் இதனை மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றதையடுத்து, அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்த வரைவு மசோதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்த்து வாக்களிப்பு?: இந்நிலையில், ஆந்திர மாநில பிரிவினை தொடர்பாக மத்திய அரசு உருவாக்கியுள்ள ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2013-க்கு எதிராக வாக்களிக்க சீமாந்திரப் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக ஹைதராபாதில் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் புரந்தேஸ்வரி, சீமாந்திரப் பகுதி மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதா 2013-க்கு எதிராக சீமாந்திர பகுதி காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் வாக்களிக்க நேரிடும் என்றார்.
ஆந்திரப் பிரிவினைக்கு முன்பாக, சீமாந்திரப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருமாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஹைதராபாதை ஏற்படுத்துவது, ஆந்திர முதல்வரை அவமதிப்பது போலாகும் என்று குறிப்பிட்டதுடன், பொது தலைநகரான ஹைதராபாதில் இருந்து கொண்டு, ஆந்திர மாநிலத்தை அவர் எப்படி ஆட்சி செய்வார்? என்றும் புரந்தேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு வேண்டுகோள்: இந்நிலையில், ஆந்திர பிரிவினை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, அந்த மாநில அரசியல் கட்சியினருக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த வேண்டுகோளை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்தார்.
மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது, " பிரிவினை என்பது மிக மிக வேதனையானதாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மிகவும் அபாயகரமான அறிவிப்புளை வெளியிட வேண்டாம். ஆந்திரப் பிரிவினைக்கு மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கடைசி நம்பிக்கை: அதேசமயம், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் காவூரி சாம்பசிவ ராவ், ஆந்திரத்தை பிரிப்பது என்பது மிகவும் தவறான நடவடிக்கை என்று குற்றம்சாட்டினார். ஆந்திர மக்களின் கருத்துகளுக்கு எதிராக மாநிலத்தை மத்திய அரசு பிரிக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆந்திர பிரிவினை நடவடிக்கையை மத்திய அரசு கைவிட்டுவிடும் என்ற நம்பிக்கை தற்போதும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருந்தால், கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமை பகுதியை சேர்ந்த அனைத்து மத்திய அமைச்சர்களும், எம்.பி.க்களும் ஒன்றிணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என்றும் காவூரி சாம்பசிவ ராவ் கூறினார்.
மசோதாவை தோற்கடிப்போம்
ஆந்திர சட்டப்பேரவையில், மாநில பிரிவினை தொடர்பான மசோதா தோற்கடிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயவாடாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது அவர் கூறியதாவது:
ஆந்திர சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்போது, அதனை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம். அந்த மசோதாவை, நாடாளுமன்றம் எப்படி நிறைவேற்றுகிறது என்று நாங்கள் பார்க்கிறோம். டி.ஆர்.எஸ். கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கோரிக்கையை ஏற்று மாநிலத்தை பிரிக்க நினைத்தாலோ, அல்லது ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவைப் பெற விரும்பினாலோ, முதலில் அவர்களை காங்கிரஸ் கட்சியில் சேருங்கள். பின்னர் அவர்களை முதல்வர்கள் ஆக்குங்கள்.
ஐக்கிய ஆந்திர கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அதனை தில்லியில் உள்ள பெரிய மனிதர்கள் கண்டு கொள்ளவில்லை.
1972ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஆந்திரப் பிரிவினையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையோ அதனைப் புறக்கணிக்கிறது. இந்த முடிவை எப்படி அவர்கள் எடுத்தார்கள்? அரசியல் ஆதாயத்துக்காக சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆலோசனைகளை கேட்டு காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. சீமாந்திரப் பகுதி காங்கிரஸ் தலைவர்களை கலந்து ஆலோசிப்பதில்லை என்றார் கிரண் குமார் ரெட்டி     தினகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக