செவ்வாய், 31 டிசம்பர், 2013

பாகிஸ்தான் உதவியுடன் அணுகுண்டு வீசி சூரத் நகரை அழிக்க சதி தீவிரவாதி யாசின் பத்கல் பகீர் வாக்குமூலம் ! பாகிஸ்தானில் எது வேண்டுமானாலும் கிடைக்கும்!

டெல்லி:பாகிஸ்தான் உதவியுடன் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணுகுண்டு வீசி அழிக்க இந்தியன் முஜாகிதீன் திட்டமிட்டிருந்ததாக அந்த அமைப்பின் தலைவர் யாசின் பக்தல் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்தர் ஆலயத்தில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுகள் வெடித்தன. இதில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நேபாள எல்லையில் பொக்ரா என்ற இடத்தில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் அகமது ஜரார் சித்திபப்பா என்கிற யாசின் பக்தலை தேசிய புலனாய்வு துறை  அதிகாரிகள் கைது செய்தனர்.
அதன்பின், யாசின் பத்கலிடம் தேசிய புலனாய்வு துறை (என்ஐஏ), ஐபி உள்பட பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் யாசினை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை பக்தல் தெரிவித்து வருகிறார். அதில் குஜராத் மாநிலம் சூரத் நகரை அணு குண்டு வீசி தகர்க்க திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அதிகாரிகளிடம் பக்தல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது:

பாகிஸ்தானை சேர்ந்த ரியாஸ் பக்தல் என்பவர் யாசின் பக்தலுக்கு பாஸ் ஆக செயல்பட்டுள்ளார். சூரத் நகரை தாக்க சிறிய அளவிலான அணு குண்டு கிடைக்குமா என ரியாசிடம் யாசின் கேட்டுள்ளார். அதற்கு, பாகிஸ்தானில் எது வேண்டுமானாலும் கிடைக்கும் என ரியாஸ் பதில் அளித்துள்ளார். அணு குண்டு தாக்குதலை நடத்தலாம் என ரியாஸ் நம்பிக்கை அளித்துள்ளார். சூரத் நகரை தாக்க ஒரு அணுகுண்டு தயார் செய்யுங்கள் என ரியாசிடம் யாசின் கூறியுள்ளார்.

அணு குண்டு வெடித்தால் ஏராளமான முஸ்லிம்களும் இறக்க நேரிடும் என ரியாஸ¢ எச்சரித்துள்ளார். எனினும், நகரை விட்டு வெளியேறுமாறு முஸ்லிம்களுக்கு ரகசியமாக எச்சரிக்கலாம் என்றும் யாசின் யோசனை தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறுவதற்குள் போலீசிடம் யாசின் சிக்கி கொண்டார். அதனால் இந்த சதி திட்டம் நிறைவேறாமல் முறியடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனை நடத்தியது. அணு ஆயுதங்களையும் தயாரித்து வைத்துள்ளது. அல் கய்தா, தலிபான் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் எச்சரித்தன. அதற்கேற்ப பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதீர் கான் சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சையில் சிக்கினார். அணு சக்தி ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், இவருடைய நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி உள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
அதன்பின், அப்துல் காதீர் கான் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டார். அதன்பின் விடுவிக்கப்பட்டார். தீவிரவாதிகளின் கைகளில் அணு ஆயுதம் சிக்க வாய்ப்புள்ளது என்று பல நாடுகள் அச்சம் தெரிவித்து வரும் நிலையில், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பத்கல் வாக்குமூலம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். -tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக