சனி, 28 டிசம்பர், 2013

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது

பெரம்பலூர்:முதன்முறையாக இலங்கை அகதிகளுக்கு இந்திய நாட்டின் குடிமகனுக்கான ஆதார் அடையாளஅட்டை வழங்கப்படுகிறது. இதற்காக பெரம்பலூர் நகராட்சியில் அகதிகளுக்கு புகைப் படம் எடுக்கும்பணி தொடங்கியது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 1983க்கு பிறகு பல்வேறு கட்டங்களில் அங்கு சொத்து, சொந்தங்களை இழந்து உயிர் பிழைக்க அகதிகளாக தாய் தமிழகத்துக்கு வந்தனர். இவர்கள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
 பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே உள்ள முகாமில் 84குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பஅட்டையோ, இந்திய நாட்டின் வாக்காளர் அடையாள அட்டையோ இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கென சிறப்பு ஒதுக் கீட்டில் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொதுவிநியோகத்திட்ட உணவுப் பொருட் கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றன.


இதுவரை எந்தத் தேர்தல்களிலும் இவர்கள் வாக்களித்தது கிடையாது. இந்நிலையில் முதன்முறையாக இந்திய குடிமகனுக்கான ஆதார் அடையாள அட்டையினைப் பெறுவதற்கான புகைப்படம் இவர்களுக்கு பெரம்பலூர் நகராட்சியில் எடுக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் நகராட்சியின் 8வதுவார்டில் தங்கி யுள்ள இவர்களுக்கு நேற்று பழைய நகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றுவரும் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியில் கைரேகைகள், கண்விழித்திரைகள் பதிவுசெய்யப்பட்டு, புகைப்படம் எடுக்கப் பட்டு, ரசீதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர் ஸ்வின் என்பவர் தெரிவிக்கையில், இந்தியக் குடியுரிமை கேட்டு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தோம். அதேநேரம் இலங்கையில் எங்கள் குடியுரிமை பறிக்கப்பட்டுவிடாமல் இரட்டைக் குடியுரிமை இருந்தால், தனித்தமிழ் ஈழம் மலரும் போது நாடுதிரும்ப ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றார்.
tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக