புதுடெல்லி,
உலகமும், நேரமும் மாறி வருவதைப் புரிந்து கொண்டு, பெண் தூதர் தேவயானி
விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று இந்தியா
பதிலடி கொடுத்துள்ளது.அமெரிக்கா பிடிவாதம்
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணி புரிந்த தேவயானி கோப்ர கடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு போலீசாரால் அவமரியாதையாக நடத்தப்பட்டார். தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள பெண் தூதர் தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், இந்தியா வற்புறுத்தி வருகிறது.
அமெரிக்காவை பணிய வைக்கும் வகையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. ஆனால், இந்த பிரச்சினையில் சம்பிரதாயப்படி வருத்தம் மட்டுமே தெரிவித்த அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்க மறுப்பதுடன் வழக்குகளை வாபஸ் பெறவும் பிடிவாதமாக மறுத்து வருகிறது. அத்துடன் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தியும், அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
நிபந்தனையற்ற மன்னிப்பு
இந்த நிலையில், நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத், தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா தெளிவான, முழுமையான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று பதிலடி கொடுத்தார். அவர் மேலும் கூறியதாவது–
‘‘சம்பிரதாயமான சமாளிப்புகளை ஏற்க முடியாது. அவர்கள் (அமெரிக்கா) முழுமையான மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தியாவுக்கு எதிரான இதுபோன்ற நடத்தையை அனுமதிக்க முடியாது. உலகம் மாறி வருகிறது. காலம் மாறி வருகிறது. இந்தியா மாறி வருகிறது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும்
தேவயானி கைது விவகாரத்தில் அமெரிக்க அரசு நடந்து கொண்ட விதத்தை, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டும். வெறுமனே வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. தாங்கள் தவறு செய்ததை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்’’.
இவ்வாறு கமல்நாத் கூறினார்.
இந்தியா நம்பிக்கை
இதற்கிடையில், வழக்குகளை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்து வந்தாலும் இந்த விவகாரத்தில் சுமுகமான தீர்வு ஏற்படும் என்று, வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
‘‘இந்தியா–அமெரிக்கா இடையே மதிப்பு மிக்க நல்லுறவு இருந்து வருவதை நன்கு உணர்ந்து இருக்கிறேன். அரசுகள் மட்டும் அன்றி தனி நபர்களும், அமைப்புகளும் ஏராளமான அளவுக்கு முதலீடு செய்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நல்லுறவை பேணுவது அவசியம். அதேபோல் அவர்களும் இதே அளவுக்கு கவனமாக இருப்பார்கள் என்று கருதுகிறேன் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக’’ அவர் தெரிவித்தார்.
அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை
தேவயானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற அமெரிக்கா மறுத்தது பற்றி கருத்து தெரிவிக்க சல்மான்குர்ஷித் மறுத்துவிட்டார். பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது–
‘‘அமெரிக்க வெளியுறவு மந்திரி கெர்ரியுடன் இந்த விவகாரம் குறித்து பேசுவது எனது கடமையாகும். அதே நேரத்தில் கீழ் மட்ட அளவில் வெளியுறவு துறை ரீதியிலும் தொடர்பு கொள்ளப்பட்டு வருகின்றது. இரு தரப்பிலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
வெளிப்படை – விவேகம்
அமெரிக்க வெளியுறவு மந்திரி கெர்ரி, புதன்கிழமை இரவு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் தொடர்பு கொண்டு பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்திய தூதரின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் காப்பாற்ற என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் இந்திய அரசால் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில், வழக்கு நிலவரம் குறித்து யாராவது கூறிய கருத்துக்கு நான் பதில் சொல்வதாக இருந்தால் அது நன்றாக இருக் காது. தேவையற்றது என்றும் கருதுகிறேன். அதே நேரத்தில் பேச்சுவார்த்தையின்போது முன்னேற்றம் ஏற்பட்டால் நிச்சயம் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவேன்.
ராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியை வெளிப்படையாக மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றின் சில அம்சங்களில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்வரை நாம் விவேகத்தை கடைப்பிடிக்க வேண்டும்’’.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.
பா.ஜனதா வற்புறுத்தல்
தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதாவும் வற்புறுத்தி உள்ளது.
அது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘ஒவ்வொரு விவகாரத்திலும் இந்தியா அமெரிக்காவை ஆதரித்து வந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம், சில்லறை வர்த்தகத்தில் அன்னி நேரடி முதலீடு. என ஒவ்வொரு பிரச்சினையிலும் இந்தியா அமெரிக்காவிடம் வளைந்து கொடுப்பது தொடர்கதையாக மாறி விட்டது. அதுபோன்ற ஒரு அரசிடம் (இந்தியா) அமெரிக்கா அடிபணியுமா என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்’’ என்று அவர் கூறி இருக்கிறார்.dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக