ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அதிரடி ! பா.ஜ.க வெற்றி முகம் காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி

டெல்லியில் காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி: ஆம் ஆத்மி யால் கடும் இழப்புஇந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்சி அமைப்பதை பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே எப்போதும் கவுரவமாக கருதுகின்றன. யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி 1993–ம் ஆண்டு மாநில அந்தஸ்தைப் பெற்றது. இதையடுத்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.
டெல்லி மாநிலத்தின் முதல் முதல்–மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகம் பிரகாஷ் பொறுப்பு ஏற்றார். இதையடுத்து 1993 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் குரானா, வர்மா, சுஷ்மா சுவராஜ் என 3 பேர் முதல்–மந்திரி பதவியை வகித்தனர்.
இதனால் டெல்லி மக்களிடம் பா.ஜ.க. மீது அதிருப்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1998–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்–மந்திரியாக ஷீலா தீட்சித் பதவி ஏற்றார்.

2003 மற்றும் 2008–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் ஷீலா தீட்சித் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இது டெல்லி மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருப்பதை உறுதிபடுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாதபடி இருந்தது.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது அலை, அலையாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவை காங்கிரஸ் மீது எதிர்ப்பு அலைகளை உண்டாக்கியது.
இந்த ஊழல்களை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டு வரக் கோரி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் டெல்லி மக்களை தட்டி எழுப்புவதாக இருந்தன. பல்லாயிரக்கணக்கான டெல்லி மக்கள் திரண்டு வந்து அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதும், அத்தியா வசியப் பொருட்கள் விலைவாசி உயர்ந்ததும் டெல்லி காங்கிரஸ் அரசு மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி எனும் புதிய கட்சியை சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். இவர் அன்னா ஹசாரேயின் வலது கரமாக திகழ்ந்தவர் என்பதால் டெல்லி மக்கள் இவர் தொடங்கிய புதிய கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தனர்.
ஆம் ஆத்மி கட்சிக்கு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி, அள்ளி கொடுத்தனர். இதனால் தைரியம் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டசபையின் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.
விளக்குமாறு சின்னத்தை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 70 தொகுதிகளிலும் முகாமிட்டு பிரசாரம் செய்தார். அவருக்கு மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. இந்த எழுச்சி பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் எந்த கட்சியை அதிகம் பாதிக்கும் என்று கணிக்க முடியாதபடி இருந்தது.
கருத்து கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு அதிக இடம் கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு 2–வது இடம் கிடைக்கும். காங்கிரஸ் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்று கூறின. இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது அது சரியாக இருந்தது.
இன்று பகல் 11.30 மணிக்கு 70 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்த போது, பா.ஜ.க. 34 தொகுதிகளில் வெற்றி முகத்துடன் ஆட்சி அமைப்பதை உறுதி செய்து விட்டது. இதன் மூலம் டெல்லியில் காங்கிரசிடம் இருந்த 15 ஆண்டு கால ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. இந்த புதிய கட்சியின் அபரிதமான திடீர் எழுச்சி, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியைக் கொடுத்துள்ளது.
கடந்த தேர்தலில் 43 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை 7 இடமே கிடைக்கும் என்ற பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில காங்கிரசுக்கு இத்தகைய மோசமான படுதோல்வி ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை.
காங்கிரஸ் கட்சி இந்த தடவை 36 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. இதில் 27 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும், 9 தொகுதிகளை பா.ஜ.க.வும் கைப்பற்றியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலனவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இப்படி ஒரு மோசமான, சம்மட்டி அடியான படுதோல்வியை தலைநகரில் மக்கள் பரிசாக தருவார்கள் என்று சோனியா உள்பட யாருமே எதிர்பார்க்க வில்லை. ஆம் ஆத்மியின் விளக்குமாறு காங்கிரசை துவைத்து தூரப் போட்டு விட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக